COFFEE TABLEகுடிமகன்களுக்கு அட்வைஸ்
ஹேங்ஓவர் தொடர்பாக குடிமகன்களிடம் ஏகப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. ‘‘அது நம்பிக்கை அல்ல... மூடநம்பிக்கை...’’ என்று அடித்துச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இந்தியாவில் உள்ள பார்களில் சைடுடிஷ்ஷாக வித்தியாசமான பண்டங்களைப் பரிமாறுவார்கள். இதேபோல் வெளிநாடுகளில் குடிப்பதற்கு முன் ஒரு கப் பால் மற்றும் குடிக்கும்போது ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொள்வார்கள்.

‘‘இவையெல்லாம் ஏமாற்று வேலை...’’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘நாம் மது அருந்தும்போது ஆல்கஹாலில் 20%தான் வயிற்றுக்குள் போகிறது. மீதமுள்ள 80% நம் குடல்களில்தான் தங்கும்...’’ என்கிற நிபுணர்கள், ‘‘அளவோடு, மெதுவாக குடித்தல், குடிக்கும்போதே உணவை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் தண்ணீரை அருந்துதல் போன்றவற்றால் மட்டுமே   இந்தப் பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம்...’’ என்ற தீர்வையும் வழங்குகிறார்கள்.

இமயத்தில் அமலாபால்!
இந்தப் புத்தாண்டை இமயமலையில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அமலாபால். ‘‘என் மீது அன்பும் அக்கறையும் காட்டி வரும் அனைவருக்கும் நன்றி. போன வருசம் ரொம்ப சிறப்பா இருந்துச்சு. இந்தப் புத்தாண்டை பனி படர்ந்த, எனக்கு ரொம்ப பிடித்தமான இமயமலைச் சூழலில் கொண்டாடுறேன். இந்த ஆண்டும் பிரைட்ஃபுல்லா அமைஞ்சிருக்கு...’’ என்று தனது புத்தாண்டு வாழ்த்தை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு சிலிர்த்திருக்கிறார்.

எப்.எம் ஸ்பீக்கர்
‘அளவில் சிறியது. சத்தத்தில் பெரியது’ என்ற வாசகத்துடன் ‘SC-HT18’ என்ற ஸ்பீக்கரை ‘பேனாசோனிக்’ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. எப்.எம் ரேடியோ ரசிகர்களுக்காக  தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான ஸ்பீக்கர் இது. பொதுவாக எல்லா ஸ்பீக்கர் மாடல்களிலும் எப்.எம்., ஆப்ஷன் இருக்கும். ஆனால், அது சரியாக வேலை செய்யாது. ‘இதில் ரேடியோவுக்காக தனி செயலி ஆண்டனா இருப்பதால் எந்தப் பிரச்னையும் இருக்காது’ என்று உத்தரவாதம் அளிக்கின்றனர். இதுபோக பென்டிரைவ் மூலமாக MP3 பாடல்களையும் இதில் கேட்கலாம். சுவரில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் ரிமோட் மூலமாக இயங்குகிறது. அமேசான் இணையதளத்தில் இதன் விலை ரூ.2920.

மினியேச்சர் விமானங்கள்!
எந்த நாட்டு விமானமாக இருந்தாலும் சரி, அதை அப்படியே அச்சு அசலாக பிளைவுட் மற்றும் காகித அட்டையில் உருவாக்கி அசத்துகிறார் ரமி. மட்டுமல்ல, அந்த விமானத்தை பறக்கவிட்டு வியக்க வைக்கிறார். சமீபத்தில் அவர் ‘குவான்டாஸ்’ ஏர்வேஸின் ‘போயிங் 737’ ரக விமானம் ஒன்றின் மாதிரியை செய்முறை விளக்கத்துடன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை ஃபேஸ்புக்கின் ‘Blunt Kommunity’ பக்கத்தினர் ‘No passengers allowed please’ என்ற தலைப்பில் பகிர, 15 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

சமையல் கலைஞர்!
பொதுவாக காய்கறிகளை நறுக்கவும், கோழியைத் துண்டு துண்டாக வெட்டவும், கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பிய்க்கவும் கத்தி போன்ற சமையல் உபகரணங்களைத்தான் மக்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், லண்டனில் வசிக்கும் இந்த இளம் பெண் வாயை மட்டுமே உபயோகப்படுத்துகிறார். உதாரணத்துக்கு கேரட்டை ஒரு நிமிடத்தில் பல துண்டுகளாகக் கடித்து பொரியலுக்குத் தயார்படுத்துகிறார். தனது விநோதமான சமையல் நுட்பத்தை வீடியோவாக்கி யூடிப்பில் பதிவிட 20 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கி விட்டனர். ‘‘நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை என்றால் மட்டும் இந்த வீடியோவைப் பாருங்கள்...’’ என்ற எச்சரிக்கை கமெண்டுகள்தான் அதிகமாகக் குவிகின்றன.

- குங்குமம் டீம்