குளு குளு இந்தியத் தீவுகள்!



பனி படர்ந்த மலைத்தொடர்கள், பச்சைப் பசேல் காடுகள், வெளிர்நீலக் கடற்கரைகள், நாவாய் நிறை துறைமுகங்கள், வானுயர் மாடமாளிகைகள் என விதவிதமான திணை நிலங்களில் திரியப் பிரியப்படும் ஊர்சுற்றியா நீங்கள்? எனில், இந்த ஸ்டோரி உங்களுக்கு ஜாக்பாட். வா வா என உங்களை வசீகரிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்திய நிலப்பகுதிகள் சில இதோ உங்களுக்காக...

ஹோப் தீவு
சீமாந்திராவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து 45 நிமிடப் பயணத்தில் வங்காள விரிகுடாவின் ஆசை அரவணைப்பிலுள்ள ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான ஹோப் தீவை அடையலாம். கோதாவரி ஆற்றின் பாய்ச்சலில் உருவான மணல் மேடுகளால் எழும்பிய 200 வயசு தீவு இது. 500 மீட்டர் நீளத்தில் 60 அடி ஆழத்தில் கடல் அலைகள் தாக்காதபடி படகுகளை நிறுத்துமிடம் பக்காவான டிசைன். ஹைபிரிட் மாங்குரோவ் காடுகளைக் கொண்டுள்ள தீவுப்பகுதியில் உள்ள புட்ரையா பகலு, சொரலகோண்டு பகலு எனும் இரு குக்கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் கொரிங்கா வனவாழ்வு காப்பகம், உப்படா சாலையில் உள்ள பீச் நீங்கள் நிச்சயம் காணவேண்டிய ஸ்பாட்கள். காக்கிநாடா துறைமுகத்தை சுனாமி, புயல்களிலிருந்து இயற்கையாகக் காக்கும் ஹோப் தீவு, மிகப்பெரிய மாங்குரோவ் காடுகளைக்கொண்டுள்ள தீவுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது.

எப்படிச் செல்வது?
ராஜமுந்திரி ஏர்போர்ட்டிலிருந்து காக்கிநாடாவுக்கு டாக்சி (அ) பஸ் பிடித்து வரலாம். காக்கிநாடா துறைமுகத்திலிருந்து படகு பிடித்தால் ஹோப் தீவு 7 கி.மீ. தொலைவுதான்.

காக்காதுருத்து தீவு
கேரளாவின் கொச்சிக்கு அருகில் வேம்பநாடு ஏரியில் உள்ளது காக்காதுருத்து தீவு. சூரிய உதயம், அஸ்தமனத்தை நெஞ்சில் நிறையும் அமைதியோடு காண்பது பேரானந்தம்; பெரும் பரவசம். ‘நேஷனல் ஜியோகிராபிக்’ இதழ் காக்காதுருத்து ஏரியை Around the world In 24 hours என்ற லிஸ்ட்டில் பிரசுரிக்க, உடனே பிரபலமானது இந்த ஸ்பாட். வஞ்சி எனும் படகில் ஜாலியாகத் துடுப்பு போட்டு காலத்தையே மறக்கலாம்.

செல்வது எப்படி?
கொச்சின் ஏர்போர்ட்டிலிருந்து எரமல்லூர் ஜங்க்‌ஷன் (அ) எர்ணாகுளம் ரயில்நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து கொடும்புரத்தில் இறங்கி படகு ஏறினால் காக்காதுருத்து தீவு பத்தே பத்து நிமிடங்கள்தான்.

காளிஜெய் தீவு
சிலிகா ஏரியில் உள்ள காலிஜெய் தீவு ஒடிஷாவின் மிகப் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட். இங்கு காளி தேவிக்கு எனத் தனிக் கோயில் உள்ளது. 134 டால்பின்கள் உள்ளன. பறவைகளை ரசிப்பவர்களுக்கும் ஏற்ற இடம் இது. வங்காள விரிகுடாவில் கலக்கும் தயா ஆற்றிலிருந்து நீரைப் பெற்று 1,100 கி.மீ பரப்பளவில் ரஷ்யா, மங்கோலியா, தென்கிழக்கு ஆசியா, லடாக், இமாலயம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் 160 வகையான பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகிறது சிலிகா ஏரி. ஏரியைச்சுற்றி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 

எப்படிச் செல்வது?
புவனேஸ்வர் நகரிலிருந்து காளிஜெய் தீவு 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தீவின் அருகிலேயே பாலுகாவன் ரயில் நிலையம் உள்ளது.

தின்னக்காரா தீவு

லட்சத்தீவுகளில் உள்ள தின்னக்காரா தீவு, பங்காரம் தீவுக்கு நேர் எதிராக அமைந்துள்ளது. அகாட்டி நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இந்தத் தீவின் பரப்பு 125.21 ச.கி.மீ. வெண்மணல் கடற்கரையில் ஜாலியாக ஜாகை அமைத்து இயற்கையை ரசிக்கலாம். போரடித்தால் ஸ்கூபா டைவிங்,
ஸ்னோர்கல் போன்ற விளையாட்டுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

எப்படிச் செல்வது?
விமானத்திலிருந்து அகாட்டி நகருக்கு வந்து, அங்கிருந்து படகு பிடித்தால் தின்னக்காரா தீவை 30 நிமிடங்களில் அடையலாம். கொச்சியில் கப்பல் வழியாக அகாட்டி தீவுக்கு வந்து, தின்னக்காராவை அடையலாம்.

ஸ்ரீரங்கப்பட்டினம்

காவிரி நதியால் உருவான ஸ்ரீரங்கப்பட்டினம் தீவின் பரப்பு 7.2 ச.கி.மீ. கி.பி.9ம் நூற்றாண்டிலிருந்து கங்கா, உடையார் உள்ளிட்ட அரசர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த நகரம் ஸ்ரீரங்கப்பட்டினம். இங்குள்ள துறைமுகம் அதன் உறுதியான வலிமைக்காக இன்றும் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளது. துறைமுகம், மஸ்ஜித் இ அலா, தார்யா தவுலத் (திப்பு கோடைக்கால மாளிகை), மைசூர் கேட், கும்பஸ் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்.   

எப்படிச் செல்வது?
பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. ரங்கநாதசுவாமி கோயிலின் பின்புறம் ரயில்வே நிலையமும் உள்ளது. பெங்களூரின் கெம்பகௌடா மற்றும் மைசூர் விமானநிலையம் அருகிலுள்ளது.

உமாநந்தா தீவு

அசாமின் குவகாத்தியில் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் உள்ள தீவு உமாநந்தா. தீவின் டிசைனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் மயில் தீவு. 1694ம் ஆண்டு அகோம் மன்னர் சுபாட்பா ஆணையின் பேரில் இந்தத் தீவில் உள்ள உமாநந்தா கோயில் கட்டப்பட்டது. கோல்டன் லங்கூர் குரங்குகள் அதிகம் வாழும் தீவான உமாநந்தாவில், சிவராத்திரி மிகச் சிறப்பாக விமரிசையாகக் கொண்டாடப்படும் நிகழ்வு.  

எப்படிச் செல்வது?
குவகாத்தியிலிருந்து பஸ் (அ) டாக்சி பிடித்து கச்சேரி மலைகணவாய் போய் அங்கிருந்து படகு பிடித்து உமாநந்தா தீவை அடையலாம்.

லோக்தக் ஏரி    

மணிப்பூரின் லோக்தக் ஏரியில் உள்ள சர்க்கிள் வடிவ தீவுகளுக்கு ‘பும்திஸ்’ என்று பெயர். காலைச் சூரியனின் ஒளியில் மினுமினுக்கும் தங்கா, சென்ட்ரா என்ற மிதக்கும் தீவுகளைக் கொண்ட ஏரியின் பரப்பு 35 கி.மீ. மிதக்கும் தீவுகளைச் சுற்றிலும் சுமார் நான்காயிரம் மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள தக்மு நகருக்கு அருகில் நீர் விளையாட்டுகளுக்கான ஸ்பெஷல் சென்டர் ஒன்று அரசால் நடத்தப்படுகிறது. இங்கு மீன் பிடிக்கும் தொழிலைக் கடந்து டூரிஸ்டுகளுக்கான கைடுகளும் அதிகம். ஏரியில் உள்ள தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ, 40 ச.கி.மீ பரப்பில் அமைந்த உலகின் முதல் மிதக்கும் பூங்கா.

எப்படிச் செல்வது?   
மணிப்பூரின் இம்பாலிலிருந்து 60 கி.மீ. தொலைவில் லோக்தக் ஏரி அமைந்துள்ளது. பஸ் (அ) டாக்சி என்பது பயணிகளின் சாய்ஸ்.           

- ச.அன்பரசு