எதிர்காலத்தில் நோய் வருமா?



செல் ஆய்வில் இது புதுசு!

ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன நோய் வர வாய்ப்புள்ளது என்று கண்டறியும் வசதி இருந்தால் எப்படி இருக்கும்? பகல் கனவு அல்ல பாஸ். நாளை நடக்க இருக்கும் நிஜம். ப்ரிவென்டிவ் மெடிக்கேஷன் எனும் தடுப்பு மருத்துவம் இப்போது நாலு கால் பாய்ச்சலில், இல்லை இல்லை, ஜெட் வேகப் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக, செல் மற்றும் டிஎன்ஏ சார்ந்த ஆய்வுகள் சமீபமாக அதிரிபுதிரியாக இருக்கின்றன. ‘அடுத்த வருஷம் உனக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுதுப்பா; சிகரெட்டை நிப்பாட்டு...’ என்று டாக்டர்கள் தம் நோயாளியின் தலையில் குட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை (அதற்காக, ‘டாக்டர், எனக்கு அடுத்து எப்போ சளி
பிடிக்கும்’ என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் செய்யக் கூடாது)!

இன்போசிஸ் நிறுவனம் கம்ப்யூட்டர் பொட்டி தட்டி சம்பாதித்த காசில் ஊருக்கு உதவட்டுமே என்று விருது கொடுத்து வருகிறது. அறிவியல் துறைகளில் அசத்தலான ஆய்வுகளைச் செய்யும் விஞ்ஞானிகளுக்குத்தான் இந்த விருதுகள் தரப்படுகின்றன. இந்த ஆண்டும் ஆறு பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 22 கேரட் தங்கப் பதக்கத்துடன் 65 லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கிய இந்த விருது பெற்றவர்களில் 43 வயதான யமுனா கிருஷ்ணனும் ஒருவர். நமது சிங்காரச் சென்னையில் பிறந்து, பெண்கள் கிருஸ்துவக் கல்லூரியில் வேதியியல் பட்டம் பெற்றவர்.

பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் ஆய்வு மையத்தில் Fellow E, அதாவது இளநிலை உதவிப் பேராசிரியராக கடமையாற்றும் யமுனா இப்போது,  உயர் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு நானோ டிவைசஸ் மூலம் நோய்க்கூறுகளும் அதன் அறிகுறிகளும் உருவாகும் முன்பே அந்த நோயைக் கண்டறியும் ஒரு சிறப்பான வழிமுறையைக் கண்டறிந்தார். அதை நடைமுறைப்படுத்திக் காட்டியதற்காகத்தான் இந்த விருது.

அதை எப்படிச் செய்தார்?
யமுனாவின் ஆய்வே டிஎன்ஏ லெவலில்தான் என்பதால் அவரின் ஆய்வைப் பார்க்கும் முன் டிஎன்ஏ என்றால் என்னவென்று இரண்டு மார்க் கேள்வியளவு பார்த்துவிடுவோம். உயிர்கள் எல்லாவற்றிலும் இருக்கும் அடிப்படையான மூலக்கூறுதான் டிஎன்ஏ. செல்களின் உள்ளே நெளிந்த ஏணி போன்ற வடிவில் சரங்களாக இவை அமைந்திருக்கும். யானைக்கு யானையே பிறப்பதற்கும், நீங்கள் உங்கள் தந்தையைப் போல இருப்பதற்கும், கத்தரிக்காய் செடியில் கத்தரிக்காய் மட்டுமே காய்ப்பதற்கும் இந்த டிஎன்ஏதான் அடிப்படை. சுருக்கமாகச் சொன்னால் நம் தலைவிதியின் பரு வடிவம் இது.

சரி, இப்போது யமுனாவின் ஆய்வுகளுக்கு வருவோம். நம் உடலில் உள்ள டிஎன்ஏவின் குறிப்பிட்ட பகுதியைக் கத்தரித்து சின்னஞ்சிறு கருவி, அதாவது ஒரு நானோ டிவைஸ் பொருத்தப்பட்டு மீண்டும் ஒட்டவைக்கப்படுகிறது. கருவி என்றதும் ஏதோ பெரிதாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த வாக்கியத்தின் கடைசியில் இருக்கும் முற்றுப்புள்ளியில் 10 பில்லியன் டிவைஸ்களை அடக்கிவிடலாம். அத்தனை தக்கணியூண்டு சமாசாரம் இது. சின்னஞ்சிறிய கம்பி ஒன்று உள்ளது. இதை ராடு என்று மிரட்டலாகச் சொல்கிறார்கள். இதைக்கொண்டு உடலில் ஒளித்துவைத்த நானோ டிவைஸைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள வேதிப் பொருட்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டு, என்ன நோய் எதிர்காலத்தில் வர உள்ளது என கணிக்கப்படுகிறது. சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இது மண்டை காய வைக்கும் ஆய்வு. வீட்டில் ஊசி தொலைந்தாலே கண்டுபிடிப்பதற்குள் பெண்டு நிமிர்ந்துவிடுகிறது. ஊசி முனையில் கோடியில் ஒரு பாகத்தை ஆய்வு செய்வது என்றால் எளிதா என்ன? ஆனால், அதைத்தான் மிகச்சிறப்பாகச் செய்துகாட்டியிருக்கிறார் இந்த ஏஞ்சல். இந்த நானோ டிவைஸ் எப்படி நோய்க்கூறைக் கண்டுபிடிக்கிறது? ஃப்ளோரசன்ட் டிடக்டர் என்னும் வண்ணத்தை நானோ டிவைஸில் தடவி அதை உடலுக்குள் செலுத்துவார்கள்.

செல்களில் லைசோசம் என்று ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஒரு செல்லை உருவாக்குவது, சிதைப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் இந்த லைசோசம்களின் திருவிளையாடல்தான். ஃப்ளோரசன்ட் டிடக்டர்கள் கொண்ட நானோ டிவைஸ்கள் இந்த லைசோசம்களில் உள்ள இரும்பு வேதிப்பொருட்கள் எப்படி உள்ளன என்பதை அது உருவாக்கும் வண்ணக் கலவைகளைக் கொண்டு கணிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் என்ன மாதிரியான பஞ்சாயத்துகள் உடலில் இருக்கிறது என்பதைக் கணிக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட அளவிலான சிவப்பு மற்றும் பச்சை வண்ணக் கலவை உடலில் உள்ள குளோரைடு அளவைக் குறிக்கும்.

நீலம் மற்றும் மஜந்தா எனப்படும் பளீர் வண்ணம் சோடியம் விகிதத்தைக் குறிக்கும். இப்படி குறிப்பிட்ட விகிதத்தில் உள்ள குறிப்பிட்ட இரும்புத்தாதுகள் ஒருவருக்கு என்ன பிரச்னை வரப்போகிறது என்பதைச் சொல்லும் சிக்னல்கள். லைசோசம்கள் 70 வகையான குளறுபடிகளுக்கு ஆட்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதாவது 70 வியாதிகள் என்று தோராயமாகச் சொல்லலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் கோளாறுகளையும், வளர்ச்சி தொடர்பான சிக்கல்களையும், பேச்சுக் குறைபாடுகளையும் இந்த லைசோசம் மாறுபாடுகள் கண்டறிய உதவும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த லைசோசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இது வளர்ந்த நாடுகளின் கணெக்கெடுப்புதான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்தப் பிரச்னை எத்தனை குழந்தைகளுக்கு உள்ளன என்பதைப் பற்றிய போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை. சமீபத்தில் கேரளாவில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லைசோசம் குறைபாடுகள் இருப்பதாக ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் இந்த எண்ணிக்கை சில மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று சொல்லும் நிபுணர்கள், கிட்டத்தட்ட உலக சராசரியில் பாதிக்கும் மேல் நம் நாட்டிலேயே இந்தப் பிரச்னை இருக்கும் என்று கவலை காட்டுகிறார்கள். லைசோசம் குறைபாடு பற்றி உலக அளவில்கூட பெரிய விழிப்புணர்வு இல்லை. சிலவகையான லைசோசம் குறைபாடுகளுக்கு முழுமையான மருத்துவமும் தீர்வும்கூட இல்லை. இந்த இல்லைகள்தான் யமுனாவை சிகாகோவுக்கு பறந்து போய் ஆய்வு செய்யத் தூண்டியிருக்கின்றன. சிகாகோவில் யமுனா ‘எஸ்யா’ என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். சமஸ்கிருதத்தில் ‘எஸ்யா’ என்றால் ‘மருத்துவப் பரிசோதனை’ என்று பொருள்.

தன்னுடைய ஆய்வுகளுக்காக இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ள யமுனா அதற்கான நிதி திரட்டும் வேலையில்தான் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். இன்போசிஸ் கொடுத்துள்ள இந்த விருதுத் தொகை முழுதையும் தன் ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார் இந்த நல்ல மனசுக்காரர். குழந்தைகளுக்கான நியூரோ டீஜெனரேட்டிவ் நோய்கள்- அதாவது நரம்புக் குறைபாடுகள் தொடர்பான ஆய்வுகளுக்கே இப்போது முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதன் வெற்றிகரமான முடிவுகள் மற்ற நோய்கள் தொடர்பாகவும் விரிவடையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

‘‘இந்த ஆய்வின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகுதான் இந்தப் பிரச்னைகளுக்கு மருந்து என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியும். நாம் நோயைக் கண்டறிதல், மருந்துகளை உருவாக்குதல் போன்ற விஷயங்களில் தேடல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் ஒரு நோய் எப்படி உருவாகிறது, வளர்கிறது, வரப்போகிறது என்கிற வழிமுறையைக் கண்டறிய முயல்வது மருந்துகளைக் கண்டறிவதைவிடவும் முக்கியமானது இல்லையா?’’ என்று புன்னகையுடன் கேட்கிறார் இந்த அழகிய ஆய்வாளர்.               

இன்போசிஸ் விஞ்ஞான விருதுகள் 2017
உபீந்தர் சிங் பல்லா: என்.சி.பி.எஸ்ஸில் கம்ப்யூட்டேஷனல் நியூராலஜிஸ்ட்டாகப் பணிபுரிகிறார் பல்லா. மூளை எப்படி விஷயங்களை கிரகிக்கிறது, இயங்குகிறது, கணக்கிடுகிறது என்பது சார்ந்த ஆய்வுகளில் முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக பல்லா இந்த விருதைப் பெற்றிருக்கிறார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இவர், மூளை மேல் கொண்ட காதலால்(!) பெங்களூருக்கு ரயிலேறி வந்தவர்.

அனன்யா ஜகனாரா கபீர்: லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளர். மானுடவியல் பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. காஷ்மீரின் சிற்பம், ஓவியம், இலக்கியம், கைவினைப் பொருட்கள் போன்றவை தொடர்பான ஆய்வுகளுக்காக கவுரவிக்கப்பட்டுள்ளார்.
 
சங்கமித்ரா பந்தோபாத்யாயா: இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர். கணிப்பொறி அல்கோரிதங்களைக் கொண்டு உயிரியல் சார்ந்த தரவுகளை ஆய்வு செய்துவருவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் தொடர்பான புதிய ஜெனட்டிக் மார்க்கர்களை உருவாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

ரிதப்பிரதா முன்ஷி: டாட்டா அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கிரிப்டோகிராபி எனப்படும் சங்கேத எழுத்துகளைப் பற்றிய துறையின் புதிர்களை விடுவிக்கும் பகா எண் கோட்பாடுகள் தொடர்பான ஆய்வுகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

லாரன்ஸ் லியாங்: தில்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர். சமூக அறிவியல் துறை சார்ந்த பங்களிப்பாக இந்த விருது இவருக்கு வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற டிஜிட்டல் மீடியாக்கள், பத்திரிகைகள் மற்றும் பொதுவெளிகளில் காப்புரிமைச் சட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பது தொடர்பான ஆய்வுகளுக்காக இவருக்கு இந்த மரியாதை.