ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரேயொரு ஒரு ரூபாய் நோட்டை வாங்கியிருக்கிறேன்!



- ப்ரியா

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, நாடே டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறி வருகிறது. ரூபாய் நோட்டுகளை பர்ஸில் பார்ப்பதே அரிதாகி வரும் நிலையில் ஒரு மனிதர் ஊர் ஊராகச் சென்று ஒரு ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து வருகிறார்! அவர் அரவிந்த் குமார். கேரளாவைச் சேர்ந்தவர். இதுவரை சுமார் 12,500 ஒரு ரூபாய் நோட்டுகளைச் சேகரித்திருக்கும் இவர், ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘லிம்கா ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார்.

அத்துடன் 2017ம் ஆண்டின் லிம்கா ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், ‘11,111 ஒரு ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்’ என்ற கேப்ஷனுடன் இவரது பெயர் இடம்பெற்றிருக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஆம். உயர்ந்திருக்கிறார். ஏனெனில் இதுவரை லிம்கா ரெக்கார்ட்சில் மட்டுமே இவரது பெயர் நான்கு முறை இடம் பெற்றுள்ளது! “பள்ளிப் பருவத்தில் எல்லோருக்குமே எதையாவது சேகரிக்கும் ஆசை இருக்கும். எனக்கும் இருந்தது. ஆரம்பத்தில் தபால் தலைகளைச் சேகரித்தேன். இந்த நிலையில்தான் அந்த திருப்பம் நிகழ்ந்தது...’’ சஸ்பென்ஸுடன் நிறுத்திய அரவிந்த் குமார், சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கணக்குத் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைத்தது. அதாவது சைபர்! கோபமான கணக்கு வாத்தியார் கண்டபடி என்னைத் திட்டிவிட்டார். அவர் பாடம் நடத்தும் விதம் எனக்குப் புரியவில்லை. அவரிடம் சந்தேகம் கேட்டாலும் அவர் தெளிவாகச் சொல்ல மாட்டார். வீட்டிலும் கணக்கு சொல்லித் தர ஆளில்லை. மற்ற மாணவர்கள் முன், ‘கணக்கு சரியாகச் செய்யவில்லை என்றால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர முடியாது’ என்று சொன்னார். அந்த வார்த்தை மிகவும் பாதித்தது.

கணக்குதான் நம்மை வாழ்க்கையில் முன்னேற்றுமா? அது தெரியாவிட்டால், அதையும் தாண்டி வேறு எதையும் செய்ய முடியாதா? கேள்விகள் எழுந்தன. இந்த சமயத்தில்தான், வாழ்க்கையில் நம்பர் ஒன்னாக வர, நாம் ஏன் ஒரு ரூபாய் நோட்டுகளைச் சேகரிக்கக் கூடாது என்று தோன்றியது. அந்த வயதில் தோன்றிய சிந்தனைதான் என்னை இப்போது நீங்கள் பேட்டி எடுக்கும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது...’’ என்று சிரிக்கும் அரவிந்த் குமார், அடிப்படையில், தான் ரிசர்வ் டைப் என்கிறார். ‘‘பொதுவாக யாரிடமும் பேச மாட்டேன். என்னுடனும் அதிகம் யாரும் பழகியதில்லை.

இதற்குக் காரணம் என் உடல் நிலை. எனக்கு வலிப்பு நோய் பிரச்னை இருந்தது. பள்ளி நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறேன். இதனாலேயே மற்ற மாணவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். பேசவே தயங்குவார்கள். அறிந்தோ அறியாமலோ வந்துவிட்ட இந்தத் தனிமையைப் போக்கவும், என்னை கொஞ்சம் வித்தியாசமாகக் காட்டவும் விரும்பினேன். உண்மையில் வலிப்புப் பிரச்னை நிரந்தரம் கிடையாது. சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமாகலாம். நானும் முற்றிலும் குணமாகிவிட்டேன். 12 வயதில் இந்தப் பிரச்னை சரியானது. பள்ளிப் படிப்பும் வரலாற்றில் டிகிரியும் முடித்தேன். டீச்சிங்கில் டிப்ளமோ படித்தேன்...’’ என்றவர் மேற்படிப்பை தொலைதூரக் கல்விவழிதான் படித்திருக்கிறார்.

‘‘குடும்பச் சூழல் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் தரவில்லை. குடும்பத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டிருந்த நேரம் அது. எனவே பள்ளிப் படிப்பு முடிந்ததுமே வேலைக்குச் சென்றேன். வேலை பார்த்தபடியே படித்தேன். 2006ல் வேலை தேடி சென்னை வந்தேன். ஒரு நிறுவனத்தில் பணியும் கிடைத்தது. ஆனால், போறாத வேளை நான் வேலைக்குச் சேர்ந்த நிறுவனம், சில காரணங்களால் திடீரென்று மூடப்பட்டது. அதில் பணிபுரிந்த அனைவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டோம். திகைத்து அல்லது இடிந்து போய் உட்கார முடியாது. வாழ்ந்தாக வேண்டும். சிரமப்பட்டு வேறு வேலையில் சேர்ந்தேன். நான்கு வருடங்கள் உருண்டோடியது.

சென்னையில் நிறைய கற்றுக்கொண்டேன். பலதரப்பட்ட மனிதர்களைத் தெரிந்து கொண்டேன். கேரளாவில் ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்து பழகிய எனக்கு பரந்து விரிந்த சென்னை யதார்த்தத்தைப் புரிய வைத்தது. தோல்வி ஏற்படும் போதெல்லாம் சோர்ந்து போகாமல் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற பாசிடிவ் எனர்ஜியை சென்னைதான் கற்றுக் கொடுத்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்ததும் சென்னை மாநகரம்தான்...’’ புன்னகைக்கும் அரவிந்த், இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு ரூபாய் சேகரிப்பதை நிறுத்தியிருக்கிறார்.

‘‘சென்னையில் நான்கு வருடங்கள் தங்கி, வேலை பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்தேன். சிறுவயதில் சேகரித்த ஒரு ரூபாய் நோட்டுகள் மனதில் நிழலாடின. என்னிடம் அப்போது முந்நூறு ஒரு ரூபாய் நோட்டுகள் இருந்தன. சென்னையில் உடன் பழகிய நண்பர்கள் ‘இவ்வளவு நோட்டுகளா’ என ஆச்சர்யப்பட்டார்கள். அப்போதுதான் ஏதோ அசாதாரணமான செயலைச் செய்திருக்கிறோம் என்பதே மண்டையில் உறைத்தது! தனியாக அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். வருட வாரியாக இந்தியாவின் பெரும்பாலான நிதியமைச்சர்களின் ஆட்டோகிராஃப் என்னிடம் இருப்பது பளிச்சென்று தெரிந்தது.

அந்த நொடியில், நாம் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையிலான எல்லா ஒரு ரூபாய் நோட்டையும் சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியது. காரணம், ஒரு ரூபாய் நோட்டு மட்டும்தான் இந்திய நிதித்துறை அமைச்சகம், அமைச்சரின் கையெழுத்தோடு வெளியிடுகிறது. மற்ற கரன்ஸிகளை ரிசர்வ் வங்கிதான் புழக்கத்தில் விடுகிறது. எனவே ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துதான் அந்த நோட்டுகளில் இருக்கும்...’’ என்றவர் இதன் பிறகு ஊர் ஊராக ஒரு ரூபாய் நோட்டுகளைத் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறார்.

‘‘தமிழ்நாடு, கேரளா, தில்லி, மும்பை, கொல்கத்தா... என எல்லா இடங்களுக்கும் சென்றேன். என் தேடலுக்கு டெக்னாலஜி கை கொடுத்தது. இணையம் வழியே பலரது அறிமுகம் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி வாசித்தவர்கள் பல பகுதிகளில் இருந்தும் தொடர்பு கொண்டார்கள். தபால்தலை / நாணயம் சேகரிப்பவர்களும் அரிதான கரன்ஸிகளை வைத்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான தபால் தலை / நாணயத்தை எங்கிருந்தாவது தேடி எடுத்துக் கொடுத்து, அவர்களிடம் இருந்த ஒரு ரூபாய் நோட்டை வாங்குவேன்...’’ என்ற அரவிந்த், நிதி அமைச்சர் பூதலிங்கம் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டை பெறுவதற்கு அதிகம் சிரமப்பட்டிருக்கிறார்.

‘‘டீச்சர் வேலை கிடைத்து கேரளாவுக்கு வந்த பிறகுதான் அந்த நோட்டு ஒருவரிடம் இருப்பது பற்றி தெரிந்தது. இதில் என்ன காமெடி என்றால், அந்த நபர் சென்னையில் இருந்தார்! இது தெரியாமல் இந்தியா முழுக்க தேடி அலைந்திருக்கிறேன்! அவர் தபால் தலைகளைச் சேகரிப்பதில் முன்னணியில் இருப்பவர். அவர் எதிர்பார்த்த தபால்தலைகள் என்னிடம் இல்லை. எனவே பெருந்தொகை கொடுத்துதான் அவரிடமிருந்து குறிப்பிட்ட அந்த நோட்டை - நிதியமைச்சர் பூதலிங்கம் கையெழுத்திட்டிருந்த ஒரு ரூபாய் நோட்டை - வாங்கினேன்.

இதுபோல் பலமுறை நடந்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரேயொரு ஒரு ரூபாய் நோட்டை வாங்கியிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!’’ இதைச்  சொல்லும்போது அரவிந்த் குமாரின் குரலில் பெருமிதம்தான் பூரணமாக நிரம்பி வழிகிறது.‘‘அரிய விஷயங்களைச் சேகரிப்பவர்கள் அனைவரும் ஒரு குழுவாக, க்ளப் போல இயங்குவார்கள். எனக்கு இதிலெல்லாம் இணைவதில் ஆர்வமில்லை. பொழுதுபோக்காக ஆரம்பித்தேன். இன்று சாதனையாளராக மதிக்கப்படுகிறேன். தனியாக இருந்தே பழகி விட்டது. தனித்து இதை தொடரவே விரும்புகிறேன்.

என்றாலும் என்னைப் பற்றி கேள்விப்பட்டு இதுபோல் குழுவாக இயங்குபவர்கள் தாங்களாகவே முன்வந்து உதவுகிறார்கள். எங்கு யாரிடம் ஒரு ரூபாய் நோட்டு(கள்) உள்ளது என தகவலைத் தெரிவிக்கிறார்கள். நெகிழ்வாக இருக்கிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என உணருகிறேன்...’’ என்று சொல்லும் அரவிந்த் குமாரிடம் இப்போது, இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் கடந்த ஆண்டு வெளியான ஒரு ரூபாய் நோட்டு வரை அனைத்தும் இருக்கின்றன.