ரிப்பேர் கஃபே!



- ச.அன்பரசு

உங்கள் கைகளிலுள்ள வாட்ச், சுவரிலுள்ள கடிகாரம், மாவு அரைக்கும் கிரைண்டர், பிரேக்கிங் நியூஸ் சொல்லும் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்தையும் பிரச்னை வரும்போது பழுதுபார்க்க கடைக்கு கொண்டு செல்வீர்களா அல்லது புதிதாக வாங்குவீர்களா? இரண்டாவது ஆப்ஷனை செலக்ட் செய்பவர்களே அதிகம். ரிப்பேர் செலவுகள் புதிய பொருளின் விலையருகே வந்தால் வேறு என்ன செய்வது... என பதில்கள் வரலாம். ஆனால், இதுதான் தீர்வே கிடைக்காத சூழல் பிரச்னையாக மாறிவிட்டது என்பதை பலரும் உணர்வதில்லை. இதை கருத்தில் கொண்டுதான் உலகெங்கும் ‘ரிப்பேர் கஃபே’ அமைப்பு கிளை பரப்பி வருகிறது. கூப்பிடும் தொலைவில் இருக்கும் பெங்களூருவுக்கும் இது வந்துவிட்டது.

‘‘முந்தைய தலைமுறை மனிதர்கள் என்ன செய்தார்களோ... செய்வார்களோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம்...’’ என்கிறார் அன்தாரா முகர்ஜி. 2015ம் ஆண்டு பூர்ணா சர்காருடன் இணைந்து ‘ரிப்பேர் கஃபே’ அமைப்பை பெங்களூருவில் தொடங்கினார். தமது 19 பயிற்சி வகுப்பறைகளின் மூலம் ஆயிரத்து 300 கி.கி திடக்கழிவுகள் உருவாகாமல் தடுத்துள்ளது இந்த ரிப்பேர் கஃபே அமைப்பு.

தூய்மையின் தொடக்கம்!
2009ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் சமூக தொழில்முனைவோரான மார்டைன் போஸ்ட்மாவினால் உருவான அமைப்புதான் ரிப்பேர் கஃபே. 2011ம் ஆண்டு ரிப்பேர் கஃபே ஃபவுண்டேஷன், லாபநோக்கற்ற அமைப்பாக மாறி அமெரிக்கா, ஜப்பான் என 33 நாடுகளிலுள்ள ஆயிரத்து 400 கிளைகளின் மூலம் கழிவுகளை ஒழிக்க ஐடியா தீட்டி செயல்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு கணக்குப்படி 2 லட்சத்து 50 ஆயிரம் கி.கி. திடக்கழிவுகளை சேமித்துள்ளது ரிப்பேர் கஃபே. ‘‘ரீயூஸபிள் என்பது உற்பத்தித் துறையைப் போலவே ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்டது...’’ என்கிறார் ஹஜார்ட்ஸ் சூழல் அமைப்பின் நிறுவனரான துனு ராய்.

சூழலைக் காக்கும் தொழில்!
பழுதுபார்க்கும் அவசியமில்லாமல் சல்லீசு ரேட்டில் பொருட்களை வாங்க  முடிவதால் யூஸ் அண்ட் த்ரோ வேகம் உலகெங்கும் டாப் கியரில் பறக்கிறது. இந்நிலையில் ரீயூஸபிள் கான்செப்ட்டை பாசிட்டிவ்வாக பயன்படுத்தும் தொழில்முனைவோர்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘‘பக்கத்துவீட்டுச் சிறுவன், புதிய பொம்மையோடு ஒருவாரம் மட்டுமே விளையாடுவான். பிறகு அதைத் தூக்கியெறிந்து விடுவான். புது பொம்மை வாங்கித் தராவிட்டால் அழுவான். அப்போதுதான் ரென்ட்டில் பொம்மைகளுக்கான லைப்ரரி அமைக்கும் ஐடியா கிடைத்தது...’’ என்கிறார் கிலோன்வாலா நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் ஜெயின்.

புனேவில் மறுபயன்பாட்டுக்கான பழைய துணிகளை விற்கும் கடையை ஆயிஷா மற்றும் மனிஷா சகோதரிகள் நடத்தி வருகின்றனர். ‘‘நாங்கள் பொருளை வாங்கும்போது அது அவசியமா எனக் கேள்வி கேட்டுத்தான் வாங்குகிறோம்...’’ என்கிறார்கள் இந்த தேசாய் சகோதரிகள். தில்லியின் நேரு பிளேஸ், நிஜாமுதீன் பஸ்தி, ஹைதராபாத்தின் சத்தா பஜார் உள்ளிட்ட இடங்கள், பயன்படுத்திய கடிகாரங்கள், ரேடியோக்கள், டெக் கேசட்டுகள் ஆகியவற்றை பழுது பார்ப்பதற்கான ஸ்பெஷல் இடங்கள். இப்போது நகரங்கள் தோராயமாக வெளியேற்றும் 62 மில்லியன் டன் திடக்கழிவில், 31 மில்லியன் டன்கள் நிலத்தில் கொட்டப்படுகின்றன என்கிறது ‘டவுன் டு எர்த்’ இதழின் ஆய்வு முடிவு.

2025ல் கழிவுகளின் அளவு 2.2 பில்லியன் டன்களாக உயரும் என்பது உலகவங்கியின் எச்சரிக்கை.‘‘ஆடைக்குப்பைகளுக்கு உதாரணம் ஆஸ்திரேலியாதான். இந்நாட்டில் ஃபேஷன் துறையின் வருமானம் 12,800 கோடி. இதில் 24% நபர்கள் ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணிவதில்லை. தூக்கியெறிந்து விடுகிறார்கள். மேலும் சேர், வீட்டுப்பொருட்கள், வாகன பாகங்கள் ஆகியவை எல்லாம் இன்று மறுசுழற்சி செய்யமுடியாத ஃபைபர் மற்றும் கண்ணாடிகளால் செய்யப்படுகின்றன. இப்படி சூழலை சிதைக்கும் நாகரிகம் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது...’’ என்கிறார் பேராசிரியர் துனு ராய்.

தீராத லாபவெறி!
ஐபோன் உள்ளிட்ட எந்த போன்களிலும் இனி அவர்களின் அங்கீகாரம் பெற்ற டீலர்கள் தவிர்த்து பிறரிடம் ரிப்பேர் செய்தால் அதனை அப்டேட் செய்யமுடியாது. அந்தளவுக்கு அவர்களின் செட்டிங் டைட். ‘‘வாடிக்கையாளர் தங்கள் நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். எனவே முடிந்தளவு பழைய பொருட்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கிறார்கள்...’’ என்கிறார் ராய்.

ஆனால், அங்கீகாரமற்ற மையத்தில் போனிலுள்ள சாப்ட்வேர்களை உடைத்து தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது என்கிறது நிறுவனங்களின் தரப்பு. ஜான் டீர் ட்ராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் மீது விவசாயிகள் கூட்டமைப்பு, உள்ளூரில் ரிப்பேர் செய்ய அனுமதி தராததற்கு வழக்கு தொடர்ந்துள்ளது. கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது கிடைக்கும் விடை ஒன்றுதான். அது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இ-வேஸ்ட்டுகளைத் தடுத்தே ஆகவேண்டும். இதற்கான ஓர் ஆரம்பம்தான் ‘ரிப்பேர் கஃபே’.

படங்கள்: ஆண்டன் தாஸ்