தெரியாமல் விழுந்த நிலவுஅனைவரையும் ஈர்க்கும்
வனப்புடன் உள்ள‌
வணிக வளாகம் அது
மையமாய் கட்டிடம்
எழும்பிய பின்
போக்குவரத்து 
மூச்சுத் திணறியது
வளாகத்தில்
எங்கெங்கும்
செல்பி 
எடுப்பதைக் காணலாம்
அதை ஏதோ
நேர்த்திக்கடன் போல்
எல்லோரும்
செய்து கொண்டிருந்தனர்
அந்த இளம்
காதலர்களுக்கு
அது வேடிக்கையாகத்
தோன்றியது
அப்போது ஏதோ தோன்ற‌
எடுத்துக்கொண்டனர்
முதன் முதலாய்
ஒரு செல்பி
அவன் பார்த்துச்
சொன்னான்
நம்மோடு மூன்றாவதாக
விழுந்திருக்கும் ஜீவன்
அழகின்
தூய்மையாகத் தெரிகிறாள்
அவள் சுத்தம் செய்வது
நுட்பமாய்
பதிவாகி இருந்தது
அந்தப் பெண்ணோடு
ஒரு படம்
எடுத்துக்கொள்ள
முடிவு செய்தனர்
திரும்பிப் பார்க்க
அவள் இல்லை
புதிர் ஆட்டம்
போலானது
தேடினர்
அவள் எங்கிருக்கிறாள்
தெரியவில்லை
வளாகம் எல்லோர்
செல்லிலும்
பதிவாகிக்
கொண்டிருந்தது
மூன்றாவது தளத்தில்
அவளைக்
கண்டுபிடித்தனர்
அவள் வேலையை
ரசிப்பது போல்
ஜிமிக்கி ஆடியது
இருவரும்
வந்த விஷயத்தைச்
சொல்ல சிரித்தாள்
வெட்கம் தூவிய சிரிப்பு
என்கூட படம்
எடுக்கணுமா
வேணாம் சார்
வேல நேரம்
சூப்ரவைசர்
பாத்தார்னா
சத்தம் போடுவாரு
நாலு வயுத்துக்காக
இங்க குப்ப
கொட்றேன், போங்க‌
சூப்பர்வைசர் சத்தம்
நெருங்கியது
என்ன ஆமைய
முழுங்குன மாதிரி
வேல பாக்கற‌

வேகமா செய்
இவர்களைப் பார்த்து
முறைத்தபடியே
போய் விட்டார்
அவள் பதற்றம்
மறைத்து
வியர்வையைத்
துடைத்தாள்
கண்களால்
விடை பெறுதல்
நிகழ்ந்தது
அவள் தூரிகை
போல அசைந்து
அந்த இடத்தை
சித்திரமாக்கத்
தொடங்கினாள்
ஓரமாய் நின்று
மறுபடியும் செல்பியில்
அவளைப் பார்த்து
மேலும் அருகில்
கொண்டு வந்து
சொன்னான்
தெரியாமல்
விழுந்த நிலவு.

- ராஜா சந்திரசேகர்