மிஷ்கினால் காமெடி ஸ்கிரிப்டும் எழுத முடியும்!சவரக்கத்தி ரகசியங்கள்...

தமிழ் சினிமாவின் தனிக்குரல் மிஷ்கின். அறையில் குவிந்து கிடக்கிற புத்தகங்களின் ஊடே இன்னொரு பெரிய புத்தகம் மாதிரி உட்கார்ந்திருக்கிறார். மக்களின் பார்வைக்காக காத்திருக்கிறது அவரது ‘சவரக்கத்தி’. மிஷ்கினுடனான உரையாடல் எப்போதும் பொருள் மீறி அமையும்.‘‘‘பிசாசு’ முடித்த பிறகு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்த வேளை. திடீரென்று என் அசிஸ்டெண்ட் ஆதித்யா, ‘உங்களால் ஒரு காமெடி ஸ்கிரிப்ட் பண்ண முடியுமா...’னு கேட்டான். அவன் பேச்சில் நகைச்சுவை தெறிக்கும். சீரியஸான விஷயங்களைக் கூட அப்படி எடுத்துக்காமல் கவலையை மறக்க வைப்பான்.

எனக்கு அவன் சொன்னது சின்ன தீப்பொறி வச்ச மாதிரி இருந்தது. எனக்கு பழக்கமான முடி திருத்தும் தொழிலாளியின் சில அம்சங்களை படத்துல சொல்லியிருக்கேன். 15 நிமிஷம் அவரை நம்பி தலையைக் கொடுத்தால் பாலிடிக்ஸ், சுலபமான பொருளாதாரம், அக்கம்பக்கம் வம்பு எல்லாத்தையும் சொல்வார். திடீரென்று ‘இந்த சவரக்கத்தி முதலில் யாருக்கு சவரம் செஞ்சது தெரியுமா..?’னு கேட்பார். யாருன்னு கேட்டால் ‘அக்பர்...’னு பதில் கிடைக்கும். அதற்கான விளக்கத்தைச் சொல்லும்போது நம்புற மாதிரியே இருக்கும்.

ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, நந்தவனத்தில் இருக்கிற கிளியின் கழுத்தில் இருக்கிறது மந்திரவாதியின் உயிர்...’னு சொன்னால் நம்பினோம் இல்லையா, அப்படியே இவரையும் நம்பத் தோணும். படத்தில் இப்படி பொய்களையே உண்மையாக மாற்றிச் சொல்கிற மாதிரி ஒருத்தன், முரடனும் போக்கிரியும் கோபக்காரனுமான என்னிடம் சிக்கிக் கொள்கிறான். சலூன் தொழிலாளியாக என் நண்பன் ராமும், முரடனாக நானும் நடிக்கிறோம். என் ஸ்கிரிப்ட் இவ்வளவு நகைச்சுவை நிரம்பியதான்னு உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும்...’’ கண்களால் புன்னகைக்கிறார் மிஷ்கின்.

ராமிடம் நகைச்சுவையைக் காண முடிஞ்சதா..?
இந்த ஸ்கிரிப்ட் மனதிற்குள் ஓடி எழுதத் தொடங்கிய உடனே ஞாபகத்துக்கு வந்தது ராம்தான். ராம் எப்போதும் சவாலை ஏத்துக்குவான். அருமையாக செய்திருக்கிறான். அவனுக்கு படத்துல ஒரு பிரச்னையைக் கொடுத்திட்டு, அவனுடைய பொய்களால் அதைவிட்டு வெளியே வரமுடியுமான்னு யோசிச்சேன். நான் எழுதும்போதே சில இடங்களில் விழுந்து விழுந்து சிரிச்சேன். ஸ்கிரிப்ட்டை படிச்சவங்களும் சிரிச்சாங்க. என் கேரக்டரை விட அவன் பின்னியிருக்கான். நானே அந்தக் கேரக்டரை முதலில் பண்ண நினைச்சேன்.

இதில் என்னைவிட அருமையாக ராம் பண்ண முடியும்னு நினைச்சது நடந்திருக்கு. மேலும் ராம் எனக்கு ரொம்ப தெரிஞ்சவன். இயல்பாக இருப்பான். அவனுக்கு எப்பவும் பெரிய கௌரவம் தரணும்னு நினைப்பேன். என்ன விஷயம்னா, நல்ல ஹாஸ்யம் நம் மனசை கழுவி சுத்தமாக்கும். ஒவ்வொரு மனிதனும் சிரிக்கும்போது மொத்த உலகமே வெளிச்சமாகுது. அது மாதிரி இது நல்ல காமெடி...

பூர்ணா அருமையா நடிச்சிருக்காங்கன்னு புகழ் மாலை சூட்டியிருக்கீங்க...
ரெண்டு குழந்தைகளுக்கு தாயாக, ஒன்பது மாத கர்ப்பிணியாக நடிக்கணும். காது கேட்காத பொண்ணு வேறே. யார் சரின்னு சொல்வாங்க? கதையைக் கேட்டுட்டு, ‘அருமையாக இருக்கே...’னு சொல்லிட்டு ‘இந்த விஷயங்கள்தான் எங்களுக்கு இடிக்குது...’னு நிறையபேர் போயிட்டாங்க. பூர்ணா சம்மதிச்சதோட தானே டப்பிங் பேசறேன்னு வேறு சொன்னாங்க. ‘ நீ மலையாளப் பொண்ணாச்சே... எப்படி முடியும்?’னு கேட்டேன். அவங்க பத்து நாள் பயிற்சி எடுத்து அழகா தமிழ் பேசி டப்பிங் பண்ணாங்க. அதில் மலையாள வாசனை இல்லை.

உங்க தோற்றம் மிரட்டுது...
இதில் எனக்கு பேச்சுக் குறைவு. பரோலில் வந்திட்டு, திரும்ப ஜெயிலுக்குப் போற நாள். அந்த நாளில் என்னோட பிரச்னைக்குள் வந்து விடுவான் ராம். நான் இதைச் செய்தால்தான் சரியாக இருக்கும். இன்னும் உடம்பை கனக்கப் போட்டு, ஜி.நாகராஜன் மாதிரி ஹேர் ஸ்டைல் வைச்சுக்கிட்டு இறங்கிட்டேன். இந்தப் படத்தில் நான் ஒரு மாங்கா மடையன். அதைத்தான் ‘மங்கா’ன்னு சுருக்கி வைச்சுக்கிட்டேன்.

நிறைய நடிக்க ஆரம்பிச்சிட்டீங்க...
கொஞ்சமாகத்தான் நடிக்கிறேன். ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’னு ஒரு படம். என் கேரக்டர் பிடித்திருந்தது. தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ல நடிக்கிறேன். அவன் பெரிய ஆளுமை. அவன் சினிமாவை பார்க்கிற விதமே ஆச்சர்யமா இருக்கு. சமீபத்தில் 2½ நிமிஷ ஒரே ஷாட் ஒண்ணு எடுத்தான். அங்கே இங்கே சுத்தி விட்டு, பெரும் அலைச்சலோட ஓர் இடத்தில் வந்து நிப்பேன். ரம்யா கிருஷ்ணனும் அங்கே இருப்பாங்க. பெரிய ஷாட். இரண்டு நாள் எடுத்தான். அவன் காட்சியில் திருப்தியடையற வரைக்கும் திருப்தியடைய மாட்டான். ஒரு ஷாட்டையே அவன் அவ்வளவு தீர்க்கமாகப் பார்க்கிறான்.

அவனுக்கு நண்பர்கள் குறைவு. என்னையும் அவன் நண்பனாக ஏத்துக்கிட்டு அருள்பாலிச்சு இருக்கான். அவன் சினிமாவை ரசிக்கிறதை, நாங்க பார்த்து ரசிக்கிறதே பெரிய அனுபவம். நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குழந்தை மாதிரி அவனை பாத்துக்கிறோம். அவனை மாதிரி ஆட்கள் மிகுந்தால் உலக சினிமாவிற்கு தன்னால போயிடலாம். இப்ப கொரிய டைரக்டர்கள் ஹாலிவுட் பக்கம் போயிட்டாங்க. இந்தியாவிற்குள் கொஞ்ச நாளில் தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் கிடைக்கும்னு தோணுது. வெற்றிமாறன், ராம், தியாகராஜன் குமாரராஜா மாதிரியானவர்கள் முயன்றால் அந்த இடத்தை அடைய தடையில்லை. 

- நா.கதிர்வேலன்