Boys back



- யுவகிருஷ்ணா

குடியரசுத் தலைவர், பிரதமரில் தொடங்கி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள், விளையாட்டுத்துறை விஐபிகள் வரை அத்தனை பேரும் மெய்சிலிர்த்து வாழ்த்து மழைகளைப் பொழிந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். Yes.. Boys are back! 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனாக இந்தியா நான்காவது முறையாக மகுடம் சூடியிருக்கிறது. நம்ம பயல்கள் நியூஸிலாந்துக்கு போய் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜாம்பவான்களை புரட்டியெடுத்துவிட்டு கோப்பையோடு திரும்பியிருக்கிறார்கள். இத்தொடரில் ஒரே ஒரு போட்டியில்கூட அவர்கள் தோல்வி காணவில்லை!

1988ல்தான் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முதலாக நடத்தியது. அப்போது ஆஸ்திரேலியா உருவாகி 200 ஆண்டுகள் ஆகியிருந்ததால், அந்த கொண்டாட்டத்தோடு இணைந்து ஆஸ்திரேலியாவிலேயே அப்போட்டி நடந்தது.சாம்பியன்? ஆஸ்திரேலியாதான். ஏனோ, அதன்பிறகு U-19 (under 19) போட்டிகளை திரும்ப நடத்துவதற்கு ஐசிசி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் உலகம் முழுக்க கிரிக்கெட் ஆடும் நாடுகளில் U-19 உலகக் கோப்பையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.

காரணம், அந்த முதல் உலகக் கோப்பை போட்டியில் அசத்திய சனத் ஜெயசூர்யா (இலங்கை), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்), கிறிஸ் கெய்ன்ஸ் (நியூஸிலாந்து), நாசர் உசேன் (இங்கிலாந்து) போன்ற ‘பொடிசுகள்’ வளர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் ‘தாதா’க்களாக உருவெடுத்தார்கள். ஆக, இளைஞர்களின் திறமையை எடைபோட்டு அடையாளம் காண நல்ல களமாக U-19 உலகக் கோப்பை இருப்பதை அனைவரும் புரிந்து கொண்டார்கள். பத்தாண்டுகள் கழித்து 1998ல் மீண்டும் தென்னாப்பிரிக்காவில் U-19 உலகக் கோப்பை நடந்தது.

இதுநாள்வரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ‘பட்டம் வெல்லா விரதம்’ இருந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து -U-19 உலகக் கோப்பையை 1998ல் வென்று திருப்தியடைந்தது. அப்போதுதான் இன்றைய அதிரடி மன்னனும், சிக்ஸர் சுனாமியுமான கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்) அடையாளம் கண்டுகொள்ளப் பட்டார். 1998ல் தொடங்கி 2018 வரை இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. 2000ல் இலங்கையில் நடந்த போட்டிகளில் முகம்மது கைஃப் தலைமையிலான இந்திய இளைஞர் படை முதன்முதலாக கோப்பையைக் கைப்பற்றியது.

அந்த உலகக் கோப்பையின் ஹீரோ வேறு யாருமல்ல, நம்ம யுவராஜ்சிங்தான்! 2002 - ஆஸ்திரேலியா; 2004 & 2006 - பாகிஸ்தான்; 2008 இந்தியா; 2010 ஆஸ்திரேலியா; 2012 இந்தியா; 2014 தென்னாப்பிரிக்கா; 2016 மேற்கிந்தியத் தீவுகள்... என அணிகள் வென்றுள்ளன. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா மூன்று U-19 உலகக் கோப்பைகளை வென்றிருந்த நிலையில் 2018ல் நியூஸிலாந்தில் நடந்து முடிந்திருக்கும் உலகக் கோப்பையை இந்தியா வென்று, உலகிலேயே அதிக U-19 உலகக் கோப்பையை வென்ற அணி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இதுவரை நடந்த 12 உலகக் கோப்பைகளில் 76 போட்டிகளில் விளையாடி 57 போட்டிகளில் வெற்றி, வெறும் 18 போட்டிகளில் மட்டுமே தோல்வியென்று இந்திய இளைஞர்களின் வெற்றிநடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார்கள். இருந்தும் இன்றுவரை ஒரே ஒரு U-19 உலகக் கோப்பை போட்டிகூட இந்தியாவில் நடத்தப்பட்டதில்லை!

பிரவீன் ஆம்ரே, நயன் மோங்கியா, வெங்கடபதி ராஜு, முகம்மது கைஃப், யுவராஜ்சிங், பார்த்திவ் பட்டேல், இர்ஃபான் பதான், ஷிகர் தவான், பியூஸ் சாவ்லா, புஜாரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, இன்றைய இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட U-19 உலகக் கோப்பை நட்சத்திரங்கள்தான் பின்னர் தேசிய அணியிலும் இடம்பிடித்தார்கள்! ஆக, 2018ன் சாம்பியன் அணியின் வழியாகவும் எதிர்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்கள் மின்னத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.


பிரித்வி ஷா:
குட்டி சச்சின் என்கிறார்கள். சச்சினைப் போலவே பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் 14 வயதிலேயே ஒரே போட்டியில் 546 ரன் விளாசி சாதனை படைத்தவர். மும்பை அணிக்காக ரஞ்சி, துலீப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இவர்தான் இப்போதைய U-19 சாம்பியன் அணியின் கேப்டன். நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக தில்லி டேர் டெவில்ஸ் அணி, இவரை ரூ.1.2 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது.

கமலேஷ் நாகர்கோட்டி: ராஜஸ்தான் சுனாமி. 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் பதினெட்டு வயது புயல். கிளாஸ் ஏ கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஹாட்ரிக் சாதனை செய்த ஒரே ராஜஸ்தானி. ஐபிஎல் போட்டிகளுக்காக இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.3.2 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. U-19 அணியிலேயே ஐபிஎல்லுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர் இவர்தான்.

ஷிவம் மாவி: அதிவேக பந்து வீச்சாளர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். சுப்மேன் கில்: பாகிஸ்தானை U-19 உலகக் கோப்பை செமி ஃபைனலில் பந்தாடிய பஞ்சாபி ஹீரோ. அப்போட்டியில் இவர் அடித்த சதம்தான் இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றது. தொடரின் சிறந்த வீரராக இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிக ரன்கள் குவித்தவரும் இவர்தான்.

அபிஷேக் சர்மா: ஆல் ரவுண்டர். இடதுகை சுழற்பந்து வீச்சாளர். விக்கெட்டுகளை குவிப்பதில் வல்லவர். இவரும் பஞ்சாப்தான். இவருடைய அப்பாவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால் ரத்தத்திலேயே கிரிக்கெட் ஊறியிருக்கிறது. ஐபிஎல் போட்டிகளுக்காக இவரை தில்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியிருக்கிறது. இவர்களைத் தவிர இறுதிப் போட்டியில் சதம் விளாசிய தில்லி வீரர் மஞ்சோட் கல்ராவும் குறிப்பிடத்தக்க வீரர். சுப்மேன் கில், பிருத்விஷா என்று இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவை இவர் சேஸிங் செய்ததால்தான் இன்று கோப்பை நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றிக்காக இரண்டு ஆண்டுகள் இரவும், பகலுமாக பாடுபட்டவர் இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்! ஒருவகையில் இதை டிராவிட் வெற்றி என்றும் சொல்லலாம். ஏனெனில் சர்வதேசப் போட்டிகளில் பல சாதனைகளைச் செய்திருக்கும் டிராவிட், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். மூன்று உலகக்கோப்பைகளில் பங்கேற்றிருக்கிறார். அதில் ஒன்றில் இவர்தான் கேப்டன். ஆனாலும் டிராவிட் இருந்தவரை ஒருமுறை கூட இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

அந்தக் குறையை இந்திய U-19 அணியின் பயிற்சியாளராக இருந்து தீர்த்துக் கொண்டிருக்கிறார்! “சாம்பியன் ஆகிவிட்டோம். மகிழ்ச்சி. ஆனால், விளையாட்டு வாழ்வின் கடினமான தருணங்களை இனிமேல்தான் இவர்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள்..!” என்று தன் பாய்ஸுக்கு conditions apply வாழ்த்துகளை தெரிவிக்கிறார் டிராவிட். அனுபவமிக்கவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்!

படம்: கார்த்திக் சீனிவாசன்