ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 63

தனிநபரைப் போற்றுவதோ அல்லது ஒருவரை முன்வைத்து முழக்கங்களை எழுப்புவதோ இடதுசாரிகளுக்கு ஏற்புடையதல்ல. எதையும் கொள்கை அடிப்படையில் அணுகிப் பார்ப்பவர்களே அவர்கள். தனிநபர் சாகசங்களை நம்பியோ, தற்குறித்தனமான வாக்குறுதிகளை வழங்கியோ தங்களை உயர்த்திக்கொள்ள அவர்கள் உத்தேசிப்பதில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற, கற்பனை பிம்பங்களைக் காட்டவோ கட்டியமைக்கவோ எண்ணுவதில்லை. அவர்களைப் பொதுச்சமூகம் எப்படி வேண்டுமானாலும் புரிந்து வைத்திருக்கலாம். அதிகாரத்தைக் கைப்பற்றும் அக்கறையில்லாதவர்கள் என்றோ, பதவிக்கு வரவே லாயக்கில்லாதவர்கள் என்றோ விமர்சிக்கவும் செய்யலாம்.

ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் ஓரத்தில் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்களுக்கு மட்டுமே போராட்ட வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியிருக்கிறது. இலட்சிய வாழ்வின் இலட்சணங்களைப் பெற்றிருக்கும் அவர்களின் தகுதி குறித்தும், திறமை குறித்தும் சந்தேகிக்க இடமே இல்லை. தற்போதைய தமிழ்நில இடதுசாரிகளின் ஒற்றை உதாரணம்,  இரா.நல்லகண்ணு. தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய ஒருவர், கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் கருத்திற்கொண்டு செயல்படுவதில் இடதுசாரிகளுக்கு நிகர் இடதுசாரிகளே. கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படும் அவர்கள் ஒழுக்கம், நேர்மை, எளிமை, சுயசார்பற்ற தன்மை என பல விஷயங்களை எப்படிப்பட்ட இக்கட்டிலும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஒருவகையில் அதுவே அவர்களின் அடையாளம். பணமே பிரதானம் என்றாகிவிட்ட இன்றைய அரசியல் சூழலிலும், உண்டியல் குலுக்கி கட்சிக்கான நிதியைத் திரட்டுபவர்கள் அவர்களே. கார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிவிடத் துடிக்கும் எத்தனையோ கட்சிகளுக்கு மத்தியில், இன்னமும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கற்பிப்பவர்களாக காம்ரேடுகள் மட்டுமே இருக்கிறார்கள். போராடுவதே வாழ்வென்று புரிந்து, அதற்கேற்ப நாட்களை நகர்த்திச் செல்லாமல், வாழ்வையே போராட்டமாக்கிக் கொள்ள அவர்கள் தயங்கியதுமில்லை; தயங்கப் போவதுமில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் ‘கணையாழி’யில் உதவி ஆசிரியனாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.

ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு, இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தை மேம்படுத்த முனைந்திருந்த தருணம் அது. ‘கணையாழி’யில் சேரும்வரை ‘ராஜிரிஷி’ எனும் அரசியல் வார ஏட்டில் செய்திக் கட்டுரைகளை எழுதுபவனாக இருந்தேன். ஒரு கவிஞனாக அரசியல் பத்திரிகையில் என்னுடைய இடமென்பது எனக்கே திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை. என் இயல்புக்கும் தகுதிக்கும் ‘கணையாழி’யே வழியமைத்தது. இலக்கியப் புரிதல்களைத் தீவிரமாக்கிக் கொள்ளவும் என்னை நானே கண்டடைந்து கொள்ளவும் ‘கணையாழி’ செய்த உதவியை காலம் உள்ளளவும் மறப்பதற்கில்லை. மாத இதழ் என்பதால் வேலை அதிகமில்லை.

‘கணையாழி’க்கு வரக்கூடிய கதை, கவிதை, கட்டுரைகளை வாசித்து, பிரசுரத்திற்கு ஏற்புடையதைத் தேர்ந்தெடுக்கும் பணியே என்னுடையது. தேர்ந்தெடுத்த படைப்புகளை ‘கணையாழி’யின் ஆலோசனைக் குழுவிலிருக்கும் ஒருவரிடமோ இருவரிடமோ காட்டி ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட படைப்புகளை வடிவமைத்து, மெய்ப்புத் திருத்தி அச்சுக்கு அனுப்புவதோடு என் வேலை முடிந்துவிடும். அதன்பின், அதை சந்தாதாரர்களுக்கும் கடைகளுக்கும் விநியோகிக்கும் பொறுப்பை மேலாளர் விஸ்வநாதன் கவனித்துக் கொள்வார். விஸ்வநாதன், ‘சுபமங்களா’வில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவ்வப்போது ‘சுபமங்களா’வின் ஆசிரியராயிருந்த கோமல் சுவாமிநாதன் பற்றியும் இன்னபிற படைப்பாளர்கள் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டதைத் தனிப் புத்தகமாக எழுதலாம்.

படைப்பாளர்களின் மனதையும் குணத்தையும் அறிந்து வைத்திருந்த விஸ்வநாதன், மாதத்தின் இறுதி நாட்களில் மட்டுமே அலுவலகம் வருவார். மெய்ப்புத் திருத்தும் பணியில் எனக்கு உதவியாயிருந்த சேது அலுவலகம் வருவதில்லை. அலுவலகப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த குமாரும் நானும் மட்டுமே தினசரி ‘கணையாழி’ இருக்கையில் அமர்ந்திருப்போம். முதலிரு மாதங்களிலேயே ‘கணையாழி’யின் வேலைத் தன்மை விளங்கிவிட்டது. எந்தத் தேதிவரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிலிருந்து எதுவரை வடிவமைப்பு, மெய்ப்புத்திருத்த எத்தனை நாள், அச்சகப் பணிக்கான அவகாசம் எவ்வளவு என எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. தலையங்கமும் கடைசிப் பக்கமும் வந்துவிட்டால் இதழ் தயாராகிவிடும். எழுத்தாளர் சுஜாதா கடைசிப் பக்கத்தை எழுதிவந்தார்.

திரைப்படங்களுக்குக் கதை வசனமும், வெகுசன இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதிவந்த அவர், அத்தனை பரபரப்பிலும் ‘கணையாழி’க்கு எழுதுவதைப் பிரத்யேகமாக வைத்திருந்தார். ‘கணையாழி’ அலுவலகத்திற்கு அருகில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லம்’ அமைந்திருந்தது. அங்கிருந்து வெளிவந்த ‘தாமரை’ இதழை அண்ணன் கவிதாபாரதி கவனித்துவந்தார். இடதுசாரி பத்திரிகையான ‘தாமரை’யும், வலதுசாரி சிந்தனைகளை அனுமதித்த ‘கணையாழி’யும் அருகருகே இருந்தாலும், அவை இரண்டும் தத்தமது நிலைகளிலிருந்து இடம்பெயர எண்ணியதில்லை.

இரண்டு பத்திரிகைகளுக்கும் முகப்பைத் தயாரித்துத் தருபவராக ஓவியர் மருது இருந்துவந்தார். நானும் கவிதாபாரதியும் ஒரே வாகனத்தில் கிளம்பிப்போய் ‘கணையாழி’க்கும், ‘தாமரை’க்கும் மருது வரைந்து வைத்திருக்கும் முகப்பு அட்டைகளை வாங்கி வந்திருக்கிறோம். என் கவிதைகள் ‘தாமரை’யிலும், கவிதாபாரதியின் கவிதைகள் ‘கணையாழி’லும் பிரசுரமாகியுள்ளன. ஒத்த கருத்துடைய இரண்டு பேரும் பணி நிமித்தம் வெவ்வேறு பத்திரிகைகளைக் கவனிக்க நேர்ந்தது. இரண்டுபேரும் இணைந்தே செயலாற்றிய அக்காலங்களில், அன்பையும் நட்பையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக ‘பாலன் இல்லம்’ இருந்தது. எங்களுக்கு எழும் இலக்கிய மற்றும் அரசியல் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவராக தோழர் நல்லகண்ணு இருந்தார்.

தமிழக அரசியலில் நேர்மைக்கும் தூய்மைக்கும் உதாரணமாகக் காட்ட, நல்லகண்ணுவைத் தவிர ஒருவருமில்லை. என் வாழ்வில் அற்புதமான தரிசனங்களையும் தருணங்களையும் கொண்ட நாட்கள் அவை. இலக்கியமென்பது நுகர்வல்ல. அரசியலென்று அறிந்துகொள்ள, காலம் வழங்கிய சந்தர்ப்பம் என்றே அந்நாட்களைக் கருதுகிறேன். ‘கணையாழி’யில் வேலை செய்கிறேன் என்பதைவிட, நல்லகண்ணுவை தினமும் சந்தித்து உரையாடுகிறேன் என்பதே மகிழ்வைக் கொடுத்தது. அப்போது ‘போத்தியம்மன்’ என்னும் தலைப்பில் என்னுடைய கவிதை ஒன்று ‘தாமரை’யில் வெளிவந்திருந்தது. அதைப் படித்திருந்த நல்லகண்ணு, “நெல்லைச் சீமையிலுள்ள சிறுதெய்வம் குறித்து, தஞ்சை மாவட்டத்து ஆசாமியான உங்களுக்கு எப்படித் தெரியும்..?” எனக் கேட்டார்.

இடதுசாரிகள் கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்கள். ஆனாலும், நல்லகண்ணு சிறுதெய்வங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தது திகைப்பூட்டியது. அந்த சந்திப்பில் அவர், ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தார். சில பக்கங்கள் மட்டுமே ‘விஷ்ணுபுர’த்தை வாசித்திருந்த என்னிடம், ‘‘முழுதாக நாவலை வாசித்ததும் சொல்லுங்கள். விவாதிக்கலாம்...” என்றார். என் வயதையோ வாசிப்பையோ முக்கியமாகக் கருதாமல், என்னுடன் விவாதிக்க விரும்பிய அவர், அதன்பின் எத்தனையோ நாவல்கள் குறித்தும் உலக இலக்கியங்கள் குறித்தும் விவாதித்திருக்கிறார். விவாதமென்றால் இரண்டுபேரால் நடத்தப்படுவது. உண்மையில், அவருடன் நான் எதையுமே விவாதித்ததில்லை. தவிர, அவருடன் விவாதிக்கும் அளவுக்கான அறிவை அப்போது நான் பெற்றிருக்கவில்லை.

எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே அவருடன் பேசியிருக்கிறேன். என் பேச்சில் தவறிருந்தால் அவர் திருத்துவார். ஒரு விஷயத்தை அவர் சொல்லத் தொடங்கினால் அதில் விவாதிக்கவே ஒன்றுமிருக்காது. அத்தனை தெளிவுடனும் அத்தனை சிரத்தையுடனும் அதை அவரே விளக்கிவிடுவார். விவாதிக்கவே தேவையில்லாதபடி பேசும் முறையே அவருடையது. எளிய உவமைகளால் வரலாற்றையும் இலக்கியத்தையும் புரியவைக்கும் சாமர்த்தியம் அவரிடம் உண்டு.‘‘எது மக்களுக்கானதாக அமைகிறதோ அதுவே இலக்கியமென்றும், மக்கள் இலக்கியத்தை நோக்கி நகர்வதே படைப்பாளிகளின் தகுதியென்றும்...’’ அவர் சொல்லாமல் இருந்திருந்தால், நானுமே செளந்தர்ய உபாசகர்களின் சங்கத்தில் சங்கமித்திருப்பேன்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாலும் அவர் இன்று கொண்டாடப்படுவதற்கு அதுவே காரணம். யாரையும் நேசத்துடன் ஏந்திக்கொள்ளும் அவருடைய புன்னகையில், களங்கமோ கறைகளோ இருந்ததில்லை. தெளிந்த நீரோடையின் மேல் நின்று பார்க்கையில், உருண்டோடும் கூழாங்கற்கள் தெரிவதுபோல, நிதானத்துடன் அவர் உதிர்க்கும் சொற்களில் காரல்மார்க்ஸும் ஜீவானந்தமும் கண்முன்னே தெரிவார்கள். உடலாலும் மனதாலும் தியாகத் தழும்புகளைத் தாங்கிய அவர், சுதந்திர இந்தியக் கனவுகளுடன் பொதுவாழ்வுக்கு வந்தவர். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தேச விடுதலைக்கு உழைக்க வேண்டுமெனும் உறுதியைப் பெற்றிருக்கிறார்.

தேசபக்தி நூல்களில் ஈடுபாடு காட்டிவந்த அவருக்கு, மார்க்சிய நூல்களை அறிமுகப்படுத்தியவர் அவருடைய இந்தி ஆசிரியர் சு.பலவேசம் செட்டியார். அவரே, நல்லகண்ணுவின் அனைத்திந்தியப் பற்றை அகில உலகப் பற்றாக மாற்றியவர். ‘கலைத் தொண்டர் கழகம்’ என்னும் பெயரில் சமூக, கலை, இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த நல்லகண்ணுவை, பொதுவுடமை சிந்தனைக்கு உந்தித் தள்ளியதில் புத்தகங்கள் பெரும் பங்காற்றியுள்ளன நூல்களின் வாயிலாக இடதுசாரிப் பற்றாளராக மாறிய நல்லகண்ணு, கல்லூரிக் காலங்களில் இடதுசாரித் தலைவர்களுடன் பழகியிருக்கிறார்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்