கன்ட்ரோல் ரூமில் என்ன நடக்கிறது?



தில்லியை முன்வைத்து ஓர் இந்திய வரைபடம்

நாம் பெருமைப்படும் அதிநவீன காஸ்மோபொலிட்டன் நகரங்களில் ஒளிவீசும் இரவுகளில்தான் பல்வேறு க்ரைம்கள் நடக்கின்றன. திருட்டு, கொள்ளை, பாலியல் வல்லுறவு, குடும்ப வன்முறை ஆகியவை இந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றன. தலைநகரான தில்லியில் இதன் சதவிகிதம் மிக அதிகம். இந்நிலையில் குற்றங்களின் அளவைக் கணிசமாகக் குறைப்பதில் போலீஸ் கன்ட்ரோல் ரூம் செயல்பாடுகள் இன்றியமையாதவை. விதிவிலக்கான சில சம்பவங்களைத் தவிர்த்து 100 என்ற எண்ணை அழுத்தினால் ஆம்புலன்ஸ், உள்ளூர் வட்டார போலீஸ், தீயணைப்புத்துறை, ஏன்- ‘பராக்கிரம்’ எனும் ஸ்பெஷல் தீவிரவாத எதிர்ப்பு படையைக் கூட உதவிக்கு அழைக்கமுடியும்.

2016ம் ஆண்டில் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சரான சிவசங்கர் பிரசாத், 112 என்ற எமர்ஜென்சி எண்ணை நாடெங்கும் அறிமுகப்படுத்தினார். இப்போது 100 என்பது இந்தியாவில் போலீஸ் உதவிக்கான ஸ்பெஷல் நம்பர். ஆனாலும் 100 என்ற லைனிலேயே அனைத்து வித புகார்களும் க்யூ கட்டுகின்றன. ‘‘ஹலோ... சார்... என் அம்மாவை அப்பா கடுமையாக அடிச்சிக்கிட்டிருக்காரு. ரத்தம் நிறைய போயிருச்சு. எப்படியாவது காப்பாத்துங்க ப்ளீஸ்...’’பெண்ணின் அழுகுரல் ஹெட்போனையும் தாண்டிக் கேட்க... கிடுகிடுவென அட்ரஸை கணினியில் உள்ள ஃபார்மில் நிரப்பி உள்ளூர் போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் பெண்களுக்கான உதவிக் குழுவுக்கும் அலர்ட் அனுப்புகிறார் பணியாளரான அனு.

தில்லி கன்ட்ரோல் ரூம், 1250 ச.கி.மீ. தூரத்திற்கு செயல்படும் திறன் கொண்ட 776 பிசிஆர் வேன்களைக் கொண்டுள்ளது. கடந்தாண்டில் செப்டம்பர் மாத அழைப்புகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டும். சராசரியாக தினசரி 35 ஆயிரம் அழைப்புகள். ஒரு நிமிடத்திற்கு 24 கால்கள். நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறதா? மூன்று ஷிப்ட்களாக 24 மணிநேரமும் இயங்கும் கால்சென்டரில் பெண்களுக்கான இணைப்பு (1091), காணாமல் போனவர்களுக்கான இணைப்பு (1094), வடகிழக்கு மாநிலங்களுக்கான எண் (1093) என மொத்தம் 50 ஆபரேட்டர்கள் தில்லி கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகின்றனர்.

எப்படி செயல்படுகிறார்கள்?
‘‘கால்சென்டரில் தினசரி பேசியதால், செல்போனில் என் வீட்டிலிருந்து கூப்பிட்டால் கூட ‘வணக்கம், உங்களுக்கு என்ன உதவி வேண்டும்’ என்று பழக்கதோஷத்தில் கேட்டுவிடுகிறேன். சிலசமயங்களில் கனவில் கூட உதவிக்குரல்கள் கேட்கின்றன...’’ என்கிறார் அனு. உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணிக்கு சேர்ந்தவர். யூனிஃபார்மில் மக்களுக்கு உதவலாம் என்னும் லட்சியமே இப்பணியில் அனுவை இணைய வைத்தது. ஆனால், மக்களின் ஆபத்துக் குரல்களையும் அழுகையையும் கேட்க பெண்கள் பலரும் விரும்புவதில்லை என்பதே நிஜம்.

முதலில் வெளியிலிருந்து வரும் புகார்தாரரின் பெயர், முகவரியை கம்ப்யூட்டரில் பதிவு செய்பவர்கள்; ஹை, மீடியம், லோ என புகாரின் தன்மையை ஃபார்மில் டிக் செய்கிறார்கள். கொலை, கொள்ளை, தாக்குதல், ஆட்கடத்தல், கலவரம் ஆகியவை ஹை பிரிவில் அடங்கும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு, போக்குவரத்து போலீஸ், தேசிய பேரிடர் குழு என முன்னுரிமை கொடுத்து உதவிக்கு வரச் சொல்லலாம். கால்சென்டரை நிர்வகிக்க RAX எனும் ஆறுபேர் கொண்ட குழு செயல்படுகிறது. அட்ரஸை ரீப்ளே செய்து முகவரிகளை சரிபார்ப்பது, புகார்களை உடனடியாக போலீசாரின் ஹாம் ரேடியோவுக்கு அனுப்புவது இவர்களின் பணி.

இதன் மேல்மாடியில் டிஸ்பேட்ச் ரூம் உள்ளது. கால்சென்டரில் பெறப்படும் புகார்கள் வரிசைப்படுத்தப்பட்டு புகார்களின் முன்னுரிமைக்கு பல்வேறு நிறமிடப்பட்டு டிஜிட்டலாகவும், பதிவேடுகளிலும் பதிவு செய்யப்படுகின்றன. அடுத்து, புகார்கள் வந்த ஏரியாவுக்கு பிசிஆர் வேன்களை அனுப்பும் பணி தொடங்குகிறது. இப்போது புகார் தருபவர்களை ஜிபிஎஸ் வசதி மூலம் கண்டறியும் பணிகள் தொடங்கிவிட்டன. முன்னர் வேன்கள் உள்ள ஏரியாவை தனது அனுபவ ஞானத்தால் கண்டுபிடித்து அவர்களை அழைத்து புகார்களைக் கூறி அனுப்புவது பெரிய சவாலாக இருந்தது.‘‘மாவட்ட நிர்வாகம், உள்ளூர் போலீஸ், கட்டுப்பாட்டு அறை என மூன்று இடங்களிலும் புகார்கள் பதிவு செய்யப்படுவதால் அவை கவனிக்கப்படாமல் போக வாய்ப்பே இல்லை...’’ என்கிறார் கட்டுப்பாட்டு அறையின் தொலைத்தொடர்பு அதிகாரியான தேவேந்தர் ஆர்யா.

அன்லிமிட்டெட் குற்றங்கள்!
முதலில் வந்த போன்காலின் முகவரிக்குச் சென்ற பிசிஆர் வேன், சம்பவ இடத்தில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணின் அம்மாவைக் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து, கொலைமுயற்சி செய்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துவிட்டனர். ‘‘பொதுவாக எங்களுக்கு குடும்ப வன்முறை புகார்களே அதிகம் வருகின்றன. மற்றபடி குண்டுவெடிப்பு மிரட்டல்கள், குடிகாரர்களின் சீண்டல் அழைப்புகள் என நேரத்துக்கு நேரம் இவை மாறுபடும்...’’ என்கிறார் அனு. ‘பணியில் சேர்ந்ததும் வந்த நைட்ஷிப்டில் நீங்கள் அட்டண்ட் செய்த முதல் அழைப்பைப் பற்றி கூறுங்கள்’ என்றதும் அனு படபடப்பாகிறார்.

அழைப்பில் வந்த பெண், கணவர் தன்னை அடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரது அலறல் அதிகரித்து கால் கட்டாகிறது. பின் தொடர்பு கொண்ட அப்பெண்ணின் கணவர், ‘என் மனைவியைக் கொன்றுவிட்டேன்’ என போனில் சிம்பிளாக சொல்லியிருக்கிறார். ‘‘முதலில் இதுபோன்ற செய்தி களைக் கேட்டபோது பதட்டமாகி வியர்த்துக் கொட்டி பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். இப்போது மெல்ல உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு உடனடியாக உதவ கற்றுக் கொண்டு வருகிறேன்...’’ என்கிறார் அனு.

இவருக்கு இப்படியென்றால், அரியானாவைச் சேர்ந்த ரேணு, தில்ஷாத் கார்டனின் தீவிபத்தில் பலியானவர்களைப் பார்த்து மன அழுத்தம் அதிகரித்து வேலைக்கு லீவ் போட்டுவிட்டாராம். புகார்தாரர் சொல்லும் லேண்ட்மார்க்குகளை வைத்தே ஏரியாவைக் கண்டுபிடிக்கும் சீனியர் இவர். 24 மணிநேர கால்சென்டர் பணியில் சாலை விபத்துகள், கொள்ளை, சடலம் மீட்பு (அதிகாலை 4 - 8), சாலை விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி (காலை 8 - மாலை 4 மணி), மீண்டும் சாலை விபத்துகள் (மாலை 6 - இரவு 9), இரவு பதினொரு மணிக்கு குடிகாரர்களின் புகார்கள்... என தினசரி நகர்கிறது. நூறு அழைப்புகளில் குடும்ப வன்முறை அழைப்புகளின் அளவு மட்டுமே 50 சதவிகிதம்.                     

பிரச்னைகளும் உண்டு!
கால்சென்டரின் வழியே பதிவாகும் புகார்களில், வழக்கை காவலர்கள் பதிவு செய்ய மறுப்பது குறித்தும் தெளிவாக புகார் அளிப்பதால், அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பது எளிதாகிறது. ஆனால், இங்கு சில சிக்கல்களும் உண்டு. ‘‘எங்களுக்கு வரும் ஒரு அலர்ட்டை சரி செய்ய முயற்சிப்பதற்குள் பல அலர்ட்டுகள் வந்து குவிந்து விடுகின்றன, நிமிடத்துக்கு ஆறு என்ற அடிப்படையில். இதில் எதை முதலில் தேர்ந்தெடுப்பது?’’ என  எதார்த்தமாக பேசுகிறார் துணை ஆய்வாளரான கன்வார் பால். இதில் மிகச்சிரமமானது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சிதான். ‘‘ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட ஸ்பாட்டிற்கு வரும்முன்பே நாங்கள் பிசிஆர் வாகனத்தில் அங்கு சென்று விடுவோம்.

எனவே ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வோம்...’’ என்கிறார் தலைமை காவலரான அசோக். இவை எல்லாமே சில தெறிப்புகள்தான். உண்மையில் கன்ட்ரோல் ரூம்களின் பணி மகத்தானது. தில்லியை முன்வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் கன்ட்ரோல் ரூம்களின் பணி இந்தியா முழுக்கவே கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே, அனு, ரேணு என வேறு பெயர்களில் குறிப்பிட்டாலும் சாராம்சம் இதுதான். சந்தேகமில்லை, சமூகத்தை இயங்கச் செய்வதில் கன்ட்ரோல் ரூமுக்கும் பெரும் பங்கிருக்கிறது.

எமர்ஜென்சி!
1937ம் ஆண்டு ஜூன் 30 அன்று முதன்முதலில் எமர்ஜென்சி உதவிக்கான எண் 999 இங்கிலாந்தில் அறிமுகமானது. 1935ம் ஆண்டு நிகழ்ந்த தீவிபத்தில் பரிதாபமாக ஐவர் இறக்க அவசர உதவி எண் 19 கி.மீ. சுற்றளவில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இந்த வசதி பல்வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

999 என்பது பொது தொலைபேசிகளுக்கான (1925) டிசைன். ஐரோப்பிய நாடுகளுக்கு எமர்ஜென்சி எண் 112 (1995). சிம் கார்டு இல்லாமல்கூட 999, 112 எண்கள் மூலம் எமர்ஜென்சி உதவிகளைப் பெறலாம். காது கேட்காதவர்களுக்கு 18000 என்ற எண் உதவுகிறது. 999 என்ற எமர்ஜென்சி எண்ணை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

உதவிக்கு வரலாமா?
போலீஸ் - 100
தீ                 - 101
ஆம்புலன்ஸ் - 102
பேரிடர் மேலாண்மை - 108
சேவை மொழிகள் - இந்தி, ஆங்கிலம், உள்ளூர் மொழி

- ச.அன்பரசு