சாரி பாஸ்... இதுல எந்த ஏடாகூடமும் இல்ல!



கஜினிகாந்த் Exclusive

‘நோ டபுள் மீனிங். ஒன்லி ஸ்டிரைட் மீனிங்’ ஃபார்முலாவில் வந்த ‘ஹரஹர மஹாதேவகி’, வரவிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களின் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த அதிரடி அட்ராசிட்டி ஆர்யா, சாயிஷா சைகல் நடிக்கும் ‘கஜினிகாந்த்’.தாய்லாந்தில் குளுகுளுவென அதன் டூயட் ஷூட் முடித்த வேகத்தில் ரிலீஸுக்கும் நல்லநாள் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.‘‘‘கஜினிகாந்த்’ பத்தி பேசுறதுக்கு முன்னாடி, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடறேன். என் முந்தைய ரெண்டு படங்கள்ல இருந்த அடல்ட் கன்டன்ட் இதுல இருக்காது. ‘ஏ’டாகூடமான விஷயங்களை எதிர்பார்த்து ‘கஜினிகாந்த்’துக்கு வந்துடாதீங்க. இது முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட். முதல் முறையா குடும்பத்தோடு வந்து பாருங்கன்னு உங்க எல்லாரையும் இன்வைட் பண்றேன்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார்.

‘அடுத்தடுத்து அதே தயாரிப்பாளர்... ஒரே நேரத்துல இரு படங்களை டைரக்ட் செய்றீங்க’னு கோலிவுட் முழுக்க பேச்சா இருக்கே..? 
சந்தோஷமா இருக்கு. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படப்பிடிப்புக்கு நடுவுல ஒருநாள் ‘ஆர்யாவை பார்க்கப் போறேன். நீங்களும் வாங்க’னு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் கூப்பிட்டார். அப்பதான் அவர்கிட்ட தெலுங்கில் நானி நடிச்சு ஹிட்டான ‘பலே பலே மஹாதிவொய்’ படத்தின் ரீமேக் ரைட்ஸ் இருக்கிற விஷயம் தெரிஞ்சது. அது ஆர்யாவுக்கும் பிடிச்ச படமா இருந்தது. ‘இப்பவே கால்ஷீட் இருக்கு. உடனே தொடங்கிடலாம். சன்தோஷே டைரக்ட் பண்ணட்டும்’னு ஆர்யா சொன்னார். ஒரே டைம்ல என்னால ரெண்டு படம் பண்ணிட முடியுமானு தயக்கம் இருந்தது.

‘உன்னால முடியும்’னு எனக்கு நம்பிக்கை கொடுத்து உடனே படத்தை தொடங்க வைச்சார் ஞானவேல்ராஜா சார். பாங்காக்ல ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஷூட் நடந்தப்பவே ‘கஜினிகாந்த்’ படப்பிடிப்பையும் ஆரம்பிச்சோம். இந்தப்பக்கம் ஒரு படத்தோட டாக்கி போர்ஷன் ஷூட், அந்தப் பக்கம் இன்னொரு படத்தோட பாடல் ஷூட்னு பரபரப்பா இருந்தோம். ‘கஜினிகாந்த்’னு டைட்டில் வைச்சதுக்கான காரணம், டீசர்லயே இருக்கு. ஒரு விஷயத்துல நாம ஈடுபடும்போதே திடீர்னு இன்னொரு விஷயத்துல கவனம் சிதறும். இது இயல்பானது.

எல்லாருக்கும் நடக்கக் கூடியது. ஆனா, இப்படி டைவர்ட் ஆகறதோட சதவிகிதம் அதிகமானா என்ன ஆகும்? ஹீரோவோட கேரக்டர் அப்படியானது. அக்ரிகல்ச்சர் ஜூனியர் சயின்ட்டிஸ்ட்டா இதுல ஆர்யா வர்றார். இவருக்கு மைண்ட் டைவர்ட் ஆகிட்டே இருக்கும். அப்படிப்பட்டவர் எல்லாத்துலயும் பர்ஃபெக்‌ஷன் பார்க்கிறவரோட மகளைக் காதலிக்கறார். இதனால நடக்கிற சம்பவங்கள்தான் கதை. ஆர்யாவுக்கு ஜோடியா ‘வனமகன்’ சாயிஷா சைகல் நடிச்சிருக்காங்க.

இவங்க தவிர, சம்பத், ‘ஆடுகளம்’ நரேன், சதீஷ், கருணாகரன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா, காளி வெங்கட்னு காமெடி ஆர்ட்டிஸ்ட்கள் நிறையவே இருக்காங்க.  என்னோட ஃபேவரிட் டெக்னிக்கல் டீமான பல்லுவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் உண்டு. ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா, கோபி அமர்நாத் ஆகியோர் ஸ்கூல்ல இருந்து வந்தவர் பல்லு. ‘இருட்டு அறையில்..’ 22 நாட்கள்லயும், ‘கஜினிகாந்த்’ 40 நாட்கள்லயும் முடிச்சிருக்கோம். குவாலிட்டில காம்ப்ரமைஸ் பண்ணலை. படம் பார்த்தா உங்களுக்கே தெரியும்.

எப்படி இருக்கார் ஆர்யா?
சூப்பரா! ‘மச்சான்...’, ‘டார்லிங்...’னு உரிமையா கூப்பிடுற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அவர் ஸ்பாட்டுல இருந்தாலே எல்லாரும் உற்சாகமாகிடுவாங்க. காலைல வித் மேக்கப்போடு ஸ்பாட்டுக்கு வந்தார்னா பேக்கப் சொல்றவரை எங்களோடுதான் இருப்பார். ‘ஹ.ஹ.ம.தே’ பார்த்துட்டு, அதே மாதிரி அடல்ட் கன்டன்ட்ல நடிக்க விரும்பறதா சொன்னார். எதிர்காலத்துல இந்த மிராக்கிள் நடக்கலாம்! ‘வனமகன்’ல சாயிஷா, டான்ஸ்லயும், பர்ஃபாமென்ஸ்லயும் அசத்தியிருக்காங்க. இதுல அவங்க பரதநாட்டிய டீச்சர். பொதுவா மும்பை ஹீரோயின்ஸ் உச்சரிப்புல கவனம் செலுத்த மாட்டாங்க. ஆனா, சாயிஷா பக்காவா கான்சன்டிரேட் செய்திருக்காங்க.

ரீமேக் அனுபவம் எப்படியிருக்கு..?
ஆக்சுவலா சொந்தமா யோசிச்சு எழுதி பண்றதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம். முன்னாடியெல்லாம் டிவிடில படத்தைப் பார்த்து நோட் பண்ணிட்டு ரீமேக் செய்ய போவாங்க. இப்ப அப்படியில்ல. மொபைல்லயே ஒரிஜினல் படத்தை வச்சுக்கலாம். ஃப்ரேம் பை ஃப்ரேம் பார்த்துக்கலாம். ஆனா, ஷாட் முடிஞ்சதும் ஒரிஜினல் அளவுக்கு எடுத்திருக்கோமோ..?

அந்த எமோஷன்ஸ் ஸ்க்ரீன்ல வந்திருக்கா... காமெடி டைமிங் ஒர்க்அவுட் ஆகியிருக்கானு ஆயிரம் சிந்தனைகள் ஓடிக்கிட்டே இருக்கும். இதையெல்லாம் மனசுல வைச்சுதான் ரீமேக்கை ஷூட் பண்ண வேண்டியிருக்கும். படம் ரிலீஸ் ஆனதும் ஒரிஜினலோடு கம்பேர் பண்ணி பேசுவாங்க. நாமே எழுதி இயக்கற ஸ்கிரிப்ட்டுல குறைகள் இருந்தாலும் அதை பெருசு பண்ண மாட்டாங்க. ஆனா, ரீமேக்ல குறைகளைத்தான் ஹைலைட் செய்வாங்க. இதையெல்லாம் மனசுல வைச்சுதான் ‘கஜினிகாந்த்’ பண்ணியிருக்கோம். 

- மை.பாரதிராஜா