சவரக்கத்தி



தனக்கு நேர்ந்ததாகக் கருதும் அவமதிப்புக்கு பழி வாங்க புறப்படும் ரவுடியின் பயணமே ‘சவரக்கத்தி’. புதிய களம், கணிக்க முடியாத அடுத்தடுத்த செயல்கள் என தன் முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் ஆதித்யா. திரைக்கதையில் சகோதரருக்கு உதவியிருக்கிறார் மிஷ்கின். அண்ணன் உடையான் படைக்கஞ்சான்! ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதன் பிரத்யேக இயல்பை வைத்தே ஈர்க்கச் செய்தது, ‘இவர்தான் ஹீரோ, இவர்தான் வில்லன்’ என்று சொல்ல முடியாமல் ஒவ்வொருவர் மீதும் கனத்தை ஏற்றியது, விரட்டித் திரியும் மொத்த நேரமும் பல உணர்ச்சிகளை விளையாட விட்டது... என நிறைய இடங்களில் புத்தம் புதுசு.

எப்படியாவது தன்னை அவமானப்படுத்திய ராமை கொன்று விடத் துடிக்கும் வெறி, அது நிறைவேறாத ஒவ்வொரு நிமிடமும் வெறித்த கண்களுடன் பார்ப்பது, ஹோட்டலில் தலை நிறைய பூச்சூடிய பெண்ணைப் பார்த்து உட்கார்ந்திருப்பது... என மிஷ்கின் ஓகே. நம்ப முடியாத பொய்களை காரண காரியங்களோடு அடுக்கிச் சொல்லும் முடி திருத்தும் தொழிலாளியாக ராம். எதற்கெடுத்தாலும் லாஜிக் வகுப்பு எடுக்கும் இடங்களில் ஜொலிக்கிறார். அடுத்தடுத்த நெகிழ்வான வார்த்தைகளில் தொலைந்துவிட்ட குழந்தைகளையும், மனைவியையும் தேட வாடகை சைக்கிள் எடுக்கும் காட்சி அபூர்வ இடம்! பொறுக்க முடியாமல் ரவுடி மிஷ்கினிடமே பூர்ணா எகிறிப் பாய்வது, வெறுப்பை தாங்கிக் கொள்ள முடியாத கச்சிதத்தில் அமைந்து விட்டது.

கேரள வாசனை துளியும் காட்டாமல் வசனம் பேசியிருக்கும் ஆர்வத்திற்கே பூர்ணாவிற்கு பூங்கொத்து! குழந்தையின் அழுகை ஒலி தந்த திருப்பத்தில் கொட்டும் தண்ணீருக்கு அடியில் மிஷ்கினும், ராமும் விழுந்து கிடப்பதில் பல கதைகள் பேசிச் செல்கிறது திரைக்கதை. துரத்திக் கொண்டு, அலைந்து திரிந்து கதாபாத்திரங்களோடு ஓடுவதில் கேமராவை மறக்கிறோம். அதுவே ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக்கின் அழகு. அரோல் கெரோலியின் இசை கூடவே பயணிக்கிறது. தமிழச்சி, மிஷ்கினின் பாடல்கள் அர்த்தம் நிரம்பியவை. ப்ளாக் ஹியூமருக்கான இடங்களும், காட்சிகளும் படம் நெடுக இருக்கின்றன. ஆனால், சிரிப்பே வரவில்லை. போலவே பல இடங்களில் அதீத இரைச்சல். எல்லா கதாபாத்திரங்களும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். பாத்திரமாக மாறாமல், ராமும் மிஷ்கினும் தனியாகத் தெரிவது பலவீனம். முனை மழுங்கிய ‘சவரக்கத்தி’.

- குங்குமம் விமர்சனக்குழு