வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!



‘இங்கு நோட்டீஸ் ஒட்டாதீர்கள்...’ என்று சுவரில் எழுதுவதை விட ஓவியத்தை அங்கு வரைவது அழகில்லையா? இப்படி சுவரில் வரையும் ஓவியங்களைத்தான் ‘கிராபிட்டே’ என்கிறார்கள். இதையே கொஞ்சம் மாற்றி மும்பை கிராமங்களில் உள்ள சுவர்கள் அனைத்தையும் வண்ணமயமாக்கி இருக்கிறார்கள் ‘Chal Rang De’ என்னும் ஓவியர்கள் குழு. “டிசம்பர் 12லதான் இந்த திட்டம் உதயமாச்சு. ஆட்களை சேர்க்கத் தொடங்கினோம். ஜனவரி 2 அப்ப அசல்பா கிராமத்துல அசெம்பிள் ஆனோம். நேரடியா கிராம மக்கள்கிட்ட பேசினோம். அவங்கள்லயே ஓவிய ஆர்வம் இருக்கிறவங்களையும் சேர்த்துக்கிட்டோம். மொத்தம் 120 சுவர்கள். ஒவ்வொரு சுவரும் மும்பை கிராமப்புற வாழ்க்கையை பிரதி பலிக்கணும்னு முடிவு செஞ்சோம். வருங்காலத் தலைமுறைக்கு சொல்ல நம்மகிட்ட ஏராளமான கதைகள் இருக்கு.

அதையெல்லாம் சுவர் ஓவியங்களா வரைய முடிவு செஞ்சோம். பள்ளிகள், மருத்துவமனை, மெட்ரோ ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், வீட்டு சுவர்கள்னு எல்லா இடங்களையும் கலர் ஃபுல்லா மாத்தினோம். எங்க கான்செப்ட்டே சேரிகளை வண்ணமயமா மாத்தறதுதான்...”உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் ‘சல் ரங் தே’ குழுவின் நிர்வாகியும் உரிமையாளருமான திதீப்யா ரெட்டி.‘‘நகரத்து மக்கள்கிட்ட சேரிகள்னு சொல்லிப் பாருங்க... ஆர்வமே இல்லாம கேட்க ஆரம்பிப்பாங்க. இதை மாத்தறதுதான் எங்க நோக்கம். இதன் மூலமா சேரிகள் பத்தின நல்ல விஷயங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வரும்.

இதுல எந்த விதமான பணப் பரிமாற்றமோ பணம் சார்ந்த அடிப்படையோ இல்ல. எங்களுக்கு உதவ வர்றவங்ககிட்ட உழைப்பை மட்டும்தான் கேட்கறோம். பல முன்னணி பெயிண்ட் நிறுவனங்கள், தாங்களாவே முன்வந்து வண்ணங்களை தர்றாங்க. உணவு, தங்குமிடம் எல்லாம் அந்தந்த கிராமங்களைப் பொறுத்தது. மக்களே எங்களுக்கு சாப்பாடு போட்டு தங்க இடமும் தர்றாங்க...’’ என்கிறார் திதீப்யா ரெட்டி.‘வண்ணங்கள் இல்லா உலகம் சோகமாக இருக்கும்... இந்த வரிதான் எங்க தாரக மந்திரம். எங்க பெஸ்ட் மொமெண்ட் எதுனா... அது போலீஸ் ஸ்டேஷனை கலர்ஃபுல்லா மாத்தினதுதான். பொதுவா காவல் நிலையம்னா கொஞ்சம் டெரரா, குற்றவாளிகளைப் பிடிச்சு வைக்கிற இடமா இருக்கும்.

ஆனா, அசல்பா கிராம போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பாருங்க. அடையாளமே மாறியிருக்கும். காவல்துறை அதிகாரிகளும் எங்ககூட சேர்ந்து வண்ணம் தீட்டினாங்க. இப்ப பல ஊர்கள்ல இருந்து அழைப்பு வருது. ஆர்வமுள்ள ஓவியர்கள் கைகோர்க்க வந்துகிட்டே இருக்காங்க. சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களையும் கலர்ஃபுல்லா மாத்துங்கனு கோரிக்கை வந்துகிட்டே இருக்கு. நிச்சயம் இந்தியா முழுக்கவே வண்ணமயமா மாத்தத்தான் போறோம்...’’ என்கிறார் மற்றுமொரு முக்கிய நிர்வாகியான டெர்ரென்ஸ் ஃபெர்ரீரா. ஆக, இனி இந்தியா புறத்திலும் வண்ணமயமாகும்!

- ஷாலினி நியூட்டன்