ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 67

காசியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பனிரெண்டாவது மாநாடு நடந்தபோது அதில் கலந்துகொண்ட நல்லகண்ணு, கட்சிப் பணிக்கு இடையிலேயும் காசியில் பாரதி  வாழ்ந்த பகுதியைப் போய்ப் பார்த்திருக்கிறார். ‘காசியில் பாரதி தரிசனம்’ எனும் கட்டுரையில் பாரதியின் சித்திரத்தைப் புதுவிதமாகத் தீட்டியிருக்கிறார்.  இலக்கியத்தையும் வரலாற்றையும் இணைத்து எழுதும் வழக்கம் ஜீவாவிடமிருந்து அவருக்கு வந்திருக்கலாம். தெளிவுற தெரியாத எதைப்பற்றியும் அவர்  எழுதுவதில்லை. தோழர் பாலனுக்கும் பேத்தி சண்முகபாரதிக்கும் அவர் எழுதியுள்ள உருக்கமான கடித வரிகள் கண்ணீரைத் தருவன.

கடவுள் மறுப்புக் கொள்கையுடைய அவர், தமிழகத்திலுள்ள பல கோயில்களின் ஸ்தல புராணங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். சைவ,  வைணவ பெயர்களின் வழியே அவ்வூரின் தோற்றத்தை அவரால் யூகிக்க முடிந்திருக்கிறது. ஒருமுறை தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்குச் சென்றபோது  ‘முனியோதனம்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறார். திருக்கண்ணபுரம் கோயிலில் இரவு பூசை முடித்துக் கொடுக்கப்படும் பொங்கலின் பெயரே  ‘முனியோதனம்’.

தோழர் ஒருவர் மூலம் ‘முனியோதனத்’தைத் தெரிந்துகொண்ட அவர், திருக்கண்ணபுரம் ஆழ்வார்கள் ஸ்தலமாயிற்றே, அங்கே எப்படி ‘முனி’ என்ற சைவப்  பெயர் வருமென்று ஆராய்ந்திருக்கிறார். வீரசோழ பூபாலன் எனும் சோழமன்னன் ஆண்டு வந்த காலத்தில் திருக்கண்ணபுரம் உள்ளிட்ட இருபது ஊர்களுக்குத்  தண்டல் வசூலிக்கும் பணியை முனியன் என்பவன் பார்த்து வந்திருக்கிறான். முனியன், கோதிலன். அதாவது குணம் உள்ளவன். மன்னனுக்கும் மக்களுக்கும்  விசுவாசமாயிருந்த முனியன், துளசிமாலையும் பூமாலையும் சாத்தி கண்ணபுர பெருமாளுக்குக் கடமையாற்றியிருக்கிறான்.

சைவனான அவன், ஒருகட்டத்தில் வைணவ பக்தனாக மாறிவிடுகிறான். தண்டல் வசூலித்து வந்த முனியன், அப்பகுதியில் ஏற்பட்ட விவசாயப் பஞ்சத்தை  அடுத்து, மன்னனுக்குச் செலுத்த வேண்டிய வசூல் பணத்தை மக்களுக்குச் செலவழித்திருக்கிறான். மக்களிடத்தில் செல்வாக்கையும் நற்பெயரையும் பெற்ற  முனியனை, அவ்வூரில் இருந்த பணக்காரர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. மக்கள் செல்வாக்கை மன்னனே அடைந்தாலும், பணக்காரர்களுக்குப்  பிடிக்காதென்பதுதானே வரலாறு. இது ஒருபுறமிருக்க, பெயரும் புகழும் ஓங்கிய திருக்கண்ணபுர பெருமாள் கோயிலில் பணிபுரிய தேவதாசிகள்  அமர்த்தப்படுகிறார்கள்.

மாடவீதியில் குடியிருந்து கோயில் பணிகளைக் கவனிக்க வந்த தேவதாசிகளை, ஆதிக்கக்காரர்கள் தங்கள் ஆசைநாயகிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.
அந்தச் சூழலில், முனியனுக்கும் ஒரு பெண்மீது காதல் வந்துவிடுகிறது. தண்டல் வசூலிப்பவனுக்குக் காதலா? ஆத்திரமடைந்த ஆதிக்கக்காரர்கள், மன்னனிடம்  முனியனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிவிடுகின்றனர். எந்த மன்னன் எளியவனின் காதலுக்கு மதிப்பளித்திருக்கிறான்? நியாயத்தைக்  கேட்டிருக்கிறான்? பணக்காரர்கள் பக்கமிருந்த வீரசோழ மன்னனும், ஆதிக்கக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டு, முனியனின் ஒற்றைக் காலை மடக்கிக்கட்டி,  வெய்யிலில் நிற்கவைத்து, நெற்றியில் கல்லேற்றியிருக்கிறான்.

கிட்டியால் உடலை நெரித்து, குறடுகளால் தொடைகளை இறுக்கி துன்புறுத்தியிருக்கிறான். வசூல் பணத்தை மன்னன் அனுமதியில்லாமல் செலவழித்த  குற்றத்தைவிட, தன்னைவிட தாழ்ந்த ஒருவன் காதலித்தான் என்பதே கடும் குற்றமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. காதலன் துயருற்ற சேதி கேட்ட காதலி, உள்நிறை  அன்பு பூண்டு உறுபொருள் கொடுத்த காதலனுக்காக பெருமாளிடம் வேண்டியிருக்கிறாள். “சீதையையும் திரெளபதையையும் காத்த பெருமாளே, என்னையும்  காப்பாற்று...” என்று இறைஞ்சியிருக்கிறாள்.“வேசி என என்னை விட்டுவிடாதே.

அவ்வாறு நீ என்னை விட்டுவிட்டால், தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்...” என்றும் எச்சரித்திருக்கிறாள். காதலியின் வேண்டுதலைப்  பொருட்படுத்திய பெருமாள், மன்னனின் கனவில் தோன்றி முனியனை விடுவிக்கச் சொல்லியிருக்கிறார். தீக்குளிக்க இருந்த காதலியிடம் காதலனை ஒப்படைத்த  மன்னன், ஊர்க்காவலர்கள் முன்னிலையில் முனியனின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறான். இது நடந்தது நள்ளிரவில். மறுநாள் காலை அந்தணர் ஒருவர்,  மூலவருக்கு அர்ச்சனை செய்ய கருவறைக்குள் நுழைத்திருக்கிறார். அப்போது பார்த்தால் பெருமாள் மேனி முழுதும் பொங்கல் சிதறியிருக்கிறது.

அந்தப் பொங்கலின் பெயரே ‘முனியோதனம்’ என அக்கட்டுரையை நல்லகண்ணு முடித்திருந்தால், அதிலொன்றும் சிறப்பில்லை. இந்தக் கதையைச்  சொல்லிவிட்டு, “பக்தி இலக்கியங்களிலும் மக்கள் இயக்கங்கள் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன...” என்கிறார். ‘‘மக்கள் செல்வாக்கும் காதலும் பெற்ற  ஒருவனுக்கு, தெய்வமே துணையிருக்கும்...’’ என்று கதைக்குப் புது விளக்கம் தரும் இடத்தில்தான் நல்லகண்ணு மிளிர்கிறார். ஒரு சொல்லுக்குப் பின்னே உள்ள  கதையை ஆராய்ந்து, அக்கதையைப் புரட்சிகர சிந்தனைக்கு மடைமாற்றும் ஆற்றல் அவரது தனித்துவம்.

பக்தி இலக்கியங்கள் புரட்சிகர எண்ணங்களுக்கு மாறுபாடு உடையன என விட்டுவிடாமல், அதிலிருந்தும் மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டலாம் என்பதே  அவருடைய எழுத்துமுறை. பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்று நீளும் வரிசையில், இடதுசாரிக் கவிஞராக அறியப்பட்ட தமிழ்ஒளி, போதிய அளவு  போற்றப்படவில்லை எனும் வருத்தம் நல்லகண்ணுவுக்கு உண்டு. “சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி, சாத்திரத்தை மாற்றியது மனித சக்தி...” என்று  நிலவில் மனிதன் கால்வைத்த செய்தியறிந்து, கவிதை எழுதியவர் தமிழ்ஒளி. அவரின் படைப்புகளை ஆவணப்படுத்தியதில் பேராசிரியர் செ.து.சஞ்சீவிக்கு பெரும்  பாத்தியமுண்டு.

பேராசிரியர் சஞ்சீவி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது, பட்டுக்கோட்டை அறக்கட்டளை சார்பாக ஒரு விழாவை ஏற்பாடு  செய்திருக்கிறார். ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’ எனும் தலைப்பில் நல்லகண்ணு அவ்விழாவில் பேசியிருக்கிறார்.‘‘முதல் பாவலர் தமிழ்ஒளி,  இரண்டாவது பாவலர் திருமூர்த்தி, மூன்றாவது பாவலர் வரதராஜன்...’’ என்பதாக அமைந்த அப்பேச்சில், இலக்கியத்தை எந்த அளவுகோலால் தான் அளக்கிறேன்  என்பதையும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, தமிழ்ஒளிக்கு சஞ்சீவி எடுத்த வைரவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்.

அவ்விழாவில். பேராசிரியர் இளவரசு, ‘‘தமிழ் ஒளியை இடதுசாரிகளே மறந்துவிட்டார்கள்...’’ எனும் பொருள்படும்படி பேசியிருக்கிறார். தலித் என்பதனால்  தமிழ்ஒளி மறக்கடிக்கப்பட்டதாக, அவ்விழாவில் வேறொருவர் பேசியிருக்கிறார். உண்மையில், ஆதாரமில்லாமல் சொல்லப்படும் இப்படியான குற்றச்சாட்டுகளை  அவ்விழாவிலேயே மறுத்த நல்லகண்ணு, மிக நீண்ட உரையை ஆற்றியிருக்கிறார். தமிழ் அறிஞர்களும் ஆய்வாளர்களும் நிறைந்த அவ்வரங்கில் கையில்  குறிப்பேதும் இல்லாமல் நினைவிலிருந்தே பல பாடல்களைச் சொல்லியிருக்கிறார்.

ஆழ்ந்து படித்திராமல், மனனம் செய்திராமல் அப்படியான உரையை நிகழ்த்துவது சாத்தியமில்லை. ‘‘வர்க்கப் போராட்டமும் வர்ணாசிரமப் போராட்டமும் சம  அளவில் நிகழ்த்தப்பட வேண்டும்...’’ எனக் குறிப்பிட்டு, இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் இடதுசாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அவ்விழாவில்  புரிய வைத்திருக்கிறார். “பெரியார் பக்தி இலக்கியத்தை மறுத்தபோதும், ஜீவா அவ்விலக்கியத்தில் இருந்த நயங்களை சொல்லத் தயங்கவில்லையே...” என்பது  குறிப்பிடத்தக்கது. இலக்கிய அவதூறுகளால் இடதுசாரிகளைக் காயப்படுத்த யார் துணிந்தாலும், அதை நல்லகண்ணு பொறுத்துக் கொண்டதில்லை.

கலை இலக்கிய மேடைகளில், கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்கக்கூடிய தரவுகளோடுதான் அவர் எப்போதும் இருந்துவருகிறார். தயாரித்துக் கொண்டுபோய் பேசும்  வழக்கம் அவரிடமில்லை. அனுபவத்திலிருந்தும் ஆழ்ந்த வாசிப்பிலிருந்தும் பதிலளித்து, எந்த மேடையையும் தனதாக்கிவிடும் தனித்துவம் அவருடையது.  எனவேதான், எளிமை மட்டுமே அவர் அடையாளம் என்று சொல்வதை ஏற்க முடியாமல் போகிறது. திராவிட இயக்கத்தையும் பொதுவுடமை இயக்கத்தையும்  புரிந்த கொள்ளாத தமிழறிஞர்கள் சிலர், அவை இரண்டுக்கும் சிண்டு முடியும் வேலையைத் தொடர்ந்து செய்திருக்கிறார்கள்.

‘‘‘சோறா? மானமா?’ என்று வந்தால் பொதுவுடமைக்காரர்கள் சோற்றையும் திராவிட இயக்கத்தவர்கள் மானத்தையும் முதன்மையாகக் கொள்வார்கள்...’’ என  அமைச்சர் தமிழ்ககுடிமகன் ஒருமுறை பேசியிருக்கிறார்.‘‘இரண்டுமே முக்கியம்...’’ என்று விளக்கமளித்த நல்லகண்ணு, “சோற்றுக்காக மானத்தையும்,  மானத்துக்காக சோற்றையும் இழக்கவேண்டியதில்லை...” என்றிருக்கிறார். “மானமே முக்கியமென்பவர்கள் சாப்பிடவே மாட்டார்களா..?” என்ற கேள்வியில்  அரங்கம் அதிர்ந்திருக்கிறது. மூலதன மீட்பும் மூடத்தன எதிர்ப்பும் ஒருங்கே நடைபெற்றால்தான் மக்கள் நல்வாழ்வு பெறுவார்களே அன்றி,

ஒன்றை விடுத்து ஒன்றை முதன்மைப்படுத்துவதால் இரண்டுமே வீணாகும் என்பதே அவர் எண்ணம். அறுபதுகளில் வெளிவந்த ‘சாந்தி’ பத்திரிகையில்  நல்லகண்ணு பல அற்புதமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆண்டான் கவிராயன் எனும் பெயரில் வசைகவி ஒருவன் அக்காலத்தில் வாழ்ந்து  வந்திருக்கிறான். தன் தோதுக்கு வராத எவர்மீதும் வசைபாடுவதை வழக்கமாக வைத்திருந்த அந்த கவிராயனின் வார்த்தைகள் அப்படியே பலிப்பதாக ஐதீகமும்  இருந்திருக்கிறது. பலித்ததோ இல்லையோ, மக்களைப் பயமுறுத்தி, ஆண்டான் கவிராயன் ராஜவாழ்வை வாழ்ந்திருக்கிறான்.

எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரிலுள்ள சாதிக் கட்டுமானத்தை வசைபாடிவந்த அவன், தன் பசிக்கு உணவிடாதவர்களை உண்டு இல்லை என்று  பண்ணியிருக்கிறான். ஏழைக்கு உணவிட எண்ணாதவர்கள், கோயிலிலும் பூசையிலும் செலுத்திவரும் கவனத்தைக் கேள்வி கேட்டிருக்கிறான். ஒருகட்டத்தில்  பெருமாளையும் முருகனையுமே வசைபாடிய அவனை, நல்லகண்ணு பார்த்தவிதம் பரவசத்தில் ஆழ்த்துவிடுகிறது. கவிராயனின் பாடல்களைச் சொல்லி, கீழே  அதன் விளக்கத்தையும் தந்திருக்கிறார். ஆண்டாளைப் பேசிய கவிராயர் ஒருவரின் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,

ஆண்டான் கவிராயனின் வசைப்பாடல் விளக்கங்கள் ஏனோ நினைவுக்கு வந்தன. பொதுவாகக் கவிஞர்களே முற்காலங்களில் வசைபாடும் வல்லமை  படைத்தவர்கள். ஆனால், தற்போதோ கவிஞர்களை வசைபாடி, அரசியல் ஆதாயங்களைத் தேட மத அமைப்புகள் முயன்று வருகின்றன. ஒருவரின் தகுதியையும்  திறமையையும் பிறப்பை வைத்து அளவிடுவது சமூக நீதிக்கு எதிரானது எனும்போது, ஆண்டாளின் பிறப்பு குறித்து ஆராய்ச்சி செய்வதும் அநாவசியம் என்றே  தோன்றுகிறது. தோழர் நல்லகண்ணுவிற்கு இரண்டு மகள்கள். ஒருவரின் பெயர் ஆண்டாள். இன்னொருவர் பெயர் காசிபாரதி.

(பேசலாம்...) 

ஓவியங்கள்: மனோகர்