அப்பாவால்தான் சினிமாவுக்கு வந்தேன்...



‘‘பொதுவா த்ரில்லர்னா பயமுறுத்தும்... பதறி நடுங்க வைக்கும். அப்படியில்லாமல் அழுத்தமான படம். அடுக்கடுக்கா விழுகிற முடிச்சுகள், அவை அவிழ்கிற  விதம்னு போகாமல், உளவியல் சார்ந்து சொல்வதுதான் புத்தம் புதுசு. ‘‘ ‘எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் இடம்’ அப்படித்தான் இருக்கும்.

க்ரைம்  த்ரில்லர். ஓரிடத்தில் உட்கார்ந்து விசாரித்து பிரச்னைகளைத் தீர்க்கிற போலீஸ்காரர். எதிர்பார்க்காத டுவிஸ்ட், பதட்டம்னு போகாமல் இறுதியில் ஒரு எமோஷனல்  இடத்தில் போய் முடியும். இப்படியொரு விதத்தில் தமிழில் வர்லைங்கிறது என் ஞாபகம்...’’ நிதானித்துப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் சர்ஜுன் கே.எம். மிகத்  தீவிரமாக விவாதிக்கப்பட்ட ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களின் இயக்குநர். மணிரத்னத்தின் சீடர்.

‘லட்சுமி’, சினிமாவிற்கான துருப்புச் சீட்டா?
அப்படி யோசித்ததில்லை. கையில் ஒரு பைசா சேகரிப்பு இல்லாமல் என் நெருங்கிய நண்பர்களின் உதவியால் செய்ததுதான் ‘லட்சுமி’. அந்தப் படம்  பார்த்துவிட்டு இவ்வளவு விமர்சனங்கள் வருமென்று நினைத்ததில்லை. வந்த அலைபேசி அழைப்புகளுக்கு நான் பதில் கூட சொல்லவில்லை. அந்தக்  குறும்படத்தில் கருத்துச் சொல்ல வேண்டும், பதட்டமடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கமெல்லாம் கிடையாது. எதையும் நெகடிவ்வாக கொண்டு போய்ச்  சேர்க்கணும்ங்கிற எண்ணமுமில்லை. அதாவது அந்தப் படம் லட்சுமி என்ற பெண்ணின் ஒரு நாள்.

Slice of life-னு சொல்வாங்களே அதுதான். ஒவ்வொருத்தரின் வாழ்க்கையிலும் நிறைய பக்கங்கள் இருக்கும். அதில் ஒரு பக்கம் மட்டும்தான் இப்படி  நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், துயர் நிரம்பியும், அர்த்தமற்றும், புரிந்துகொள்ள முடியாதபடியும் இருக்கும். அதுமாதிரியான வாழ்க்கையில் அது ஒரு நாள்.  மாறாக ‘மா’ சகலமானவர்களாலும் பாராட்டி பேசப்பட்டது. அதுவும் கருத்துச் சொல்கிற படமில்லை. இப்படி நடந்தது என சொல்லியிருக்கிறேன். யார் எப்படி  எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல எனக்குத் தெரியாது.

நான் சினிமாவிற்கு வருவேன்னு கூட நினைச்சதில்லை. காரணம் என் அப்பாதான். அப்பா வெறித்தனமான சினிமா ரசிகர். ‘ஆல்பர்ட்’ தியேட்டரில் நடக்கும்  எந்தவொரு சினிமாவிற்கும் என்னையும் அழைத்துப் போவார். ரசித்து ரசித்துப் பேசுவார். கண்டிப்பான அப்பாவாக இருக்கிறதுக்குப் பதிலா கலகலன்னு நண்பன்  மாதிரி இருப்பார். காலேஜ்க்குப் போனால் படிப்பு ஒட்டலை. ஆனாலும் பக்குவமாக படிப்பை முடிச்சிட்டு, இதோ இந்தப் படத்தை அவருக்கு காண்பிக்க ரெடியா  இருந்தேன். ஆனா, அப்பா சமீபத்துல இறந்துபோயிட்டார்.

உடைஞ்சு போய் இருந்து, கொஞ்சமா எழுந்துதான் ‘லட்சுமி’ ரிலீஸ் செய்கிற முயற்சி நடந்தது. அதற்குப் பிறகானவை உங்களுக்குத் தெரிந்ததே. ‘லட்சுமி’  பார்த்திட்டு மணி சார் ‘மேக்கிங், Shots நல்லாயிருக்கு...’னு சொன்னவர், ‘மா’வை வெகுவாகப் பாராட்டினார். ‘‘லட்சுமி’யில் என்னவெல்லாம் தப்பு  செய்தாயோ அதை ‘மா’வில் நிவர்த்தி செய்திருக்கிறாய்...’னு சொன்னார். அவர் என் தவறுகளை சொன்னதேயில்லை. தவறுகளை நானே உணரும்படி  செய்வதுதான் அவர் பாணி.

‘எச்சரிக்கை’ எப்படியிருக்கும்?
வெறும் க்ரைம் த்ரில்லராக இல்லாமல், மனித உணர்வுகளின் வெளிப்பாடும் இருக்கணும்னு நினைச்சேன். வெளியில் செல்ல முடியாத ஒரு ஓய்வு பெற்ற  போலீஸ்காரர். அவர் இருக்கிற இடத்திலேயே விசாரணைக்கான ஏற்பாடு நடக்கிறது. ஒரு கடத்தல், அதைச் செய்தது யார்? ஏன், எப்படி என்று அடுத்தடுத்து  செல்கிற படம். முடிவில் நீங்கள் பார்த்தறியாத நல்ல எமோஷன் உங்களுக்கு காத்திருக்கு. சத்யராஜ் சாருக்கு கதையைச் சொன்ன உடனேயே ‘சரி’யென்றார்.  அப்போதைக்கான சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டதோடு சரி. ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் ஆர்வமாக நடித்துக்கொடுத்து விட்டு போனார்.

நான் ஒரு புது இயக்குநர் என்ற ஒரு சிறு அலட்சியம் கூட அவரிடமில்லை. தான், ஒரு சீனியர் நடிகர் என்ற பயமுறுத்தலும் கிடையாது. ‘எச்சரிக்கை’ ஒரே  நாளில் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணிக்கு முடிகிற கதை. படத்தில் சப்தத்தை முக்கியமான புது விஷயமாக கருதலாம். வரலட்சுமி,  கிஷோர் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். விவேக் ராஜகோபால் என்பவரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். துரித கதியில் படம் சென்று இரண்டு மணி நேரத்தில்  முடிவடையும். த்ரில், இசை, கேரக்டர்களின் ஃபீலிங்ஸ் என நிறைய இடங்கள் இருக்கு. உணர்வுபூர்வமான விஷயங்களும் உள்ளடங்கி இருப்பதே இதில் சிறப்பு.

படத்தை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நான் சமரசத்திற்கு உள்ளாகவே இல்லை. அதற்கு என் தயாரிப்பாளர்களிலிருந்து நடிகர்கள்  வரைக்கும் ஒத்துழைப்பு தந்ததுதான் எனக்கான பெரும் மகிழ்ச்சி. நிஜத்தை விட புனைவுகள் கவனமாகச் செய்யப்பட வேண்டும். பார்வையாளர்களோடு இந்தப்  படத்தில் நெருங்கியிருப்பேன் என நம்புகிறேன். ‘லட்சுமி’யின் ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனும், மியூசிக் டைரக்டர் சுந்தரமூர்த்தியும் இதிலும் என்னோடு  பயணிக்கிறார்கள். என் உணர்வை அறிந்து செயலாற்றுபவர்கள். தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார்.

அடுத்து நயன்தாராவின் படத்தை இயக்குகிறீர்கள்...
என் ‘மா’ படத்தை பார்த்திருக்கிறார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அவரது படத்திற்கான கதையைக் கேட்டார். சொன்னதும் அவருக்கு சம்மதமே.  ‘மேக்கிங்கில் கவனமாக இருங்கள்...’ என்றார். படத்தில் எல்லா அம்சங்களும் அவருக்குத் திருப்தியாக இருந்தது. அது ஹாரர் படம். ‘நீங்கள் சொன்னதை  அப்படியே திரையில் கொண்டு வந்தால் நல்லது. அதுவே போதும்...’ என்றார். எனக்கான பெரிய உத்வேகம் அவரது வார்த்தைகளில் கிடைத்தது.

- நா.கதிர்வேலன்