கவிதை வனம்




கந்தல்


அண்ணனுக்கோ அப்பாவுக்கோ
வாங்கிய சட்டை
தம்பியை
உடுத்திக்கொள்கிறது
சில சமயம் அக்காவையும்
அல்லது தங்கையையும்கூட
பாப்பாவை தூங்கச்செய்கிறது
பாட்டியின் சேலை
அம்மாவின் கைகளில்
நுழைந்து
பாத்திரங்களின் சூடு
தாங்கும் அப்பாவின் பனியன்
அவ்வப்போது
சைக்கிளும் துடைக்கிறது
முக்கோணமாகவோ
சதுரமாகவோ
அல்லது தனக்கென்ற
உருவமில்லாத
மிச்சங்களை
திணித்துக்கொண்டு
தைக்கப்பட்ட
தம்பியின் டிராயர்
அப்பாவின் டியூசன்
கிளாசில் போர்டு துடைக்கிறது
அம்மாவின் காட்டன்
சேலையை கிழித்து செய்யப்பட்ட
அக்காவின் தாவணி
தங்கையைத் தழுவுகிறது
தலையணைக்கு உறையாகிறது
அவ்வப்போது கறையுமாகிறது.

- சுபா செந்தில்குமார்

நினைவுகள்

நகரத்து மளிகைக்
கடையில்
இரண்டு ரூபாய்க்கு
விரல் நீள தேங்காய்
கீற்று வாங்குகையில்
மனதில் நிழலாடும்
ஊரில் சொற்ப
காசுக்கு
விற்று வந்த
தென்னந்தோப்பின்
நினைவுகள்.

- கி.ராஜாராமன்