COFFEE TABLE



கலக்குற அமலா!

புது போன், புது புத்தகம், புது தத்துவம் என்று கலக்குகிறார் அமலாபால். ஆம்; சமீபத்தில் ஐபோனிலிருந்து கூகுள் ‘பிக்சலு’க்கு மாறியிருக்கிறார். மட்டுமல்ல,  ‘காணினும் பெரிது காண்’ என்பது போல ‘ட்ரீம் பிக்’ என ஃபேஸ்புக்கில் தன் ரசிக கண்மணிகளுக்கு தத்துவமும் உதிர்த்திருக்கிறார். சமீபத்தில் ‘Smarter  Faster Better’ என்ற நூலை வாசித்தவர், ‘‘சரியான இலக்கும், அதற்கான திட்டமிடலும், உழைப்பும் இருந்தால் எத்தனை பெரிய கனவும்  சாத்தியப்படும்...’’ என சொல்லிப் புன்னகைக்கிறார். அமலாவுக்கு ஆயிரக்கணக்கில் ஹார்ட்டின்கள் குவிந்துவருகின்றன.

சூப்பர் ஹீரோ 

எகிப்தின் கெய்ரோ நகரில் இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு அது. அதன் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு ஃப்ளாட், சாலையைப் பார்த்து  வீற்றிருக்கிறது. ஃப்ளாட்டில் யாருமே இல்லாதபோது பால்கனியின் சுவர் மேல் ஏறி விளையாடியிருக்கிறான் ஒரு சிறுவன். அப்போது அவனுக்கு கால்  வழுக்கியிருக்கிறது. கீழே விழும்போது சட்டென்று கைகளால் பால்கனியின் சுவரைப் பிடித்துவிட்டான்.

அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அவனைப் பார்த்த போலீஸார் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் அவன் கையை விட்டுவிட்டான். அந்தச்  சிறுவனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பாய்ந்து அலேக்காக அவனைப் பிடித்துவிட்டார். அந்தச் சிறுவனுக்கு எந்த காயமும்  ஏற்படவில்லை என்பதுதான் ஹைலைட். ‘‘போலீஸ்தான் எங்களுக்கு சூப்பர் ஹீரோக்கள்...’’ என்று எகிப்திய மக்கள் காவல்துறைக்குப் புகழாரம்  சூட்டிவருகின்றனர்.

மோகன்லால் கேட்ட மன்னிப்பு!   
 
மோகன்லாலின் வலைப்பக்கம் உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். அதில் தனது எண்ணங்கள், கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார். இடைவிடாத  படப்பிடிப்புகளால் அவரால் எதையும் எழுத முடிவதில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாந்துவிட, ஃபேஸ்புக்கில் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.  ‘‘டியர் ஃப்ரெண்ட்ஸ். நீங்க எல்லாரும் வருத்தத்தில் இருப்பீங்கன்னு தெரியும். ஐ’ம் ஸாரி. படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது. இனி கண்டிப்பாக எழுதுவேன்...’’  என நம்பிக்கையளித்திருக்கிறார் சேட்டன்.

ரிங் கிளாக்

வந்துவிட்டது ரிங் கிளாக். இனி உங்களின் காதலிக்கு மோதிரம், கடிகாரம் என்று தனித்தனியாக கிஃப்ட் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மோதிரக் கடிகாரமே  போதும். சரிஜிக்கல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் இது தயாரிக்கப்பட்டிருப்பதால் நீண்ட நாட்களுக்குப் புதிது போலவே இருக்கும். தண்ணீர் புகாத மாதிரி, அழகிய  வேலைப்பாடுகளுடன் இதை வடிவமைத்திருக்கிறார் கடிகாரக் காதலர் குஸ்டவ். நான்கு விதமான வண்ணங்களில், 18 அளவுகளில் இது கிடைக்கிறது. விலை ரூ.  22,000லிருந்து ஆரம்பிக்கிறது. 

இன்டர்நெட் இந்தியா

‘‘இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி. இதில் கிட்டத்தட்ட 48 கோடிப் பேர் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்...’’ என்கிறது ஒரு புள்ளி விவரம்.  ‘‘கிராமங்களைவிட நகரங்களில்தான் அதிகமாக இன்டர்நெட் பயனாளிகள் உள்ளனர். கிராமங்களில் இன்டர்நெட் பொழுதுபோக்கிற்காகவும், நகரங்களில் தொடர்பு  சாதனத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வணிக நோக்கத்துக்காக நகரங்களில் 44% பேரும், கிராமங்களில் 16% பேரும் இன்டர்நெட்டைப்  பயன்படுத்துகின்றனர்...’’ என்கிற ஆய்வாளர்கள், ‘‘இன்டர்நெட் பயன்பாட்டுக்காக கணினியைவிட ஸ்மார்ட்போனைத்தான் மக்கள் அதிகமாக  விரும்புகின்றனர்...’’ என்கிறார்கள்.

- குங்குமம் டீம்