vitamin D குறைபாடு டுபாக்கூர் ஆய்வு!



பொளந்து கட்டும் மருத்துவர்

உலகிலேயே ஒரு பைசா கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, ‘வைட்டமின் டி’ மட்டும்தான். நம் உடல் மீது வெயில் பட்டாலே போதும்,  தேவையான அளவு வைட்டமின் டி நமக்கு கிடைத்துவிடும். இந்நிலையில் ‘‘இந்திய நகரவாசிகளில் சுமார் 80% பேர் வைட்டமின் டி குறைபாட்டால்  அவதிப்படுகின்றனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வெயில் நாடான இந்தியாவில் வைட்டமின் டி குறைபாடா? இதற்குப் பின்னால்  இருக்கும் உண்மைகள் என்ன? துறை சார்ந்த மருத்துவர்களிடம் பேசினோம்.

‘‘ஒரு காலத்தில் எலும்பு மற்றும் சதைகளின் திடத்துக்கு மட்டுமே வைட்டமின் டி தேவையாக இருந்தது. இன்று நரம்பு மண்டலம், மூளை, கல்லீரல், சிறுநீரகம்,  இதயம் போன்ற உடலின் மற்ற உறுப்புகளுக்கும் அது அவசியமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் அதிகமாக  இல்லை. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் வைட்டமின் டி சத்தை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் வெயிலின் அருமையை உணராமல் நிழலைத்  தேடிச் செல்கின்றனர். உடலின் மீது சூரிய ஒளியே படாத ஒரு வாழ்க்கையை வாழ்வதால் இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் கூட வைட்டமின் டி  குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் வெயிலை நாடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. குறிப்பாக காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை அடிக்கும் வெயிலில்  வைட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 20 நிமிடங்களாவது உடலின் பாகங்கள் வெயிலில் படும்படி பார்த்துக்கொள்வது  நல்லது...’’ என்று வைட்டமின் டி பற்றிய அடிப்படையான விஷயங்களைப் பகிர்ந்தார் எலும்பியல் மருத்துவரான ரமேஷ் பாபு. நம் உடலில் உள்ள வைட்டமின்  டி-யின் அளவை ‘நானோமோல்ஸ்’ என்ற ஒரு கணக்கின்படி அளவிடு கிறார்கள்.

இதன்படி குறைந்தபட்சம் 75லிருந்து அதிகபட்சமாக 185 - 200 நானோமோல்ஸ் வரை இருக்கலாம். இதை அளவிடும் முக்கியமான பரிசோதனை ‘25  ஹைட்ராக்சி வைட்டமின் டி’. இந்தப் பரிசோதனையைத்தான் இந்தியா உட்பட பல நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.‘‘‘25 ஹைட்ராக்சி வைட்டமின் டி’  பரிசோதனையால்தான் இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக கணிக்கப்பட்டு வருகிறது...’’ என ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் ‘மியாட்’  மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவரான ராஜன் ரவிச்சந்திரன்.

‘‘இந்திய மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை சமீப காலங்களில்  கிளப்பிய விஷயம் வைட்டமின் டி குறைபாடுதான். சர்வதேச மருந்துக் கம்பெனிகள்  இந்திய சந்தையில் வைட்டமின் டி மாத்திரைகளை விற்று கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகத்தான் இதுபோன்ற போலியான ஆய்வுகளை மேற்கொண்டு மக்களை  பயமுறுத்துகிறது. வெப்ப நாடான இந்தியாவில் 20 நிமிடங்கள் கூட உடலில் வெயில் படாத நபர்கள் இருக்கவே முடியாது. அப்படியிருக்கையில் எப்படி  வைட்டமின் டி குறைபாடு இங்கு சாத்தியம்..?’’ உண்மையை உடைத்த மருத்துவர் தொடர்ந்தார்.

‘‘நமது ரத்தத்தில் இரண்டு விதமாக வைட்டமின் டி கலந்திருக்கிறது. ஒன்று நமது உடலிலுள்ள புரதத்தோடு கலந்திருக்கும். இன்னொன்று தனியாக ரத்தத்தில்  கலந்திருக்கும். தனியாக இருக்கும் வைட்டமின் டி போதுமானதாக இல்லாதபோதுதான் புரதத்தில் இருக்கும் வைட்டமின் டி வேலை செய்ய ஆரம்பிக்கும்.  இந்தியர்களுக்குப் புரதத்தில் இருக்கும் வைட்டமின் டி-யைவிட தனியாக இருக்கும் வைட்டமின் டி-தான் அதிகம். வெப்பம் குறைவான குளிர்ப்பிரதேசங்களில்  வாழ்கிறவர்களுக்குத்தான் புரதத்தில் கலந்த வைட்டமின் டி அதிகமாக இருக்கும்.

‘ஹைட்ராக்சி’ பரிசோதனை இரண்டு விதமான வைட்டமின் டி-யையும் தனித்தனியாக கணக்கிடாமல், மொத்தமாக கணக்கிடுவதால் இந்தியர்களுக்கு இருக்கும்  தனியான வைட்டமின் டி-யைக் குறைத்து மதிப்பிடுகிறது. இதன் அடிப்படையில்தான் இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக அந்த ஆய்வு  சொல்கிறது. இது முற்றிலும் தவறான ஆய்வு...’’என்று டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் முடிக்க, ‘‘வைட்டமின் டி பரிசோதனையைக் காட்டிலும், வைட்டமின் டி  குறைபாட்டையும்,

அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நமது வாழ்க்கை முறைகளிலிருந்து பேசுவது மிக அவசியம்...’’ என்று ஆரம்பித்தார் சுரப்பியல் மருத்துவரான உஷா  ஸ்ரீராம்.‘‘உண்மையில் இந்தத் தலைமுறையினர் வெயிலில் நடமாடுவதே இல்லை. தவிர நம் உணவுப் பழக்கவழக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  இந்தியர்களைப் பொறுத்தளவில் சைவ உணவுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு வகையான சைவ உணவுகளில்  மட்டுமே வைட்டமின் டி சத்து உள்ளது. அசைவத்தில்தான் அதிகமாக வைட்டமின் டி உள்ளது.

இந்நிலையில் இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்...’’ என்றவர் தீர்வுகளையும் பட்டியலிட்டார்.‘‘ஒரு காலத்தில் ‘அயோடின் குறைபாடு’ என்று வந்தபோது, அயோடினை உப்பில் கலந்து கொடுத்தனர். அதேபோல் உணவுப்பொருட்களில் வைட்டமின் டி-யைக் கலந்து கொடுப்பதற்கு அரசு ஆவன செய்யவேண்டும். குறைந்தபட்சம் பாலிலாவது கலந்து தரலாம். வெளிநாட்டில் பாலில் வைட்டமின் டி-யைக் கலப்பது நடைமுறையில் இருக்கிறது.  அதேபோல் சாக்லெட்டிலும் கலக்குகிறார்கள்.

இயற்கையான வழிமுறைகளில் வைட்டமின் டி-யைப் பெறுவதுதான் உடலுக்கு நல்லது. அதற்கான வழிகள் இல்லாதபோது மாற்றுவழிகளைத் தேடிச் செல்வது  தவறில்லை. வைட்டமின் டி மாத்திரைகளைப் பொறுத்தளவில் மருத்துவர்களை ஆலோசித்த பின் எடுத்துக் கொள்வதே நல்லது.

எப்படி வைட்டமின் டி குறைபாடு பிரச்னைகளை உண்டாக்குகிறதோ அதேபோல் அதிகளவு வைட்டமின் டி-யும் பிரச்னைகளைக் கொண்டுவரும். எதுவும் அளவோடு இருத்தல் நலம். வைட்டமின் டி  பரிசோதனையில் குறைபாடு இருக்கிறதோ, இல்லையோ, நம் உடலுக்கு எனர்ஜி வேண்டும் என்று விரும்புபவர்கள் நிச்சயம் வெளியே வந்து வெயிலில்  விளையாட வேண்டும்!’’  என்கிறார் அவர்

- டி.ரஞ்சித்