சன் பிக்சர்ஸ், ரஜினியுடன் இணையும் படம் ஸ்பெஷலா இருக்கும்!



கார்த்திக் சுப்புராஜ் Exclusive    

‘‘மனசுக்குள் கதை ஓட ஆரம்பிச்சதும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிக்கும். அதில் ரொம்பவும் கச்சிதமாகப் பொருந்திய முகம்  பிரபுதேவா. அதுவும் சைலன்ட் மூவி என்பதுதான் இன்னும் விசேஷம். ‘மெர்க்குரி’ன்னா கெமிக்கல். கொஞ்சம் பின்னோக்கிப் போனால் கொடைக்கானலில் நடந்த சில போராட்டங்கள், ஜப்பான்...னு சில இடங்கள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். ஒரு நல்ல இடத்தை இந்த கார்ப்பரேட்காரர்கள் எடுத்துக் கொண்டு அதை  அப்படியே சிதைச்சுட்டுப் போயிடுறாங்க.

இதை ஒரு பின்புலமாக மட்டும் வைத்துக்கொண்டு செய்த கதை. மவுனப் படம் பண்றேன்னு ஒரு பெருமிதமும் இல்லை. ஏற்கனவே கமல் ‘பேசும் படம்’னு  செய்து பார்த்திருக்கிறார். ‘தி ஆர்ட்டிஸ்ட்’னு ஹாலிவுட்ல வந்திருக்கு. ‘மெர்க்குரி’யில் வருகிற மனிதர்கள் சாதாரணமானவர்கள். அவர்கள் எதிர்கொள்கிற  விஷயங்கள் அசாதாரணமானது...’’ வர்ணம் தீட்டும் லாவகத்தோடு வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

‘மெர்க்குரி’, அதுவும் சைலன்ட் மூவி... இந்த ஐடியா எப்படி வந்தது?
ரொம்ப நாளாகவே மனதில் இருந்தது. ‘நாளைய இயக்குநரி’ல் பங்கு பெறும்போது ஒரு குறும்படம் இந்த விதத்தில் வந்திருக்கு. மணிகண்டன் கதையில் பாபி  நடிக்க நான் டைரக்ட் செய்திருக்கேன்.

ஒரே ஓர் இடத்தில் இருந்த டயலாக் தவிர அது சைலன்ட் படம்தான். அப்பவே அந்த சவால் பிடித்திருந்தது. டிராமாவில் ஆரம்பிச்சு பேசிப் பேசியே வளர்ந்திருக்கோம். ஆனால், சினிமா விஷுவல் மீடியம். இந்தப் படத்துல பரிசோதனை கிடையாது. ஃபெஸ்டிவல் படம்  கிடையாது. ஒரு த்ரில்லர். உங்களைச் சுறுசுறுப்பாக சீட் நுனியில் வைக்கக்கூடிய படம். 30 வருடங்களுக்கு முன்னாடி ‘பேசும் படம்’ வந்திருக்கு.

மொழி தேவைதான். ஆனால், அதுவே ஒரு தடையாகவும் இருக்கு. மொழியினால் சண்டை கூட வருது. ஒரு பெயின்டிங் இருந்தால், அதை தமிழ் பெயின்டிங்னு,  தெலுங்கு பெயின்டிங்னு அர்த்தப்படுத்திக்க முடியாது. அது ஒரு ஓவியம்... அவ்வளவுதான். அந்த ஓவியமே எல்லா உணர்வையும் கொண்டு போய்ச் சேர்க்கும்.  இந்தப் படத்தில் டப்பிங், ரூல், வரிகள்னு எதுவும் கிடையாது. மற்ற மொழிப் படத்திற்கான பிரச்னைகளும் இல்லை. இதில் திராவிட் மட்டும்தான்  ‘புகைபிடித்தல்’ எச்சரிக்கை கொடுத்து அந்தந்த மொழியில் பேசுவார். ஆக, இது எல்லா மொழியிலும் ரிலீஸ் ஆகப்போகிற மொழி இல்லாத படம்.

பிரபுதேவா உங்கள் வளையத்திற்குள் வந்தது எப்படி?
பிரபுதேவா இதற்கு முன்னாடி இப்படி செய்ததில்லை. டான்ஸ், ஆக்‌ஷன்னு, பெரிய இயக்குநர்னு போய்க்கிட்டு இருந்தவரை இதில் கொண்டு வந்தால்  நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அவரின் நடிப்புத்திறமை எனக்குப் பிடிக்கும். எளிதாக ஒரு விஷயத்தை, கடினம் இல்லாமல் காட்டி விடுவார். நடிப்புக்கு இதில்  நல்ல வேலை. என் படங்களில் நடிகர்களுக்கு நான் நடித்துக் காட்டுவது இல்லை. சூழலைக் காட்டி எமோஷன் சொல்லி அவர்கள் போக்குக்கு விட்டு  தேர்ந்தெடுப்பேன். ஒரு தடவை ரிகர்சல் பண்ணிக்கலாமான்னு ஆரம்பத்தில் பிரபுதேவாவைக் கேட்டேன்.

‘நானே பண்றேன், அப்புறம் திருத்தம் இருந்தால் சொல்லுங்க...’னு டேக்குக்கு போயிட்டார். அவர் செய்தது ஒவ்வொரு தடவையும் புதுசாகவும், நன்றாகவும்,  சரியாகவும் இருந்தது.  இப்படித்தான் வரணும்னு நான் நினைச்சு வைத்திருந்ததையும் தாண்டி அவர் ஒண்ணு செய்திருப்பார். அதுதான் அழகு. படத்திற்கு ரொம்ப  நியாயம் செய்கிற மாதிரியும் அது இருக்கும். சனந்த், தீபக், அனிஸ், சஷாங்க்னு... நாலு பசங்க. ‘மேயாத மானி’ல் நடிச்ச இந்துஜாவும் இருக்காங்க. என் அப்பா  கெஜராஜுக்கு ஒரு கேரக்டர் இருக்கு. நாலு பசங்க, இந்த பொண்ணு எல்லாம் ஒரு கட்டத்தில் பிரபு தேவாவை மீட் பண்ணுகிற இடம் வருது.

அதிலிருந்து அவர்கள் வாழ்க்கை எவ்விதம் மாறுகிறது என்பதுதான் கதை. எனக்கு கேமராமேனாக திருநாவுக்கரசு வந்தார். இப்படி பெரிய கேமராமேனோடு ஒர்க்  பண்ணினதும், இசை, சவுண்ட், நடிப்புனு பல இடங்கள் சிறப்பா வந்திருப்பதும் சந்தோஷமளிக்கிறது. மத்த படங்களில் ஷூட்டிங்கில் தப்பு பண்ணியிருந்தால்  டப்பிங்கில் சரி பண்ணிக்கலாம். ‘வாய்ஸ் ஓவர்’னு ஒரு பெரிய வரப்பிரசாதம் இருக்கு. மறந்ததை இன்னும் மெருகேத்த வைச்சு சரி பண்ணிடலாம். இங்கே அந்த  வேலையில்லை. நடிப்பை மட்டுமே நம்பியிருக்கணும். அதில் எல்லோரும் தன் கடமையைச் செய்த நல்ல அனுபவம் இருக்கு.

சந்தோஷ் நாராயணன் உங்களுக்காகவே உழைப்பார்...
அவருக்கு இதில் பாடலுக்கான சிரமத்தைக் கொடுக்கலை. பதிலாக பின்னணி. மத்த படங்கள் மாதிரி இதில் இசையை இட்டு நிரப்ப முடியாது. அமைதியான,  மவுனம் பேசும் இடங்களையும் தொந்தரவு செய்யாமல் விடணும். அதை அப்படியே அருமையாகச் செய்திருக்கார். ஒரு பெரிய Standard-னு சொல்வாங்க  இல்லையா, அது இருக்கு. சவுண்ட் இதில் பேசப்படும். மிக நுட்பமான விதத்தில் குணால் ராஜன் செய்திருக்கார். லாஸ் ஏஞ்சல்ஸில் மிக்ஸிங் செய்தோம். படம்  பாக்கிறதை ஓர் அனுபவமாக மாத்த பாத்திருக்கோம்.

சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த்... அடுத்த இடத்திற்கு நகர்ந்து விட்டீர்கள்...
ரஜினியை ரொம்ப ரசித்திருக்கேன். Larger than life-னு சொல்வாங்களே அப்படிக்கூட நினைச்சுப் பார்த்திருக்கேன். ஒரு fantasy மாதிரியாகவும் அவர்  படங்களை உணர்ந்திருக்கேன். ‘பீட்சா’ பார்த்திட்டு அவர் எனக்கு போன் பண்ணினது கூட என் வாழ்க்கையில் பெரிய சாதனைதான். மதுரையில் இருக்கேன்.  எங்கையோ போய்க்கிட்டு இருக்கேன். அலைபேசியில் அழைப்பு வருது. அது ரஜினி. ‘‘பீட்சா’ பார்த்தேன். ரொம்ப அருமையா இருக்கு. உங்களை மாதிரி  இளையவர்கள் வரணும்...’னு சிற்சில மயக்கம் தரும் சொற்களைப் பேசினார்.

அந்த சந்தோஷத்தை இன்னும் யாரிடமும் நான் அனுபவிச்ச மாதிரி சொல்ல முடியலை. அவர் போன் செய்தததையே பெரிய வெற்றியா பார்த்தவன் நான். திரும்ப  சென்னைக்கு வந்து ‘லிங்கா’ ஷூட்டிங்கில் பார்த்தேன். ‘‘ஜிகர்தண்டா’வில் பாபி கேரக்டர், ‘16 வயதினிலே’ பரட்டை மாதிரி இருந்தது...’னு சொன்னார்.  ‘உங்களை மனசுல வைச்சுக்கிட்டுதான் அந்த கேரக்டரை எழுதினேன்...’னு சொன்னேன். ‘ஆஹா... என்னைய கூப்பிட்டிருக்கலாமே...

நானே நடிச்சிருப்பேன்...’ என சத்தமா சிரித்தார். அந்த சந்திப்பில் பாபியும் இருந்தார். அப்போது, நானும் நல்ல கதை சொன்னால், அவரைக் கவர்ந்தால் என்  படத்திலும் நடிப்பார்னு பட்டுவிட்டது. பிறகு இரண்டு படம் மட்டுமே செய்திருந்த பா.இரஞ்சித்திற்கு படம் கொடுத்தபோது என் நம்பிக்கை இரட்டிப்பானது. இப்போது  கைகூடியிருக்கு. ‘சன் பிக்சர்ஸ்’, சூப்பர் ஸ்டாருடன் நானும் இணைகிற இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். 

- நா.கதிர்வேலன்