ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 69

மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தங்கள் இயல்பை தொலைத்து விடுபவர்களே படைப்பாளிகள். சமயத்தில், அந்த  மிகை உணர்ச்சிகளே அவர்களைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. சராசரியிலிருந்து  தங்களை வேறுபடுத்திக்காட்ட  மிகை உணர்ச்சிகள் பயன்பட்டாலும், அளவுக்கு மீறிப் போகும்போது அவ்வுணர்ச்சிகள் ரசிக்கப்படுவதில்லை.

அதிலும் கவிஞர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எதையுமே அவர்கள் கொஞ்சம் அதிகமாகப் பார்த்துப்  பழகியவர்கள். இயல்புக்கு மீறிய சிந்தனையிலும் கற்பனையிலும் சதா உழலும் அவர்கள், தங்கள் படைப்பூக்க சக்தியை  மிகையுணர்ச்சிகளிலிருந்தே பெறுவதாக நம்புகிறார்கள்.

இதிலிருந்து தம்மை விடுவித்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கவிதை எழுதி வருபவர் ஈரோடு தமிழன்பன்.  திராவிட முகாமைச் சேர்ந்த தமிழன்பனை, மார்க்சிய அறிஞரான கலாநிதி க.கைலாசபதி கொண்டாடியிருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்கத்தின் பிரதான கொள்கைகளையும் பொதுவுடமைக் கருத்துகளையும் தம் கவிதைகளில்  ஒருசேரக் கொணர்ந்த தமிழன்பன், பாரதிதாசனையும் பாப்லோ நெருடாவையும் இரு கண்களாக ஏற்றுக்கொண்டவர். நெருடா மார்க்சியத்தை முன் நிறுத்தியவர். பாரதிதாசனோ தமிழியக்கத்தைப் பின் பற்றியவர். இரண்டு பெரும்  பாதைகளின் வழியே நடந்த பயணம்தான் தமிழன்பனுடையது.

எழுத்துமுறையில் பாரதிதாசனையும் சிந்தனைமுறையில் பாப்லோ நெருடாவையும் பின் பற்றிய தமிழன்பன், தமிழின்  தொடர்ச்சியை உணர்ந்தவர் மட்டுமல்ல; அதை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப்போகவும் உழைத்திருப்பவர். மேலெழுந்தவாரியாக அவருடைய கவிதைகளை வாசிப்பவர்கள் இந்த நுட்பத்தை விளங்கிக்கொள்வதில் தோற்றுவிடுவர்.  ஆனால், அவருடைய கவிதைகளை ஆழ்ந்து வாசித்து மதிப்புரை எழுதியிருக்கும் கா.சிவத்தம்பியும், கோவை ஞானியும்  தமிழன்பனின் தகுதியை உயர்த்தியே சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவருமே மார்க்சியத்திலும் தமிழிலக்கியத்திலும் கரைகண்டவர்கள் என்பதை நான் சொல்ல  வேண்டியதில்லை. அவர்கள் இருவருடைய கணிப்பிலும் தமிழன்பன், தமிழின் முக்கியக் கவியாக அடையாளப்  படுத்தப்பட்டிருக்கிறார்.தொண்ணூறுகளில் தீவிரமாக எழுதத் தொடங்கிய எனக்கு, தமிழன்பனின் கவிதைகளே பற்றி  ஏறும் சாரமாகப் பயன்பட்டன. மரபாயினும் புதிதாயினும் தனக்கென தனியான அடையாளத்துடன் எழுதக்
கூடியவரே அவர்.

படிமத்திற்குள் படிமம் என்பதாக அவர் கவிதைகளை எழுதிச்செல்லும் விதம் அசாத்தியமானது. ஓர் எளிய வாசகனுக்கு முதல் வாசிப்பிலேயே புரிந்துவிடக் கூடியதாக அவர் கவிதைகள் இருந்ததில்லை. இரண்டாவது மூன்றாவது வாசிப்பில்தான் அவர் கவிதைகளுக்குள் நுழைய முடியும். வாசிப்பவனின் தயவையும்  பங்களிப்பையும் கோரிப் பெறுபவை அவருடைய கவிதைகள்.

நான் சொல்வது, ஆரம்பகாலங்களில் வெளிவந்த அவருடைய கவிதைகளைப் பற்றியே. பின்னால் வெளிவந்த கவிதைகளில் பலவும் நேரடித் தன்மையைக் கொண்டுள்ளன.‘மின்மினிக் காடு’, ‘சூரியப் பிறைகள்’, ‘மழை மொக்குகள்’,  ‘கவின்குறு நூறு’ ஆகிய நூல்களில் அவர் கவிதைகளை நேர்கோட்டுக்குக்கொண்டு வந்திருக்கிறார்.

‘‘ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பி வந்த பிணம் திடுக்கிட்டது, தனது கல்லறையில் வேறொரு பிணம்...” எனவும்,  ‘‘சிறைக்கம்பிகளுக்கு நிறம்பூசும் நிலா, பாதங்களில் பகலுக்கு விலங்கு...’’ எனவும், ‘‘கோளக்கொல்லை  பொம்மைக்குக் கோபம், குருவிக் குல்லாயில் முட்டையிட்டபோது...” எனவும், படிமங்களாலேயே கவிதையை  வளர்த்துக்கொண்டு போன அவர், ஒருகட்டத்தில் “யார் உடைத்தாலும் / யாழ் உடைந்துவிடும் / ஆனால், யார்  மீட்டினாலும் யாழ் இசைதருமா..?’’ என்று எளிமையாகவும் எழுதியிருக்கிறார்.

எளிமையென்பது வாசிப்பவரின் அறிவுமட்டத்தைச் சார்ந்ததுதான். எந்த அளவுக்கு ஒருவர் வாசித்திருக்கிறாரோ அந்த  அளவுக்கே அவரால் ஒரு கருத்தையோ படைப்பையோ புரிந்துகொள்ளமுடியும். வாசிக்க வாசிக்க சிக்கலான  விஷயங்கள்கூட சிரமமில்லாமல் புரிந்துவிடும். வெளிப்படை அல்லது நேரடித் தன்மையுடன் ஒரு கவிதை  இருக்கவேண்டும் என்றோ இருக்கக் கூடாதென்றோ படைப்பாளனின் சுதந்திரத்தில் நாம் தலையிடமுடியாது.

இருந்தபோதிலும், பெருவாரி யானவர்களுக்குப் புரியாமல் போகுமெனில், அப்படைப்பினால் அல்லது அக்கருத்தினால்  என்ன பயன் என்பதைக் கேட்காமல் இருப்பதும் முறையல்ல.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து கவிதையெழுதுவதில் அலுப்போ சலிப்போ இல்லாமல் இயங்கிவரும் தமிழன்பன், கவிதைகளை வெவ்வேறு வடிவங்களில்  எழுதிக் காட்டுபவர்.

“பத்தாவது முறையும் / பாதம் தடுக்கி விழுந்தவனை / பூமித்தாய் முத்தமிட்டுச் சொன்னாள் / ஒன்பதுமுறை  எழுந்தவனில்லையா நீ...” என்னும் கவிதையைக் கேட்டிராதவர்கள் குறைவு.தன்னம்பிக்கை பேச்சாளர்கள் தவறாமல்  மேடைதோறும் மேற்கோள் காட்டும் இக்கவிதையை அவரவர் வசதிக்கேற்ப யார் யாரோ எழுதியதாகச் சொல்வதுண்டு.  எந்த இடத்திலும் இது என்னுடையதாயிற்றே என்று உரிமை கொண்டாடும் வழக்கம் தமிழன்பனிடம் இருந்ததில்லை.

தமிழில் மிக அதிகமான கவிதைகளை எழுதியவரும், எவ்வளவு எழுதியும் எழுத்தின் மீதுள்ள விருப்பத்தைக் குறைத்துக்  கொள்ளாதவரும் அவரென்றால் மறுப்பதற்கில்லை.நிறைய எழுதும்போது ஒரே மாதிரியான படிமங்களும் குறியீடுகளும்  நம்மையுமறியாமல் வந்துவிடும்.நிலவைப் பற்றி எழுதுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். எத்தனைமுறை நிலவை  எழுத முடியும்? நிலவின் தன்மைக்கு முரணாகவும் எழுத முடியாது. ஒரே நபர் ஒவ்வொருமுறையும் நிலவை  எழுதுகிறபோது வெவ்வேறு மாதிரியும் எழுத வேண்டும்.

இந்த சவாலைச் சாமர்த்தியமாகக் கடந்தவர் தமிழன்பன். நிலா நிழல், நிலவின் ஒளி, நிலாச் சும்மாடு, நிலவின் கரை,  நிலவின் தறி என்பதாக வார்த்தைகளைப் பிரயோகித்து கூறியது கூறலைத் தவிர்த்துவிடுவார். இயற்கையைப்  பாடுபொருளாகக் கொள்ளும்போது, இப்படியான சிக்கல் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால், அதை அவர்கள் எப்படித்  தாண்டுகிறார்கள் என்பதில்தான் வித்தையிருக்கிறது.

எண்ணிய சிந்தனையை வெளிப்படுத்தும்போது உரிய படிமத்தையோ உரிய குறியீட்டையோ கொள்ளவில்லையெனில்,  சிந்தனை மாறுபட்டுவிடும். சிந்தனையையும் சொல்லவேண்டும். அதே சமயம், அது ஒரே மாதிரியும் இருக்கக்கூடாது.ஒரு சில ஆண்டுகள் தீவிரமாக இயங்கிவிட்டு, பின் கவிதைகளே எழுதாமல் பலர் போவதற்கான காரணம் இதுதான்.  ‘சொல் புதிது, பொருள் புதிது...’ என்று பாரதி சும்மா சொல்லவில்லை. எதைச் சொன்னாலும் புதிது தேவை. புதிது  இருந்தால்தான் கவனிக்கப்படும்.

‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ என்னும் தலைப்பில் 1982ல் வெளிவந்த தமிழன்பனின் கவிதை நூலுக்குக்  கிடைத்த வரவேற்பு, தமிழ்க் கவிதைகளின் சொல்நெறியையே மாற்றியது.நா.காமராசனின் ‘கருப்பு மலர்கள்’,  மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’, மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ ஆகிய நூல்கள்  புதுக்கவிதைகள் மீது தமிழறிஞர்கள் கொண்டிருந்த தயக்கத்தை உடைத்தெறிந்தன.

“வாழும் மனிதனுக்குக் குடிசையில்லை / மாண்டு போனவர்க்கு மண்டபங்கள்...” என்பது உரைநடையை உடைத்துப்  போட்டதுபோலத் தோன்றலாம். ஆனால், அப்படியொரு மொழியமைப்புக்குள் கவிதையைக் கொண்டுவர நெடுங்காலம் பிடித்தது.இலக்கணச் சட்டகத்திற்குள்ளேயே இயங்கிவந்த தமிழ்க் கவிதை மரபை, அவ்வளவு எளிதாக உதற  முடியாத சூழலே வெகுகாலம்வரை நிலவியது. எதுகையும் மோனையும் இல்லாமல் எழுதுவது கவிதையில்லை என்று  சொல்லக்கூடியவர்களிடம்தான் அன்றைய இலக்கியத் தராசுகள் இருந்தன.

புதுக்கவிதைகள் என்றால் தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்றும் இலக்கணம் தெரியாதவர்கள் எழுதும் தளர்ந்த கவிதைகள்  என்றும் புரிந்து வைத்திருந்த இலக்கிய உலகுக்கு, தமிழன்பன் போன்றோர் புதுக்கவிதை எழுத வந்தபிறகே, எது கவிதை  என்னும் தெளிவு ஏற்பட்டது.இன்றைக்கு வேண்டுமானால், நவீன கவிஞர்களாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், புதுக்கவிதைகளைக்  கிண்டலடிக்கலாம். வார்த்தைகளை மடக்கிப்போட்டால் கவிதையா? எனக் கேட்கலாம். வெற்றுக் கூச்சலும் பிரச்சார நெடியுமா கவிதை என்று விமர்சிக்கலாம்.

ஆனால், ஆரம்பகாலங்களில் புதுக்கவிதை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெரும்பாடுபட்டிருக்கிறது. பாரதிதாசனின்  சீடராகத் தன்னை அறிவித்துக்கொண்ட தமிழன்பன், புதுக்கவிதையின் சகல தன்மைகளையும் உள்வாங்கி  வெளிப்படுத்தியவிதம் மேலோட்டமானதில்லை. எல்லோரும் புதுக்கவிதைக்கு வந்துவிட்டார்கள். அதனால், நானும்  வருகிறேன் என்று அவர் புதுக்கவிதையை எழுதவில்லை. புதுக்கவிதையை ஏற்பதற்கு முன், உலகக் கவிதைகளின், கவிஞர்களின் போக்கையும் உற்றுணர்ந்தே எழுத வந்திருக்கிறார்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பதோடு நின்றுகொண்டிருந்த தமிழுக்கு, ஹைக்கூவையும் சென்ரியூவையும்  கொண்டுவந்ததில் அவருடைய பங்கும் இருக்கிறது. கவிக்கோ அப்துல்ரகுமான், ஹைக்கூவை கலையழகுடன்  அறிமுகப்படுத்தினார் எனில், அதை சமூக நோக்குடன் எழுதலாமென எழுதிக்காட்டி ஆச்சர்யப்படுத்தியவர் தமிழன்பன்.“கோடித்துணியை / வெட்டியான் உருவியதும் / குப்புறத் திரும்பிக்கொண்டது பிணம்...” எனவும், “ஆகாயமும் அழகு /  பூமியும் அழகு / ஆம் என் கையில் ரொட்டித்துண்டு...” எனவும் அவர் எழுதும்வரை ஹைக்கூவில் இப்படியும்  சிந்திக்கலாம் என்பதை தமிழ்க் கவிதையுலகம் அறிந்திருக்கவில்லை.

ஹைக்கூவின் இலக்கணத்திற்கு ஏற்ப மேற்கூறியவை இருக்கின்றனவா என்பதைத் தாண்டி, ஹைக்கூவைத்  தமிழ்ப்படுத்தியவர் அவரே. ஒருவரியில் ‘ஆத்திச்சூடி’, இருவரியில் ‘திருக்குறள்’, மூன்றுவரியில் ‘பழமொழிகள்’,  நான்குவரியில் ‘நாலடியார்’, ஐந்து வரியில் ‘ஐங்குறுநூறு’ என வரிகளைக் கணக்கிட்டு எழுதிப்பார்த்த சமூகம்  நம்முடையது. அப்படியிருந்தும், ஜப்பானிய ஹைக்கூவை வரவேற்கவே செய்திருக்கிறோம். எழுத்துருக்களைச்  சீர்திருத்தியது போலவே கவிதைகளின் வடிவங்களையும் சீர்திருத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறோம்.

(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்