காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 50

பாப்லோவின் உறவினர்களும், சகாக்களும் மட்டுமல்ல. எஸ்கோபாரை ஆதரித்தார்கள் என்கிற காரணத்துக்காக அப்பாவி  இளைஞர்கள் பலரும் கொல்லப்பட்ட அக்கிரமத்தை அன்றைய கொலம்பிய கெட்ட போலீஸ், எவ்விதமான தயக்கமும்  இன்றி அரங்கேற்றியது.

மெதிலின் புறநகர் பகுதியான அரான்ஜுவேஸில் நடந்த சம்பவம் ஓர் உதாரணம். அங்கிருந்த குடியிருப்புப் பகுதி  ஒன்றுக்கு விலையுயர்ந்த எஸ்யூவி கார் ஒன்று திடீரென வந்தது. ஒரு பள்ளி மைதானத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டது.  இதுபோன்ற சொகுசுக் கார்களில் கார்டெல்காரர்கள்தான் வருவது வழக்கம்.

கண்ணாடிகள் மொத்தமும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, காருக்குள் யார் இருந்தது என்றே தெரியவில்லை. கதவைத் திறந்து  கொண்டு ஆறேழு பேர் திடீரென வெளியேறி வந்தனர். அத்தனை பேரின் கைகளிலும் மெஷின் கன் இருந்தது.நிதானமாக வந்தவர்கள் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டினர். ஒரே ஒரு கேள்விதான்.

“பாப்லோ எங்கே?”“தெரியாது...” என்று பதில் சொன்னவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்கள். இளம்  பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு பள்ளி மைதானத்தில் பாலியல்ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டனர். இளைஞர்களை  கொத்தாக இழுத்துச் சென்றார்கள்.

ஓரிரவு முழுக்க ஆயுதம் தாங்கிய போலீஸாரால் அரான்ஜுவேஸ் குடியிருப்புவாசிகள் கடுமையாக சித்திரவதை  செய்யப்பட்டனர்.விடிந்தபோது அந்தக் கார் அங்கே இல்லை.மாறாக, மைதானத்தில் ஆங்காங்கே இளைஞர்களும்,  இளம்பெண்களும் சடலங்களாக வீழ்ந்துகிடந்தனர்.இந்த சித்திரவதையில் இருந்து தப்பிய வயதான தம்பதியினர்,  தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பாப்லோ எஸ்கோபாரிடம் நேரடி வாக்குமூலமாகவே சொன்னார்கள்.

அரான்ஜுவேஸ் மட்டுமல்ல, மெதிலின் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற சித்திரவதைகள் தொடர்ந்தன.டீகோ மாபாஸ் என்கிற கார்டெல் டான் ஒருவர், மெதிலின் நகரிலிருந்து பொகோடாவுக்கு வியாபார நிமித்தம் காரில்  சென்றார். மெதிலினிலிருந்தே அவரது கார் பின்தொடரப்பட்டது அவருக்குத் தெரியாது. பொகோடா நகருக்குள்  நுழைவதற்கு முன்பாக டீகோ வழிமறிக்கப்பட்டார்.

காரிலிருந்து அவரையும், அவரது மெய்க்காவலர்களையும் இழுத்துப் போட்டு போலீஸ் அடித்தது. ஒரு வேனில்  மொத்தமாக அடைக்கப்பட்டு எங்கோ இழுத்துச் செல்லப்பட்டார்கள். இன்றுவரை அவர்களது பிணம் கூட  கிடைக்கவில்லை. போலீசில் லெப்டினன்ட் பதவியில் இருந்த போராஸ் என்பவர் பாப்லோ எஸ்கோபாரின் விசுவாசியாக  இருந்தார். கார்டெல்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனம் செய்து கொண்டிருந்த கெட்ட போலீஸின் நடவடிக்கைகளை  அவர்தான் பாப்லோவுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்.

‘சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அநியாயம் செய்யும் போக்கை  சட்டரீதியாக எதிர்கொள்ளுங்கள்’ என்று பாப்லோ அவரிடம் கோரிக்கை வைத்தார். போராஸ், தன்னுடைய  மேலதிகாரிகளிடம் இந்த கெட்ட போலீஸின் நடவடிக்கைகளைப் பற்றி புகார் சொன்னார். மாகாண நீதிபதியின்  பார்வைக்கும் இந்த அநியாயங்களை ஆதாரபூர்வமாகக் கொண்டு சென்றார்.

நியாயம் கேட்டவருக்கே அநியாயம்தான் பதிலாகக் கிடைத்தது.போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதை  மருந்து கடத்துவதாகக் கூறி போராஸை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பாப்லோ, சிறையிலிருந்த  தன்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி போராஸ் தப்பிக்க வழிவகையை உருவாக்கினார். சிறையில் இருந்து தப்பிய  போராஸ், சில வாரங்கள் கழித்து நடுத்தெருவில் நாயைப் போல சுடப்பட்டு வீழ்ந்துகிடந்தார்.

போராஸுக்கு நேர்ந்த கதியைப்  பார்த்த நல்ல போலீஸ், ஊழல் அதிகாரிகளுக்கு ஊதுகோலாக மாறாவிட்டால்  தங்களுக்கும் இதே கதிதான் என்று நினைத்தார்கள். மனசாட்சி இருந்த பலரும் போலீஸ் வேலையை ராஜினாமா  செய்துவிட்டு ஊருக்குப் போய் பண்ணை வைத்து பிழைத்தார்கள்.

போலீஸ், போதை கும்பலை சமாளிக்க புதிய புதிய நடவடிக்கைகளை எடுத்தார்கள். மூன்று, நான்கு போலீஸாரை  வைத்து ஒரு ஸ்டேஷன் என்று நூற்றுக்கணக்கான ஸ்டேஷன்களை மெதிலின் நகரில் தெருவுக்குத் தெரு திறந்தார்கள்.  ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் நவீன கொலை ஆயுதங்கள் நிரம்பிக் கிடந்தன.என்ன செய்தாலும் மேலிடம்  கண்டுகொள்ளாது என்கிற நிலையில் போலீஸ்காரர்கள் தங்களுடைய மன வக்கிரங்களை பொதுமக்களிடம் காட்ட  ஆரம்பித்தார்கள்.

செக்போஸ்டுகளில் வாகனங்களை நிறுத்துவார்கள். தகுந்த பேப்பர் இல்லையென்றால் டுமீல்தான். சின்னச் சின்ன  விஷயங்களுக்குக் கூட துப்பாக்கியை நீட்ட ஆரம்பித்தார்கள். போலீஸ், தங்களை குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்றும்  என்கிற நிலை போய், போலீசிடமிருந்து தங்களை கிரிமினல்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைக்கு  வந்திருந்தார்கள் பொதுமக்கள்.

1988ஆம் ஆண்டு வாக்கில் இந்த சூழல்.வேறு வழியின்றி போலீசுடன் போர் புரிவது என்கிற நிலைக்கு பாப்லோ  எஸ்கோபார் வந்திருந்தார். பாப்லோவின் ஆட்கள் துப்பாக்கியும், வாளுமாக தெருவில் இறங்கினார்கள். கண்ணில் பட்ட  போலீஸையெல்லாம் சுட்டார்கள். வெட்டிச் சாய்த்தார்கள். சேரிகளுக்கு பாதுகாவலர்களாக நின்றார்கள். காவலர்  குடியிருப்புகள் ஒட்டுமொத்தமாக இவர்களால் வேட்டையாடப்பட்டன. கொலம்பியாவில் போலீஸுக்கே பாதுகாப்பு  தேவைப்படும் நிலை ஏற்பட்டது.

சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து அதிகாரிகளைப் போட்டுத் தள்ளிவிட்டு, அசால்ட்டாக  போய்க் கொண்டிருந்தார்கள்.போலீசைக் கொன்றவர்களுக்கு உரிய வெகுமதியை பாப்லோ அளித்தார். கொல்லப்பட்ட  போலீஸ்காரரின் பதவிக்கு ஏற்ப ஆயிரம் டாலரிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு டாலர் வரை இந்த சன்மானம்  வழங்கப்பட்டது.

‘போலீசைக் கொன்றால் பணம்’ என்கிற இந்த பணக்கார விளையாட்டை விளையாட போக்கிரிகள் மட்டுமின்றி,  சாதாரண பொதுஜனங்களும் ஆர்வம் காட்டினார்கள். டிராஃபிக்கில் தங்கள் வண்டியைக் கை காட்டி நிறுத்தியவரை  கழுத்தறுத்தார்கள். போலீஸ் நிலையங்கள் மீது வெடிகுண்டு வீசினார்கள். எங்காவது தனியாக போலீஸ்காரர் சிக்கினால்  அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.

தாங்கள் செய்த இந்த சாதனைகளை அவர்கள் மறைக்க விரும்பவில்லை. மாறாக ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டி  பாப்லோவிடம் பணம் பெற்றார்கள்.ஒருகட்டத்தில், நான் இத்தனை போலீஸ்காரர்களை இன்று கொல்லப் போகிறேன்  என்று முன்பே அறிவித்துவிட்டு அட்வான்ஸ் வாங்கிச் செல்லுமளவுக்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது.


பல்லாயிரக்கணக்கான போலீசார் பொதுமக்களாலும் போக்கிரிகளாலும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு  நிவாரணம் கொடுத்தே அரசாங்கம் திவாலாகி விடுமோ என்கிற நிலைமை.“அவர்கள் என்னை கொல்ல முயன்றார்கள். பதிலுக்கு நான் அவர்களைக் கொன்றேன்...” என்று இந்த சம்பவங்களை  ஒருமுறை நியாயப்படுத்தினார் பாப்லோ எஸ்கோபார். போதை கடத்தல்காரர்கள், பொதுமக்களை கிரிமினல்களாக  உருமாற்றிய இந்த சம்பவம் உலகில் வேறெங்கும் நடந்ததில்லை. குழம்பிப் போன கொலம்பிய அரசு, சட்டத்தின்  அடிப்படையில் யோசிக்கவில்லை. மாறாக கிரிமினல்கள் எப்படி யோசிப்பார்களோ அப்படி யோசித்தது.

கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் வேலையை கிரிமினல்களுக்கு கொடுத்தது. இந்த கிரிமினல் போலீஸ் மூர்க்கமாக  பொதுமக்கள் மீது பாய, பொதுமக்கள் இவர்கள் மீது பாய... யாருமே நகரில் உயிரோடு மிஞ்ச மாட்டார்களோ என்கிற  அளவுக்கு வன்முறை சூழல்.பாப்லோ, நாட்டின் அதிபர் சீசர் கவேரியாவுக்கு கடிதம் எழுதி, இந்த வன்முறை  வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னார். ஏனெனில், இந்த விளையாட்டு ஒருகட்டத்தில் அவர் கையை  மீறிப் போய்விட்டது. அதிபரின் நிலையும் அதுவே. அவரால் கிரிமினல் போலீசாரின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த  முடியவில்லை.அரசாங்கமும், கார்டெல்களும் பரஸ்பரம் புலிவாலைப் பிடித்துவிட்டு எப்படி விடுபடுவது என்று  தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்கள்.

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்