சாதிப் பிரச்னைகளுக்குப் பின்னணியாக இருக்கிறதா விவசாயம்?



காரணங்களை அடுக்குகிறார் பொருளாதாரப் பேராசிரியர்

‘‘‘இந்தியா ஒரு வல்லரசு’ என்கிற கனவில் ‘விவசாய நாடு’ எனும் பெரும் பெயரை இழக்கப்போகிறது.  விவசாயத்தை நல்ல வருமானம் தரும் ஒரு தொழிலாக, ஏற்றுமதிக்கான ஒரு தொழிலாக, பெருமைமிக்க ஒரு  தொழிலாக மாற்றும்போதுதான் இந்தியா செழிப்புமிக்க நாடாக மிளிரும். இதை எப்போது அரசு புரிந்துகொள்கிறதோ  அப்போதுதான் இந்திய விவசாயி கோவணத்தை தூக்கிப்போடும் காலம் வரும்...’’
 
நச்சென்று ஆரம்பித்தார் விஜய பாஸ்கர். தமிழகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சிகளை ஆய்வு செய்யும்  ‘எம்.ஐ.டி.எஸ்.’ என்கிற ஆய்வு நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் இவர்.கடந்த வாரம் மும்பை நகரத்தின்  நெருக்கடியான தெருக்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 50 ஆயிரம் விவசாயிகள் பல கி.மீ. தூரம் நடந்து பேரணியாக  வந்தபோது இந்தியாவே குலுங்கியது.

விவசாயிகளுக்குப் பல இடங்களில் இருந்து ஆதரவுக் கரங்கள் நீண்டன. அந்த எளிய மனிதர்களின் ஒற்றுமையும்,  போராட்டமும் பெரும் வெற்றி கண்டது. அடுத்து லக்னோவிலும் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. இந்தச்  சூழலில் இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கான பின்னணியை ஆராய்கிறார் விஜயபாஸ்கர்.

‘‘இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு விவசாயத்தின் மூலம் கிடைத்த தேசிய வருமானம் 50%. ஆனால், போகப் போக  இந்த வருமானம் குறைந்துகொண்டே வந்தது. அதுவும் கடந்த 20 வருடங்களில் அதலபாதாளத்துக்குள் சென்றுவிட்டது.  இப்போது வெறும் 16%தான் தேசிய வருமானமாகக் கிடைக்கிறது.

ஆனால், விவசாயிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 50%. 16% வருமானத்தை 50% விவசாயிகளுக்குப்  பங்கு பிரிக்க வேண்டும். எப்படி இது அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்? விவசாய வருமானம்  குறைந்துகொண்டிருந்த காலத்தில் மற்ற தொழில்களில் கிடைக்கும் வருமானம் கூடிக்கொண்டே போனது. அதனால்தான் விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்றார்கள்....’’ என்றவர் விவசாய  நிலங்களைப் பற்றி விவரித்தார்.

‘‘இந்தியாவில் சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளைவிட நிலமில்லாத விவசாயிகள்தான் அதிகம். ஒரு  காலத்தில் விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பு அதிகமாக இருந்தது. விவசாய வருமானம் குறைந்தது போல  நிலப்பரப்பின் அளவும் கால ஓட்டத்தில் குறைந்துபோனது. ‘2012, 2013களில் ஓர் இந்திய விவசாயி சராசரியாக 2  ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதாக’ அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது சொந்த நிலமா அல்லது  குத்தகையா என்று தெளிவாகச் சொல்லப்படவில்லை. விவசாயம் நடைபெறும் நிலப்பரப்பைக் கொண்டு இந்த நில  அளவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மும்பையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், ‘தாங்கள் விவசாயம் செய்யும் நிலத்தை தங்களுக்கே  கிடைக்கும்படி அரசு ஆவன செய்யவேண்டும்...’ என அந்த விவசாயிகள் கோரியிருந்தார்கள். இதிலிருந்து அதை  ‘நிலமில்லா விவசாயிகளின் போராட்ட’மாக நிபுணர்கள் பார்க்கிறார்கள்...’’ என்றவரிடம், ‘விவசாயக் குடும்பம் என்று  யாரைச் சொல்லலாம்..?’ என்று கேட்டோம்.

‘‘‘ஒரு விவசாயக் குடும்பம் வருடத்துக்கு குறைந்தபட்சமாக 3000 ரூபாயாவது விவசாயத்திலிருந்து சம்பாதிக்க  வேண்டும். அடுத்து அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவராவது விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ வேண்டும்...’ இது  இரண்டும் உள்ள ஒரு குடும்பத்தைத்தான்  விவசாயக் குடும்பமாக அரசு சொல்கிறது. இதை வைத்துக்கொண்டு ஓர்
ஆய்வையும் நடத்தியது.

அதன்படி கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களில் சுமார் 58% விவசாயக் குடும்பங்களாக உள்ளன. வருமானத்தை  ஆய்வு செய்தபோது விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு, சுயதொழில், கூலிவேலைகள், சிறுசிறு வியாபாரம் மூலம் ஒரு  விவசாயிக்குக் கிடைக்கும் மாத வருமானம் 6400 ரூபாய். இதில் செலவு ரூ.6200. சராசரியாக 5 பேர்கொண்ட ஒரு  விவசாயக் குடும்பம், வெறும் 6400 ரூபாயை வைத்துக்கொண்டு இக்காலத்தில் என்ன செய்யும்? இதனால்தான்  தங்களின் பிள்ளைகள் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடாது என்று அவர்களைப் படிக்க அனுப்பினார்கள்.

இதற்காக கடன் வாங்கினார்கள். அதற்குப் பிறகு நடந்ததுதான் கொடுமை. படித்த பிள்ளைகளுக்கு வேலை  கிடைக்கவில்லை. விவசாயத்தில் வருமானம் இல்லை. விவசாயத்துக்கும், கல்விக்கும் வாங்கிய கடனை அடைக்க  வழியில்லை. இதுதான் இந்திய விவசாயிகளைத் தற்கொலைக்கு இட்டுச் சென்றது...’’ என்றவர், விவசாயிகளின்  பிரச்னைக்கும், சாதிப் பிரச்னைக்கும் இடையே உள்ள தொடர்பைப் பகிர்ந்தார்.

‘‘விவசாயத்துக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே போனது. செலவுக்கும்  வருமானத்துக்கும் கட்டுப்படியாகவில்லை. மற்ற தொழில்களில் கிடைத்த வருமானம் விவசாயத்தில் கிடைக்கவில்லை. இதனால் விவசாயத்துக்கும் மற்ற தொழில்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்தது. இந்த ஏற்றத்தாழ்வு  விவசாயிகளிடம் எரிச்சலை உண்டாக்கியது.

உண்மையில் தமிழகத்தின் சாதிப் பிரச்னைகளுக்கு இதுதான் முக்கியமாக இருக்கிறது. ஆனால், சாதிப் பிரச்னைகளை  ஆராயும் அறிஞர்கள் இந்தப் பொருளாதாரப் பின்னணியை அறியாமல் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘தாழ்த்தப்பட்ட -  இடைநிலை’ சாதிகளுக்கு இடையில் நடக்கும் மோதல்களை ‘உயர்ந்த - கீழுள்ள’ சாதிகளுக்கு இடையே நடக்கும்  மோதல்களாகவே பார்க்கிறார்கள்.

இது தவறு. காரணம், ஓர் இடைநிலை சாதிக்குள்ளேயே விவசாயம் செய்பவர்கள், செய்யாதவர்கள் என்று இரு  பிரிவினர்இருப்பார்கள். அதேபோலத்தான் தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளேயும் இருப்பார்கள். உண்மையில் இரு  சாதிக்குள்ளேயும் இருக்கும் விவசாயம் செய்யும் மக்கள், அந்த விவசாயம் செய்யாத, ஆனால், நல்ல நிலையில்  இருக்கும் மக்களைக் கண்டு எரிச்சல் அடைவார்கள்.

கோபத்தை சொந்த சாதி மேல் திருப்ப முடியாது. ஆகவே எதிர்சாதி மேல் மொத்தமாக திருப்பிவிடுவார்கள். இதுதான்  சாதி மோதலாக உருவாகும்’’ என்றவர் விவசாயம் செய்வதில் உள்ள பொருளாதாரச் சிக்கல்களையும் பட்டியலிட்டார்.‘‘இன்று விவசாயம் செய்ய நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதேநேரம் செலவினங்களைச் சரிக்கட்டும்  விலைக்குப் பொருட்களை உடனடியாக விற்க முடிவதில்லை.

‘அரசு வாங்கும் விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும்’ என்று விவசாயிகள் கேட்பது  புரிகிறது. ஆனால், அதிக விலை கொடுத்து வாங்கிய பொருட்களை ஏழைகளுக்குத்தான் அதிக விலைக்கு விற்க  வேண்டும். ஓர் ஏழை விவசாயியை நல்ல நிலைக்குக் கொண்டுவர இன்னொரு ஏழையைச் சுரண்டுவது சரிப்பட்டு  வராது. மத்திய அரசு இந்தச் சிக்கலை சரி செய்யலாம். விவசாயத்துக்கான மானியங்களை நிறைய வழங்கலாம்.

இது பல ஆண்டுகளாகவே கடைப்பிடித்து வந்ததுதான். என்ன... உலகமயமாக்கலால் மத்திய அரசு மானியங்களைக்  குறைத்து வருகிறது. இது விவசாயத்தை வருமானம் குறைவுள்ள ஒரு தொழிலாக மாற்றியுள்ளது. இன்று ரேஷன்  அரிசிக்கு மத்திய அரசு அதிக விலையை நிர்ணயித்துள்ளது. ஆகவே, மாநில அரசுகள் அந்த விலையைக் கொடுத்து  வாங்கி ஏழைகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க வேண்டும். அதற்கு மாநிலத்துக்கு போதுமான வருமானம்  இருக்க வேண்டும். மாநிலத்தின் வருமானத்தைக் குறைக்கும் விதமாகத்தான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வந்தது. இதனால்  மாநிலங்களின் வருமானத்தில் இடி விழுந்தது.

தமிழகத்தைப் பொறுத்தளவில் டாஸ்மாக்கை அரசு முழுவதுமாக மூடாததற்குக் காரணமாக அதன்மூலம் கிடைக்கும்  மாநில வருவாயைச் சொல்கிறது. பத்திரப் பதிவு மற்றும் பெட்ரோல் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தவிர வேறு  வருமானங்கள் மாநிலங்களுக்கு இல்லை. இதனால் மாநிலங்களும் விவசாய செலவினங்களுக்கான மானியங்களை  அறிவிக்கப் போவதில்லை. இது விவசாயத்தை மட்டும் பாதிக்கப்போவதில்லை. படித்த கிராமப்புற இளைஞர்களின்  வேலையின்மைக்கும், குடும்பப் பிரச்னைக்கும், சமூக குற்றங்களுக்கும் இதுவே முக்கிய காரணமாகிவிடும்...’’ என்ற  விஜயபாஸ்கர் இப்போதுள்ள  நிலையைப் பற்றியும் சொன்னார்.

‘‘90களில் காங்கிரஸ் அரசு பொருளாதாரச் சுதந்திரத்தை அனுமதித்து உலகமயமாக்கலுக்கு வழிவகை செய்தது.  நிறைய விவசாயம் சார்ந்த மூலப்பொருட்கள், விளைபொருட்கள் குறைவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டன. இது இந்திய விவசாயத்தைப் பாதித்தது. சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் அரசு 2000ல் இந்திய விவசாயிக்கு ஆதரவான  காரியங்களில் ஈடுபட்டது. ஆனால், அடுத்து வந்த பி.ஜேபி. அரசு மீண்டும் காங்கிரஸ் செய்த பழைய தவறைத்தான்
செய்தது.

இது கடந்த 4 வருடங்களில் மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘எதையும் குறைந்த விலையில் அல்லது  இலவசமாகக் கொடுக்காதே’ என உலக வர்த்தக நாடுகள் இந்தியாவை மிரட்டுகின்றன. ‘பொதுத்துறைகளை மூடு.  அரசு செலவினங்களைக் குறை. எல்லாவற்றையும் தனியார் மயமாக்கு. சந்தைதான் விலையை தீர்மானிக்கும்’ என  இந்தியாவை ஒரு சந்தையாக மாற்ற உலக வர்த்தக நிறுவனங்கள் உத்தரவிடுகின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் ஓர் அரசு மக்களின் விருப்பப்படித்தான் நடக்கவேண்டும். ஆனால், இங்கு அப்படியில்லை. இந்தியாவில் அரசு எத்தனையோ தொழில்களுக்கு உதவி செய்கிறது. ஆனால், விவசாயம் என்று வருகையில் அதை  ஒரு மாற்றான் பிள்ளை போலப் பார்க்கிறது. இந்த நிலை மாறவேண்டும்...’’ என்கிறார் விஜயபாஸ்கர்.l

கோபத்தை சொந்த சாதி மேல் திருப்ப முடியாது. ஆகவே, எதிர்சாதியில் நல்ல நிலையில் இருக்கும் மக்கள்மேல்  திருப்பும்போது அது அந்த சாதியின் மீதான ஒரு எரிச்சலாகவே மாறிவிடுகிறது.

ஓர் ஏழை விவசாயியை நல்ல நிலைக்குக் கொண்டுவர இன்னொரு ஏழையைச் சுரண்டுவது சரிப்பட்டு வராது.

- டி.ரஞ்சித்