சென்னைக்கு இரட்டை தீபாவளி!



நவம்பரில் கொண்டாட வேண்டிய தீபாவளியை மார்ச் மாதமே, சென்னை கொண்டாடிவிட்டது! விளையாட்டு  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு தூக்கமே இல்லை. 17ம் தேதி சனிக்கிழமை  ‘சென்னையின் எஃப்.சி’ கால்பந்து அணி, பெங்களூர் அணியை அதன் மண்ணிலேயே 3 - 2 கோல் கணக்கில்  பந்தாடியது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்  போட்டியில் சென்னை வீரர் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, இந்தியா கோப்பையை வெல்ல  காரணமாக இருந்தார்!

ஐஎஸ்எல் வரலாறு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, வணிக ரீதியாகவும் வாரிக் குவிப்பதைத்  தொடர்ந்து, கால்பந்துக்கும் அம்மாதிரியான போட்டிகளை நடத்த வேண்டும் என்று 2013ல் திட்டமிடப்பட்டது.  இந்தியாவில் கிரிக்கெட் மதமாக மாறிவிட்ட நிலையில் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கே மரியாதை இல்லாமல்  போய்விட்டது. மேற்கு வங்கம், கேரளா, கோவா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே கால்பந்துக்கு மவுசு. இந்தியா  முழுக்க இவ்விளையாட்டை பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அனுமதி  அளித்தது.

ஐபிஎல் போட்டிகளைப் போலவே கால்பந்துக்கும் ஐஎஸ்எல் (Indian Super League) போட்டிகள் விறுவிறுப்பாக  வடிவமைக்கப்பட்டன.
கொல்கத்தா, பெங்களூர், சென்னை, தில்லி, கோவா, ஜாம்ஷெட்பூர், கேரளா, மும்பை, வடகிழக்கு ஒன்றியம், புனே  என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அணிகள் பிரிக்கப்பட்டன. கிரிக்கெட் மற்றும்  சினிமா நட்சத்திரங்கள் இந்த அணிகளை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். நம் சென்னை அணியின்  இப்போதைய உரிமையாளர்களாக பாலிவுட் நட்சத்திரம் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி மற்றும்  விட்டா டானி ஆகியோர் இருக்கிறார்கள்.

மெரீனா மச்சான்ஸ்


2014ல் நடந்த முதல் சீஸன் போட்டிகளிலேயே சென்னை அணி செமி ஃபைனல் வரை முன்னேறியது. கேரளாவிடம்  அரை இறுதியில் தோற்றது. 2015 சீஸனில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சியை அளித்தது.  அதன்பிறகு எப்படியோ தட்டுத் தடுமாறித்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் வீறுகொண்டு எழுந்து  இறுதிப் போட்டியில் கோவா அணியை வென்று முதன்முதலாக கோப்பையை வென்று ஆச்சரியப்படுத்தியது. 2016ல்  தொடர் தோல்விகளால் 7வது இடத்தையே எட்டியது.

மீண்டும் சாம்பியன்

கடந்த ஆண்டு அணியின் கோச்சாக பிரபல இங்கிலாந்து வீரர் ஜான் கிரிகோரி நியமிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ‘மெரீனா  மச்சான்ஸ்’ வீரர்கள் புத்துணர்வோடு இந்த சீஸனை எதிர்கொண்டார்கள். கோவாவுடனான முதல் போட்டியில்  தோற்றிருந்தாலும் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வென்று ஹாட்ரிக் வெற்றியை சுவைத்தார்கள். சென்னையின்  தொடர் வெற்றிக்கு மும்பை தடை போட்டது. அதன் பிறகு பெங்களூரோடு தட்டுத் தடுமாறி வெற்றி, கேரளாவோடு டிராவென்று தடுமாறினாலும் பாயிண்ட்ஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து  அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டிகளில் கோவாவுடன் முதல் போட்டியில் டிரா, இரண்டாம்  போட்டியில் வெற்றி என இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த சீஸனில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரை, அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இரண்டாம் முறையாக  சாம்பியன் பட்டத்தை எட்டியிருக்கிறது சென்னை. இதுவரையிலான ஐஎஸ்எல் போட்டிகளில் கொல்கத்தா, சென்னை  அணிகள் தலா இருமுறை சாம்பியன் ஆகியிருக்கிறார்கள். ஐஎஸ்எல் தொடங்கப்பட்டபோது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அணிகளான கோவா, பெங்களூர், மும்பை, கேரளா போன்ற முன்னணி அணிகளை மீறி கருப்புக் குதிரையாக முன்னேறி  இருமுறை சென்னை சாம்பியன் ஆகியிருப்பது கால்பந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இறுதிப் போட்டியில்  சென்னையின் வெற்றிக்கு அனுபவ வீரர்களைப் பயன்படுத்தியதுதான் காரணம்.

ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஆடிய ஆறு பேர் இறுதிப்போட்டியில் ஆடினார்கள். ஒட்டுமொத்த  பெங்களூர் ரசிகர்களும், தங்கள் அணியை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, எவ்வித பதட்டமும் அடையாமல்  துல்லியமாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறார்கள் மெரீனா மச்சான்ஸ். சென்னை சாம்பியனாகிய  சனிக்கிழமை இரவு, கால்பந்து பிரபலமாக இருக்கும் வடசென்னை கோலாகல கொண்டாட்டங்களில் ஈடுபட்டது.  சாம்பியன் அணியில் சென்னையைச் சார்ந்த தனபால் கணேஷ் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்  சென்னையில் நடந்த இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியவர்.

டி20 தமாக்கா!


இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 போட்டிகளில் இந்தியாவும், வங்கதேசமும் இறுதிப் போட்டிக்கு தயாராகின.  விராத் கோஹ்லி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா  தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தப் போட்டிகளில் பங்கேற்றது. இலங்கையுடனான முதல்  போட்டியிலேயே தோல்வி என்று தடுமாறினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று இறுதிப்  போட்டிக்கு முன்னேறியிருந்தது இந்திய அணி. இந்தியாவிடம் தோற்றிருந்தாலும் இலங்கையை அதன் சொந்த  மண்ணிலேயே இரண்டு போட்டிகளில் வென்று இறுதிப் போட்டியில் இந்தியாவை கம்பீரமாக எதிர்கொண்டது  வங்கதேசம்.

கடைசி பந்து சிக்ஸர்!


முதலில் ஆடிய வங்கதேசம் 166 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. சேஸிங் செய்த  இந்தியா 14வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது. கடைசி 18 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற  நிலை ஏற்பட்டபோது, அதிர்ஷ்ட தேவதை வங்கதேசத்தை நோக்கித்தான் கண்ணடிக்கிறாள் என்று ரசிகர்கள்  நினைத்தார்கள். அந்த இக்கட்டான நிலையில் 18வது ஓவரை எதிர்கொண்ட சென்னை வீரரான விஜயசங்கர், அந்த  ஓவரை முழுக்க வீணடித்தார். போதாக்குறைக்கு ஒரு விக்கெட்டும் விழுந்தது.

கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் வங்கதேசத்தின் வெற்றி உறுதியானது. 19வது ஓவரை  எதிர்கொண்ட சென்னை வீரர் தினேஷ் கார்த்திக் முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டினார். அடுத்தடுத்து  பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசி அந்த ஓவரிலேயே 22 ரன்களை சேகரித்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பை  பிரகாசமாக்கினார். இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 12 ரன்களே தேவைப்பட்டன. முதல் மூன்று பந்துகளில் 3  ரன்களே கிடைக்க, நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சங்கர்.

கடைசி இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் தேவையென்ற நிலையில் விஜயசங்கரின் விக்கெட் வீழ்ந்தது. கடைசி பந்தை  கார்த்திக் எதிர்கொண்டார். ஒரே பந்தில் ஐந்து ரன்கள் தேவை. பவுண்டரி அடித்தால்கூட மேட்ச் ‘டை’தான் ஆகும்.  சவும்யா சர்க்கார் வீசிய அந்த பந்தை சிக்ஸருக்கு கார்த்திக் தூக்கியடிக்க, கோப்பை இந்தியாவின் வசமானது. இதற்கு  முன்பாக ஷார்ஜா இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஜாவேத் மியாண்டட் விளாசிய சிக்ஸர், டாக்காவில்  நடந்த இறுதிப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ரிஷிகேஷ் கனித்கர் அடித்த பவுண்டரியைப் போன்றே இந்த  இறுதிப் பந்து சிக்ஸரும் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாக மாறியது.

சென்னை வீரரின் கடைசிப் பந்து சிக்ஸரால் தொடர்ச்சியாக மூன்று டி-20 தொடர்களை வென்ற முதல் அணி என்கிற  பெருமை இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. முந்தைய நாள் சென்னையின் எஃப்.சி கால்பந்து கோப்பை; அடுத்த நாள்  சென்னை வீரரின் அதிரடியால் இந்தியாவுக்குக் கிடைத்த டி-20 கோப்பை என அடுத்தடுத்த இரு இரவுகள்  நீண்டகாலத்துக்கு தமிழர்கள் நினைவில் நிற்கும்!

- யுவகிருஷ்ணா