கவிதை வனம்



அரூப தோழமை

படிகளில் இறங்கிக்
கொண்டிருப்பவளின்
தோள்களில்
செல்லமாய் அடித்து
‘ஏய்... எருமை...
எங்கே?’ என்கிறாள்
ஏறிக்கொண்டிருக்கும்
அம் மத்திம வயதுப்பெண்.
இறங்கியவள்
உரத்துச் சொல்லும் பதில்
நகரும் பேருந்தின்
எதிர்க்காற்றில்
மெல்லக் கரைய
குனிந்து கையசைப்பவளின்
பூரித்த முகம்
இயல்பான பின்னும்
ஏறவும் முடியாமல்
இறங்கவும் முடியாமல்
படிகளில்
பயணித்தபடியே வந்தது
அரூப தோழமையொன்று.

- கே.ஸ்டாலின்

நீயும் நானும்


அசந்தர்ப்பமாய்
சந்தித்தோம்
ஒரு பொது நிகழ்வில்
நீ பார்க்காதபோது நானும்
நான் பார்க்காதபோது நீயும்
மாறி மாறிப்
பார்த்துக்கொண்டோம்
பேசலாமா வேண்டாமா
எனத் தவித்து
பிறகு ஏனோ
தவிர்த்துத் திரும்பியதில்
தனித்து விடப்பட்டது
ஒரு பகிரப்படாத அன்பு.

- நித்திலா