கவிதை வனம்



கால மாற்றம்

முன்பெல்லாம்
தாத்தா
இடைவிடாமல்
இருமிக்கொண்டே இருப்பார்
பாவமாய் இருக்கும்
இப்போது
அப்பா இரும
ஆரம்பித்திருக்கிறார்
பயமாய் இருக்கிறது.

- இளந்தென்றல் திரவியம்

நீதி


நீதிமன்ற புங்கை நிழல்
உன் நரையில் கவிழ்ந்து
மடியில் நிறைகின்றது
இம்முறையும் அழுது
தீர்த்தவளாய்
கண்ணாடியுயர்த்தி
முந்தானையில்
கண்களைத் துடைத்த
வண்ணம் வெளியேறுகிறாய்
படர்ந்திருக்கும் அந்தக்
கண்ணீரின் ஈரமோ
புங்கை நிழலில் கொஞ்சம்
மரம் விட்டு இறங்கி
உன் சேலையைப்
பற்றிக்கொண்டு
உன்னோடே
போவதாய்த் தெரிகிறது
நிழலைப் போல் இல்லைதானே
ஏழைகளுக்கான நீதி.
- நிலாகண்ணன்