மன்னார்குடி குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை



லன்ச் மேப்

வீடுகளில் இனிப்பு பண்டங்கள் செய்து முடித்து வாரங்கள் பல கடந்தாலும் அந்த வாசம் சுற்றியபடியே இருக்கும். வேறு எந்த உணவுக்கும்  இப்படியொரு தன்மை இல்லை. இனிப்பும் எண்ணெய்யும் சேரும்போது மட்டுமே இந்த மேஜிக் நிகழ்கிறது. வீடுகளுக்கு மட்டுமல்ல, மன்னார்குடி  பெரியகடை வீதியில் இருக்கும் குஞ்சான் செட்டியார் கடை பலகாரங்களுக்கும் இந்த குணம், மணம் உண்டு. பின்னே... 115 வருட கடையாயிற்றே!  மதிலழகு மிக்க மன்னார்குடியே குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடாவுக்கு அடிமையாக இருக்கிறது.

ஆதிகாலத்து அடுப்பில் தொடங்கி கூம்பு வடிவ பொட்டலத்தில் மடித்துத் தரும் பழக்கம் வரை பழமை மாறாமல் கடையை நடத்துகிறார்கள் குஞ்சான்  செட்டியார் வாரிசுகளான விஸ்வநாதனும் அவரது மகன்களான கதிரும் பிரதீப்பும். கடை? ஆம். அதே சிறிய அளவு பெட்டிக் கடை. தஞ்சை மாவட்ட  சுற்றுவட்டார கோயில் திருவிழாக்களில் சீனி மிட்டாய் மிகப்பிரபலம். மரப்பலகையில் படிக்கட்டுகள் செய்து பலகாரம், இனிப்பு என மலைபோல  குவித்து வைத்திருப்பார்கள். பார்க்கவே வண்ணமயமாக இருக்கும். அந்தக் கடைகளுக்கெல்லாம் குஞ்சான் செட்டியார் கடைதான் தொடக்கம்.

“பூர்வீகம் மகாதேவப் பட்டணம். எள்ளுத் தாத்தா குஞ்சான் செட்டியார் 1914ல இந்தக் கடையை ஆரம்பிச்சார். அவர் மகன் துரைசாமி செட்டியார் அதை  பிரபலமாக்கினார். வடைல தனி ருசியை கொண்டு வந்தது இவர்தான். இப்ப நாங்க 5வது தலைமுறை. ருசி மாறாம இருக்க அவங்க கத்துக் கொடுத்த  கைப்பக்குவம்தான் காரணம்...’’ என்கிறார் பிரதீப். பக்கோடா, லட்டு, பூந்தி, அல்வா, ஜாங்கிரி, தேன்மிட்டாய், கடலைமிட்டாய், எள்ளு உருண்டை,  சீனிகாரசேவ், கமர்கட், தேங்காய் மிட்டாய்... என அனைத்துக்கும் இந்தக் கடையே அடையாளம்.

குறிப்பாக மெதுவடை. கிட்டப்பா காலத்தில் ‘தஞ்சை ஜில்லா’வில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆட்கள் வந்து பக்கோடா வாங்கிச்  செல்வார்களாம்! ‘‘இப்பவும் ஆட்டுக்கல்லுலதான் மாவு ஆட்டறோம். விறகா புளிய மரத்தைத்தான் பயன்படுத்தறோம். மண் அடுப்புலதான் பலகாரம்  சுடுறோம். ஒரு கிலோ பக்கோடாவை அஞ்சு பைசாவுக்கு வித்திருக்கோம்! கூம்பு வடிவ பொட்டலமா கட்டித் தருவோம். இப்ப கிராம் அளவுல  தந்தாலும் கூம்பு வடிவ பொட்டலத்தை மாத்தலை...’’ என்கிறார் கதிர். ‘‘மூணு பஞ்ச காலத்தை எங்க முன்னோர்கள் சந்திச்சிருக்காங்க.

அதே மாதிரி காவிரில வெள்ளம் வந்து ஊரே மிதந்ததையும் பார்த்திருக்காங்க.  ப்பவும் கடையை மூடினதில்ல. வருமானமே இல்லாம வெறுமனே  கடையைத் திறந்து வைச்ச காலமும் உண்டு. ஆனாலும் வேற ஊருக்குப் போய் பிழைக்கணும்னு யாருமே நினைக்கலை. ரொம்ப விருப்பப்பட்டு  கடையை தாத்தா தியாகராஜ செட்டியார் நடத்தினாரு. சமையலுக்கு தேவையான மூலப்பொருள் சரியா கிடைக்காது. வெங்காய விளைச்சல் கடுமையா  பாதிக்கப்பட்டப்ப கூட பக்கோடா போட்டிருக்கோம். விலையை உயர்த்தினதே இல்ல. எப்பவும் அடக்க விலைக்கும் குறைவாதான் தர்றோம்...’’ என்கிறார்  ப்ரதீப்.

‘‘இனிப்பு மிட்டாய்க்கு சரியான அளவுல மாவு, சர்க்கரை சேர்க்கணும். அதே மாதிரி அடுப்புல இருந்து இறக்கற பதமும் முக்கியம். மாவு பிசையறப்ப  சொட்டு சொட்டா நீர் விட்டு கட்டி விழாம பிசையணும். அப்பதான் பதம் கிடைக்கும். பொருளோட தரத்துக்கும் ருசிக்கும் தொடர்பிருக்கறதால மலிவான  பொருட்களைச் சேர்க்க மாட்டோம். செக்குல ஆட்டின எண்ணெய்தான் எப்பவும். பெரிய வெங்காயம் அதிகப்படியான இனிப்பைத் தரும். அதனால  பக்கோடாவுக்கு எப்பவும் சின்ன வெங்காயம்தான். முக்கியமான விஷயம், பெரிய வெங்காயம் மாவோட ஒட்டாது.

தனியா பிரிஞ்சு வரும். இதுல செய்யற பண்டம் சீக்கிரத்துல கெட்டுடும். சின்ன வெங்காயம் அப்படி யில்ல. தீயிற பதத்துக்கு வதக்கினாலும்,  வறுத்தாலும் ருசி கிடைச்சுடும். கடலை மாவை அரிசி மா வோட நல்லா கலந்துட்டா தனி மணம் கிடைக்கும். இதோட வெங்காயம் மென்மையா  வேகறப்ப ருசி தனிச்சு தெரியும். எங்க மெதுவடை பேசப்பட இதுதான் காரணம். ஒவ்வொரு பண்டத்துக்கும் அதுக்கான சேர்மானத்தைத்தான்  சேர்க்கணும். உதாரணமா மிளகு கிடைக்கலைனு மிளகாய் சேர்க்கக் கூடாது.

எல்லா உணவுக்கும் அது அதுக்குனு ஓர் அமைப்பு இருக்கு. அதை மாத்தவே கூடாது. அந்தந்த ஊர்ல விளையற பொருளைப் பயன்படுத்தறதுதான்  எப்பவும் நல்லது. இப்படி செய்யறப்பதான் சமைக்கிற பொருள்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியா நறுக்கக்  கூடாது. இரண்டா, நான்கா வெட்டிச் சேர்த்தா தனி ருசி கிடைக்கும்...’’ என ரகசியங்களை பட்டியலிடுகிறார் கதிர்.

திலீபன் புகழ்
படங்கள்: சுந்தர்

பக்கோடா


சின்ன வெங்காயம் - 1/2 கிலோ.
கடலை மாவு - 200 கிராம்.
அரிசி மாவு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - சிறிது.
இஞ்சி - சிறு துண்டு.
பெருங்காயம் - சிறிது.
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.
உப்பு - தேவைக்கு.
பொரிக்க - கடலை எண்ணெய்.

பக்குவம்: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து; கடலை மாவை மையவும், நெருடும்  பதத்தில் அரிசி மாவையும் அரைத்து சலித்து பயன்டுத்தினால் சுவை அதிகம் இருக்கும். பெருங்காயம் சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து பிசைந்து (தூவினாற் போல அழுத்திப் பிசையாமல்) உதிர்த்தாற் போல் எண்ணெய்யில்  வறுத்து எடுக்கவும்.

மெதுவடை

உளுந்து - 500 கிராம்.
பச்சரிசி மாவு - 100 கிராம்.
பச்சைமிளகாய் - 2.
சின்ன வெங்காயம் - 200 கிராம்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
மிளகு - 10 கிராம்.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

பக்குவம்: உளுந்தை ஒரு மணிநேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கட்டி விழாமல் பச்சரிசி மாவு சேர்த்து, நறுக்கிய வெங்காயம்,  பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உளுந்து அரைத்தவுடன் வடை சுட வேண்டும். நேரம் கடந்தால் மாவு புளிக்க ஆரம்பித்து விடும். அதேபோல அதிகம் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம். பிறகு வடையில் எண்ணெய் இழுக்கும்.