வீட்டிலேயே விவசாயம் செய்யலாம்!ஹோம் அக்ரி

அன்பான ‘குங்குமம்’ வாசகர்களுக்கு, வணக்கம். இந்த வேளாண்மை குறித்த தொடரின் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு நானும் பயில்வதற்கும், வேளாண், விவசாயி முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும் கிடைத்த இந்த வாய்ப்பை நல்ல முறையில்  பயன்படுத்த முடியும் என நம்புகிறேன்.

இன்று வேளாண்மை குறித்த ஆர்வம் அனைவருக்குமே பெருமளவில் இருப்பது, சமூக ஊடகங்கள் மூலமாக தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. இந்த  ஆர்வமும் ஈடுபாடும் நம்மிடமிருந்து வெளிப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில -

*    நாம் பாதுகாப்பற்ற உணவை உண்கிறோம் என்ற உணர்வு.
*    சுற்றுச் சூழல் கேடு பற்றிய ஆதங்கம்.
*    மிகவும் பரவலாகிக் கொண்டிருக்கும் புற்று நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள்.
*    மரம், செடி வளர்ப்பு, காய்கறி பயிரிடுதலில் ஒவ்வொருவருக்கும் உள்ள மரபணுவில் மறைந்திருக்கும் ஆர்வமும் கடமையுணர்வும்.

பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆர்வம் இருந்தாலும், செயல்படுத்தாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒருசிலர் நேரமில்லை என்று  சொல்லலாம். பலர் இடம் இல்லை என்று நினைக்கலாம். சிலர் செய்யத் தெரியாது என்று தவிர்க்கலாம். வேறு சிலர் நம்மால் முடியாது என்று  முயற்சியே செய்யாமல் போகலாம். மற்றும் சிலர் முயற்சி செய்து சரிவரவில்லை என மனம் தளர்ந்திருக்கலாம்.

இந்தத் தொடரில் நாம் ஒவ்வொருவரும் எப்படி நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம், பாதுகாப்பாக நம் காய்கறிகளை நாமே எப்படி பயிரிடலாம், நாமே  எப்படி வீட்டில் மிளகாய், மல்லி போன்ற முக்கிய மசாலா பொருட்களைப் பயிரிடலாம், நாமே எப்படி வீட்டில் எண்ணெய் ஆட்டிக் கொள்ளலாம், எப்படி  விவசாயிக்கும் விவசாயத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கலாம் என்ற விஷயங்களைப் பார்க்கலாம்.

அத்துடன் நகரத்தில் வசிப்பவர்களும் சிறிய அளவிலான தங்கள் வீட்டில் வாழ்ந்தபடியே எப்படி முட்டை மற்றும் இறைச்சிக்காக கோழி, மீன்  வளர்க்கலாம், ஆடு வளர்க்கலாம்... அடுக்கு மாடி வீட்டில் இருப்பவர்களும் எப்படி மாடு வளர்த்து ஆரோக்கியமான பால் பெறலாம் என்ற  தகவல்களையும் இந்தத் தொடரில் அறிந்து கொள்ளலாம். இது வெறும் தொடராக இல்லாமல், தாங்கள் நேரடியாகச் செய்து பார்க்கும் அளவுக்கு எல்லா  விபரங்களையும் தரக்கூடிய தகவல் தொகுப்பாக அமையும் என்று நம்புகிறோம்.

இணையத்திலும், புத்தகங்களிலும் கிடைக்காத பல செயல்முறை விளக்கங்களும், குறிப்புகளும்; செய்யக் கூடியவை, கூடாதவை போன்ற  செய்திகளைக் கொண்ட ஒரு போதினியாக அமைவதற்கான முழு முயற்சியும் செய்வோம். இதற்கு வலு சேர்க்கும் விதமாக உங்கள் சந்தேகங்களுக்கு  பதில் அளிக்கும் பகுதியும் இத்தொடரில் இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம் உணவை நாமே முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்வது, செய்யக்  கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, சரியான உணவை தேர்வு செய்வது, செய்ய கற்றுக் கொள்வது என்பவை அவசியமானவை  மட்டுமல்ல, அவசரத் தேவையும் கூட.

விவசாயம் செய்யாமல் தனி மனிதனாக நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் அடிப்படை தானியங்களை உற்பத்தி செய்வது கடினமாக இருந்தாலும்,  பெருமளவிலான காய்கறிகளையும், ஒரு சில மசாலா பொருட்களையும், எண்ணெய் வித்துக்களையும், மேலும் பல உணவுப் பொருட்களையும் உற்பத்தி  செய்து கொள்ளலாம். இந்தப் பொருட்கள் மட்டுமே நாம் அன்றாடம் உட்கொள்ளும் நச்சுப்பொருட்களின் அளவை பெருமளவில் குறைக்கும்.

இவை பாதுகாப்பான ஊட்டத்தை அளிப்பதுடன், மற்ற உணவுகளிலிருந்து உட்கொண்ட நச்சுக்களையும் வெளியேற்றும். சரி, நாமே பயிரிட்டு  உண்பதற்கான அவசியமும் தேவையும் என்ன? முக்கியமான காரணம், நம் உடலிலிருந்து தேவையில்லாத சத்துக்களையும், உப்புக்களையும்,  தாதுக்களையும், வெப்பத்தையும் நாம் வெளியேற்றாமல் இருப்பது. இது கீழ்க்கண்ட காரணங்களாலும், நாம் உண்ணும் உணவிலுள்ள விஷம் (toxins),  ஒவ்வாத கொழுப்பு, செரிக்க முடியாத சத்துக்கள், மற்றும் சுற்றுச் சூழல்மாசுக்களாலும் ஏற்படுகிறது.

*    வியர்வை இல்லாமல் வாழப் பழகியது.
*    பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளாமல்  இருப்பது.
*    உடல் உழைப்பு குறைந்த அலுவல் / தொழில்.
*    ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்.
*    ஆரோக்கியமில்லாத சுற்றுச் சூழலில் வாழ்வது.
*    உண்மையான மன மகிழ்ச்சியில்லாத மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை.
*    பூச்சிக்கொல்லி போன்ற விஷப் பொருட்கள் நிறைந்த உணவுப் பொருட்கள்.
*    ஒவ்வாத, தேவைக்கு அதிகமான சத்து கொண்ட உணவுகளை உண்பது.
*    மேலும் பல சமூகப் பழக்க வழக்கம் சார்ந்த காரணங்கள்.
*    விரதம் / பட்டினி இல்லா வாழ்க்கை முறை.

ஆக, நாமே உற்பத்தி செய்து உண்ணும் விளைபொருட்கள், சரியான ஊட்டத்தைத் தருவதுடன் தேவையில்லாத பொருட்களையும் வெளியேற்று
கின்றன. இதுகுறித்த தகவல்களை அடுத்த இதழில் காண்போம்.

(வளரும்)
மன்னர் மன்னன்

வருடம் முழுதும் காய்க்கும் தக்காளிச் செடி அந்தக் காலத்தில் இருந்ததாக என் பாட்டி சொன்னார். அதுபோல் வருடம் முழுதும் காய்க்கும் காய்கறிச்  செடிகள் வேறு உண்டா?
- வேதரத்தினம், திருத்துறைப்பூண்டி.

ஒருசில பாரம்பரிய ரகங்கள் வருடம் முழுவதும் காய்க்கக் கூடியவை. தக்காளி, கத்திரி மற்றும் பருத்தியில் இதுபோன்ற ரகங்கள் மிகப்பரவலாக  வளர்க்கப்பட்டன. இந்த ரகங்கள் வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்றவை. ஒருசில தன்னார்வலர்கள் இன்னும் இந்த ரகங்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.  ஆனை கொம்பன் வெண்டை என்ற ரகம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்த வெண்டை ஓரடி நீளமானது.

வருடம் முழுதும் காய்க்கும் தக்காளிச் செடி அந்தக் காலத்தில் இருந்ததாக என் பாட்டி சொன்னார். அதுபோல் வருடம் முழுதும் காய்க்கும் காய்கறிச்  செடிகள் வேறு உண்டா?
- வேதரத்தினம், திருத்துறைப்பூண்டி.

ஒருசில பாரம்பரிய ரகங்கள் வருடம் முழுவதும் காய்க்கக் கூடியவை. தக்காளி, கத்திரி மற்றும் பருத்தியில் இதுபோன்ற ரகங்கள் மிகப்பரவலாக  வளர்க்கப்பட்டன. இந்த ரகங்கள் வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்றவை. ஒருசில தன்னார்வலர்கள் இன்னும் இந்த ரகங்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.  ஆனை கொம்பன் வெண்டை என்ற ரகம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்த வெண்டை ஓரடி நீளமானது.

வீட்டுத் தோட்டம் அமைக்க என்ன செலவாகும்? உற்பத்திச் செலவு, கடையில் வாங்குவதைக் காட்டிலும் குறைவாகவே ஆகுமா?
- கல்யாணி, கடைச்சனேந்தல்

வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு முதலில் மனமும், ஆர்வமும், இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனும்தான் பிரதானமான முதலீடு. செலவு  ஒரு பொருட்டல்ல; முக்கிய தேவையும் அல்ல. ஆர்வத்தால் பொருட்களை  வாங்கி இடத்தை நிரப்பி செலவு செய்வதால் மட்டுமே வீட்டுத்தோட்டம்  அமைந்துவிடாது. பொறுமையும், ஒரு குழந்தையைப் போல கவனித்து அதனுடன் உறவாடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இது வெற்றிகரமாக  அமையும். உற்பத்திச் செலவு குறைவாகவும் இருக்கலாம், அதிகமாகவும் இருக்கலாம். நம் குறிக்கோள் சரியான பாதுகாப்பான உணவும்,  மனமகிழ்ச்சியுமேயொழிய, செலவைக் குறைப்பதல்ல. நாமே விளைவித்ததை என்றுமே கடைச் சரக்கோடு ஒப்பிடக்கூடாது.

ஒருவர் மன நிறைவோடும், சந்தோஷமாகவும் இருப்பது உணவுப் பழக்க வழக்கங்களால் அமையுமா?
- எஸ்.காமராஜ், ஒரத்தநாடு.

நிச்சயமாக. அனுமன் கோயில்களில் நெடுங்காலமாக வழங்கப்படும் துளசி தீர்த்தம், மனச்சோர்வை சரி செய்வதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. துளசியை  தீர்த்தமாகவோ, தேனீராகவோ உட்கொள்வது, ‘valium (diazepam)’ என்ற மருந்தை எடுத்துக்கொள்வதற்கு இணையானது. விட்டமின் B3 (Niacin)  நிறைந்த கடலை மிட்டாய் மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். தரமான செக்கு நல்லெண்ணெய் செரடோனின்  சுரப்பை ஊக்கப்படுத்தி, மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.