ஒரு ஆபீசில் பல ஆபீஸ்!



சென்னை போன்ற மெட்ரோ நகரத்தில் நான்கு நடுத்தர இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு தொழில் தொடங்க வேண்டுமென நினைத்தால் அது சாத்தியமாகுமா? ஒரே ஒருவர் தன்னந்தனியாக தொழில் செய்ய திட்டமிடுகிறார். அது நிறைவேறுமா?

கஷ்டம்தான்... என இழுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இடம் வேண்டும். அதற்கு வாடகை தரவேண்டும். ஒரு தொலைபேசி எண் தேவை. வேகமான இணையதள வசதியும், ஏசியும், கேபின்களும் நாற்காலிகளும் அவசியம். இவை அனைத்துமே குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகள். இவற்றுக்கு மட்டுமே சில லட்சங்கள் செலவாகும். அதுவும் அலுவலகம் அமைந்திருக்கும் இடம் நகரின் முக்கிய இடத்தில் அமைந்தால் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும். இதற்கு  பயந்தே திறமை இருந்தும் அடிப்படை முதலீடுக்கு வழியில்லாமல் பல இளைஞர்கள் சுயதொழில் தொடங்காமல் இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னைக்கு விடிவே கிடையாதா என உள்ளுக்குள் அழுபவராக நீங்கள் இருந்தால்... ‘ஹுர்ரே...’ என குதியுங்கள். யெஸ். இதற்கான தீர்வாகத்தான் ‘கோ வொர்க் கிங் ஸ்பேஸ்’ (Co Working Space) கான்செப்ட் நகரெங்கும் பரவி வருகிறது. அதென்ன ‘கோ வொர்க்கிங் ஸ்பேஸ்’? வேறொன்றுமில்லை. மேலே குறிப்பிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உங்களால் கொடுக்க முடிகிற தொகையில் நிறைவேற்றித் தரப்படும்! எப்படி இதை சாத்தியமாக்குகிறார்கள்? அறிய, ‘கோ வொர்க்கிங் ஸ்பேஸ்’ கான்செப்ட்டில் இயங்கி வரும் சில ஸ்பாட்டுகளுக்கு விசிட் அடித்தோம். ‘‘வொர்க்கிங் ஸ்பேஸ் வழங்கறதுல ‘கார்யா’வுக்கு மூணு வருஷ அனுபவம் உண்டு.

எங்களுக்கு ரெண்டு கிளைகளும் இருக்கு. ஒண்ணு நுங்கம்பாக்கம், இன்னொண்ணு ராதா கிருஷ்ணா சாலை...’’ என்று ஆரம்பித்தார் அர்ஜுன். ‘‘கோ வொர்க்கிங் ஸ்பேஸ்ல நிறைய கான்செப்ட் இருக்கு. அதுல முக்கியமானது மூணு. ஒண்ணு, சோஷியல். பொதுவான இடத்துல டேபிள் சேர்ஸ் போட்டிருப்போம். இணையதள வசதி உண்டு. அதுல உட்கார்ந்து வேலை செய்யலாம். ரெண்டாவது, ஹெர்மிட். இதுல தனித்தனி கேபின் கொடுப்போம். மூணு பேர், நாலு பேர் அமர்ந்து வேலை பார்க்கிற கார்ப்பரேட் ஸ்டைல்ல ஒவ்வொரு கேபினும் இருக்கும். மூணாவது, ஜிப்ஸி. மாசத்துக்கு 10 நாட்கள் மட்டுமே உங்களுக்கு வேலை... அதுக்கு மட்டும் இடம் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த ஜிப்ஸி நல்ல சாய்ஸ்.

இதுல குழுவா சேர்ந்து வேலை செய்றவங்களும் இருக்காங்க. வீட்ல இருந்து வேலை செய்ய முடியாம இங்க வந்து பயன்படுத்திக்கிறவங்களும் இருக்காங்க. இரண்டு வேளை காஃபி, டீ இருக்கும். வாடகையா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வேறுபடும்...’’ என்கிறார் அர்ஜுன். ‘டூ ட்ரீஸ்’ நடத்தும் கீர்த்தனா, கனகதாரா, ப்ரியா ஆகியோர் இந்த ‘வொர்க்கிங் ஸ்பேஸிலேயே வித்தியாசமான சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ‘‘வழக்கமான கார்ப்பரேட் ஸ்டைல்ல ஏன் அமைக்கணும்னு யோசிச்சோம். கேபின் டைப்ல இல்லாம ஆன்டிக் டோன் பலகை ஸ்டைல் டேபிள், வீட்ல இருக்கிற மாதிரியே சோஃபா, கீழயே காஃபி டே ரெஸ்டாரென்ட், சுத்திலும் மரங்கள்னு ‘டூ ட்ரீஸை’ உருவாக்கி இருக்கோம்.

எங்ககிட்ட ரூ.7 ஆயிரத்துல ஆரம்பிச்சு நிறைய பிளான்ஸ் இருக்கு. ரெண்டு கம்பெனிங்க சேர்ந்து ஒரு ரூமை ஷேர் செய்துப்பாங்க. தேவைப்படறவங்களுக்கு உணவுக்கும் ஏற்பாடு செய்யறோம்...’’ என்கிறார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் ‘இன்ஸ் ஃபையர் பிசினஸ் சொலூஷன்ஸ்’ மீடியாவின் செல்லப் பிள்ளை! ‘‘ஏன்னா, பல பிரபலமான தமிழ் மீடியாஸ், யூ டியூப் சேனல்ஸ் எல்லாம் எங்க வொர்க்கிங் ஸ்பேஸ்லதான் இயங்கிட்டு இருக்கு...’’ என்று சிரிக்கிறார் ஷங்கர். ‘‘ஒரே தொழில் செய்ற குழுக்களுக்கு ஒரே இடத்துல இடம் கொடுக்கக் கூடாதுனு உறுதியா இருக்கோம்.

உதாரணமா ஒரு வெப் டெவலப்பிங் கம்பெனிக்கு இடம் கொடுத்துட்டா இன்னொரு வெப் டெவலப்பிங் கம்பெனிக்கு இதே இடத்துல ஸ்பேஸ் கொடுக்க மாட்டோம். இன்னொரு இடத்துலதான் இடம் கொடுப்போம். போட்டியை உருவாக்கி ஒரு டீம் மேல போய் இன்னொரு டீம் கீழ விழ நாமே காரணமா இருக்கக் கூடாதில்லையா? அதுக்குதான் இப்படி. சில பேர்கிட்ட நல்ல ஐடியா இருக்கும். ஆனா, போதிய வசதி இல்லாம ஆபீஸ் போட முடியாம திணறுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்காகவே ரூ.500 முதல் ப்ளான் வைச்சிருக்கோம். அடிப்படைத் தேவை ஒரு கேபின், இணையதள வசதி. இதைக் கொடுத்தா நிச்சயமா நிறைய பேர் சாதிப்பாங்க. அதைத்தான் நாங்க ஊக்குவிக்கிறோம்.

எங்களோட இன்னொரு ஸ்பெஷல் கஸ்டமைஸ்ட் ரூம். அதாவது வெறும் ரூம் மட்டும் இருக்கும். தேவைக்கு ஏத்த மாதிரி அதை டிசைன் செஞ்சு கொடுப்போம். சில யூ டியூப் சேனல்ஸை பார்த்தா பசங்க கீழ உட்கார்ந்துகிட்டு, இல்லைனா பீன் பேக்ல அமர்ந்துகிட்டு வேலை செய்வாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு இந்த கஸ்டமைஸ்ட் ரூம் பயன்படும்...’’ என்கிறார் ஷங்கர். ‘‘நாங்க கோ வொர்க்கிங் ஸ்பேஸுக்கு நேர் மாறா இருக்கோம்...’’ என ஜெர்க் கொடுக்கிறார்கள் ‘த பேக்யார்ட் கஃபே கோ-ஃபவுண்டர்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த அக்‌ஷயாவும் நித்யாவும். ‘‘முதல்ல இது கஃபே. விதவிதமா காஃபி, டீ, ஃபுட்ஸ்னு எல்லாமே இருக்கும்.

அடுத்து பார்க்க ஒரு ரம்மியமான வீட்டு செட்டப். இங்க வேலை செய்றவங்க மட்டுமில்ல... புக்ஸ் படிக்கிறவங்களும் வருவாங்க. ஒரு மணி நேரத்துக்கு ரூ.100 கொடுத்துட்டா அன்லிமிட்டெட் காஃபி அல்லது ஜூஸ் ப்ளஸ் அன்லிமிட்டெட் wi-fi கனெக்‌ஷன். நேரம் அதிகரிக்க அதிகரிக்க ஆஃபர் ப்ளான்ஸ் உண்டு. இங்க கதை நேரம், புத்தக விளக்கம் மாதிரி நிறைய மீட்டிங்ஸ் நடத்தறோம். சில மியூசிக் பேண்ட் டீம், ஷார்ட் ஃபிலிம் டீம், க்ரியேட்டிவ் டீம்... எல்லாம் கூட இங்க வந்து ரிலாக்ஸா ப்ளான் பண்ணிப்பாங்க. ‘‘எங்க ஸ்பெஷல் உள்கட்டமைப்பு வசதிதான். ஒரு பார்க்ல, ஒரு பீச்ல... ஏன், பிடிச்ச ரிசார்ட்டுல இருந்தா என்ன உணர்வு கிடைக்குமோ அதை நாங்க கொடுக்கறோம்...’’ என்கிறார்கள்.

ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்