இப்ப இருக்கிற வீட்டை யார் எனக்கு வாங்கித் தர்றாங்களோ அவங்களுக்கு படம் பண்றதுன்னு இருந்தேன்!



தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் வெள்ளி விழா இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்

அனுபவ சாந்தம் கொண்டவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். அவரது சந்திப்பும் புதையல் எடுக்கும் பரவசம். முதல் படத்திலேயே வெள்ளி விழா தந்து  பயணங்கள் முடியாமல் பவனி வந்தவர். இத்தனை நாள் கற்ற பாடமும், அறிந்த திரைமொழியும் கொண்ட சினிமாவின் பெரிய மனிதர். அவரது  மனதோடு பேசினோம். ‘‘தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லை, எல்லா சினிமாவிற்குமே கதைனு ஒண்ணு தேவை. அதில்லாமல் எது செய்தாலும்  வேலைக்கு ஆகாது.

அப்போ சினிமா டைரக்டர் கையில் இருந்தது. இப்போ நடிகர்கள் கைக்கு மாறிவிட்டது. அந்த ஹீரோவே கதையை, கேமிராமேனை, ஏன்...  புரொடியூசரையும் கூட தேர்ந்தெடுக்கிறார். விஜய், அஜித், சூர்யா படமெல்லாம் சில மாநிலங்களில் அந்த ஊர் ஹீரோவுக்கு நிகராக வசூல் தருது.  அதனால்தான் அவங்க கதைக்கு மெனக்கெடுவது கிடையாது. கதையை நம்பினால் எல்லோரும் ஜெயிக்கலாம். இல்லாட்டா அந்த மூணு நாள்  கலெக்‌ஷனை பார்த்திட்டு போக வேண்டியதுதான்...’’ சிரிக்கிறார்.

தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் நஷ்டக்கணக்கு காட்டுறாங்க...

இண்டஸ்ட்ரீ ஸ்டிரைக்கின் போதுதான் ஒரு எண்ணம் வந்தது. தயாரிப்பாளர்கள் யாரை வைச்சு படம் எடுத்தாலும் நஷ்டம்கிறாங்க. அப்புறம் ஏன்  இந்தத் தொழிலை தொடர்ந்து செய்யணும்? இப்படி சொல்றதைப் பார்த்திட்டுத்தான் விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன்னு சொந்தப்படம் செய்ய  ஆரம்பிச்சிட்டாங்க. இனிமேல் அப்படித்தான் போகும். நாங்களெல்லாம் படம் பண்ணும்போது நாங்க சொல்றதை ஹீரோக்கள் கேட்டாகணும்ங்கிற  நிலைமை இருந்தது. நாம கதையை உருவாக்குறோம்.

இளையராஜாவைப் பார்த்து பாட்டு வாங்கி, லொக்கேஷன் பார்த்து ஒரு கிராமத்திற்குப் போறோம். நாம் நினைக்கிறது வரணும் என்பதற்காக நம்ம  ரூட்லேயே போவோம். கதையை நம்பியவன் அப்படித்தான் செய்வான். 1980 - 95 வரை சினிமா டைரக்டர் கையில்தான் இருந்தது. கே.பாலசந்தர்,  பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், பாக்யராஜ், ராஜசேகர், பி.வாசு, விசு, டி.ராஜேந்தர், ஆர்.ரங்கராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன்னு நாங்க  எல்லாருமே பெண்களைத் தரக்குறைவாக எடுக்காமல் படம் எடுத்தோம்.

நீங்க விஜயகாந்தை பெரிசா கொண்டு வந்தீங்க...

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘என் ஆச மச்சான்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ இதையெல்லாம் அவரை பெரிசாக கொண்டு வரணும்னு செய்யலை. நான்  தப்பிக்கணும், சொல்ல வந்த கதையை சரியாகச் சொல்லணும். அதை மட்டும்தான் கவனத்துல எடுத்துக்குவேன். உதாரணமா, ‘வைதேகி  காத்திருந்தாள்’ படத்தை ஏவிஎம்தான் செய்வதாக இருந்தது. அப்ப, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘நான் பாடும் பாடல்’ எல்லாம் பெரிய அளவில் ஓடின  காலம். நான் இப்ப இருக்கிற வீட்டை யார் எனக்கு வாங்கித் தருகிறார்களோ, அவர்களுக்கு பண்றதுன்னு முடிவு பண்ணி சொல்லிட்டேன். அவங்க  நாங்க வீட்டை வாங்கித் தர்றோம்னு சொல்லிட்டாங்க. அட்வான்ஸ் கொடுத்தாச்சு.

இரண்டு மாதமாக டிஸ்கஷன் நடக்குது. இன்னும் பத்து நாளில் வீடு வாங்கணும். ஏவி.எம். போய் கதையைச் சொன்னேன். ஓகே... யாரை  ஆர்ட்டிஸ்ட்டாகப் போடலாம்னு கேட்டாங்க. விஜயகாந்தைப் போடலாம், கருப்பாக இருக்கிற கேரக்டருக்கு ஃபீல் ஆக இருக்கும்னு சொன்னேன். ‘சரி,  நாளை காலை பார்க்கலாம்’னு சொன்னாங்க. அடுத்த நாள் போனால் ஏவி.எம்.ல ‘சிவகுமாரும், அம்பிகாவும் செய்தால் நல்லாயிருக்கும்’னு  சொன்னாங்க. நான் ‘விஜயகாந்த்’தான்னு சொன்னேன். அடுத்த நாள் பார்க்கலாம்னு சொன்னாங்க. மறுநாள் ‘ஸாரி, நாங்க படம் பண்ணலை. காசை  திருப்பிக் கொடுத்திடுங்க.

எங்க நிறுவனத்தில் படம் பண்றவங்க நம்ம கண்ட்ரோலில் இல்லைன்னா மனமொத்து படம் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. விரக்தியாகி  மனம் உடைஞ்சிட்டேன். அடுத்த நாள் வாக்கிங் போனபோது எதிரே வந்த ரைட்டர் தூயவன் ‘என்ன, ஒரு மாதிரி இருக்கீங்க’ன்னு கேட்டார். ‘இந்த  மாதிரி ஆச்சு. இரண்டு நாளில் வீடு வாங்கணும்’னு சொன்னேன். ‘வாக்கிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வாங்க’னு சொல்லிட்டு போயிட்டார். அங்க போனால்,  அவர் ஒரு வீட்டிற்கு கூட்டிட்டுப் போனார். உள்ளே பஞ்சு அருணாசலம். ‘தம்பி, இவரு ஒரு கதை வைச்சிருக்கார். கேளு’ன்னார். பஞ்சு சாரிடம் கதை  சொல்லி முடிச்சதும் இரண்டரை லட்சம் கொடுத்தார். ‘வீட்டை கிரயம் பண்ணிட்டு, சந்தோஷமா படம் பண்ணுங்க’ன்னு சொன்னார்.

வீடு, இடம் எல்லாம் சேர்த்து அப்ப 1½ லட்சம்தான். ஏன் இதைச் சொல்றேன்னா, ஏவி.எம். பெரிய நிறுவனம். சொன்ன தேதிக்கு படம் வரும். எல்லாம்  உண்மைதான். அவங்களுக்கு படம் பண்ணலைன்னாலும் பரவாயில்லை, வீடு வாங்கலைன்னாலும் பரவாயில்லை, இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட்  வேணும்னு செலக்ட் பண்ணினோம் இல்லையா... அதுதான் விஷயம். இன்னிக்கு வரைக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ எனக்கு பெரிய அடையாளம்.  மறுபடியும் சொல்றேன். விஜயகாந்தை வளர்க்கணும், மேலே கொண்டு வரணும்னு எடுத்த படமல்ல. என்னைக் காப்பாத்திக்கணும் என்பதற்காக  செய்தது. இப்படி இல்லைன்னா சத்யராஜை, மணிவண்ணன் கொண்டு வந்திருக்க முடியாது.

ஆர்ட்டிஸ்ட்கள் தங்களை இன்னும் மேலே கொண்டு வர நினைப்பது தவறா?

சாண்டோ சின்னப்ப தேவரும், எம்ஜிஆரும் சிலம்பம் விளையாடுவாங்க. தேவருக்கு சிலம்பம் அத்துபடி. எம்ஜிஆருக்கு அதில் 60 பர்சன்ட்தான் தெரியும்.  ஆனாலும் எம்ஜிஆர்குச்சி எடுத்தபோது இருந்த அழகு தேவர்கிட்ட வரலை. ரஜினிகாந்த் கோபமாக திரும்பிப் பார்த்தா, அவர் கண்ணு பத்து பேரை  அடிக்கிற மாதிரி கொதிக்கும். எத்தனை பேரை அடிச்சாலும் நம்ப வைக்கும். மோகன் ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘நான் பாடும் பாடல்’, ‘குங்குமச்சிமிழ்’னு  நடிக்கும்போது, ‘எனக்கும் ஃபைட் வைங்க’னு சொல்வார். ஆனா, நாம ஃபைட் வைக்க மாட்டோம். அந்தப் பவர் அவர்கிட்டே இல்லை. அதனால்  மைக்கை, பாட்டைக் கொடுத்து அவரை சரி பண்ணுவோம்.

‘ராஜாதி ராஜா’ படத்தில் ஒரு கத்தியை ரஜினி சுத்தி விடுவார். அது அந்தரத்தில் நிற்கும். அப்படி ஒரு இமேஜ். அந்த மாதிரி சுத்தவே சுத்தாது. அப்படி  சுத்தும்போது ரஜினி ரசிகன் விசில் பின்னி எடுக்கிறான். அதே கத்தியை மோகன் கையில் கொடுத்தால், ரசிகன் நம்மளைத் திட்டுவானே தவிர,  கையைத் தட்ட மாட்டான். ஒரு சிலருக்குத்தான் அது வரும். ரஜினிகாந்தை வைச்சு ‘பாட்ஷா’ மாதிரி பண்ணணும் அல்லது பொறுப்பு இல்லாத கதை  பண்ணணும். நான் ‘ராஜாதி ராஜா’ மாதிரி ஆள் மாறாட்டக் கதை எடுத்தேன். ‘பாம்’ வெடிச்சு, குதிரையில் பாய்ந்து வர்ற மாதிரி ஓபனிங் வைக்காமல்  ‘மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி’ன்னு ஒரு பாட்டுல அறிமுகப்படுத்தினேன். அதை அவரை வைச்சு தைரியமாக செய்யலாம்.

பாடல்களுக்கு மெனக்கெட்டு இருந்தீங்க...?

எம்ஜிஆர் படத்தில் இன்னும் நிற்கிறது பாட்டுதான் பாட்டு தான் குதூகலப்படுத்தும். ஃபைட் நல்லாயிருந்தா அது நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு  போயிடுவாங்க. ‘ஃபைட்’டை வெளியே போட்டுக் காட்ட மாட்டாங்க. பாட்டு நல்லாயிருந்தால் குளிக்கும் போதும் படுக்கும் போதும் கூட பாடுவான். காமெடியும், பாடலும் அமைஞ்சிட்டால் மக்கள் படத்தை பல தடவை பார்ப்பாங்க. ஒரு ஸ்கிரிப்ட்டில் எப்ப காமெடி, பாட்டு வைக்கிறது என்பதில் சில  விஷயங்கள் இருக்கு. அதை செய்து காட்டுகிறவன் கெட்டிக்காரன். இளையராஜாகிட்டே மியூசிக் வாங்கிட்டு வா, டைரக்டர் ஆக்குறேன்னு ஒரு பத்து  வருஷம் ஓடுச்சு. அந்த பீரியட்ல கூட பாக்யராஜ், அவர் தம்பி கங்கை அமரனை வைச்சு மியூசிக் பண்ணுவார்.

ஆனால், அவர் 100 படம் ஏற்கனவே செய்திருந்தாலும் இளையராஜா அளவுக்கு பவர் ஃபுல்லான ஆள் கிடையாது. அப்படியும் அவரை வைச்சு ‘மெளன  கீதம்’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’னு நல்ல பாடல்கள் வாங்கினார். சங்கர் கணேஷ் கொஞ்சமாக கீழே இறங்கும்போது அவரே ‘டார்லிங் டார்லிங்’  கொடுத்தார். இளையராஜா உச்சத்தில் இருக்கார். அப்படியும் சங்கர் கணேஷை வைச்சு பண்றார். எம்.எஸ்.வி.யை வைச்சு ‘அந்த ஏழு நாட்கள்’ பண்றார்.  ‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’தான் இளையராஜா; பிறகு அவரே மியூசிக் ‘இது நம்ம ஆளி’ல் பண்றார். ஆழம் தெரியாமல் காலை  விடக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால், நீச்சல் தெரிந்தவருக்கு ஆழம் ஒரு பிரச்னையே இல்லை.

டைரக்டரை முக்கியப்படுத்துறீங்க...?

ஒரு படத்துக்கு சேர்த்து தருவேன்னு இளையராஜா ஏழெட்டு ட்யூன் வைச்சிருந்தார். பஞ்சு சார் ‘ராஜா ஏழெட்டு ட்யூன் வைச்சுக்கிட்டு யார் கேட்டாலும்  தரமாட்டேங்கிறாரு. இந்த ராஜாவுக்கு அவ்வளவு தொழில் திமிரு இருந்தால், நமக்கு எழுத்தாளராக எவ்வளவு தொழில் திமிரு இருக்கணும்’னு  சொன்னார். அந்த ட்யூன்களைக் கேட்டுட்டு கதை பண்ணினதுதான் ‘வைதேகி காத்திருந்தாள்’. ட்யூன் கேட்டுட்டு கதை பண்றது சாதாரண விஷயம்  இல்லை. இளையராஜா இல்லாமல் கதை பண்ணி ஜெயிக்கிறதும் அப்ப சாதாரணமானது இல்லை. நானாவது ட்யூனைக் ேகட்டேன். அவரோட ஏழு  பாடலுக்கு ‘இளமைக் காலங்கள்’னு படமே பண்ணினார் மணிவண்ணன்! டைரக்டர்னா  தில் வேணும்.

‘ராஜாதி ராஜா’ பண்ணும்போது தோட்டாதரணி ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணட்டும்னு ரஜினி சொன்னார். தோட்டா தரணி அசிஸ்டென்ட்ஸ் கதை கேட்க  வந்தாங்க. நாங்க கதை கேட்கிறோம். எங்களுக்கு பிடிச்சிருந்தால் பண்றோம்னு சொன்னாங்க. ‘நீங்க ஒர்க் பண்றதாக இருந்தால் சொல்லுங்க, கதை  சொல்றேன்’னு சொன்னேன். அந்த கெத்து வேணும். சில விஷயங்கள் இருக்கு. ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...’ என எம்ஜிஆர்  பாடினால்தான் நல்லாயிருக்கும். ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...’னு சிவாஜி பாடினாதான் கம்பீரம் வரும். இப்ப விஜய், அஜித்,  சூர்யா படங்களில் எல்லாம் வில்லனை அவங்களே புரட்டி எடுத்து கொல்றாங்க. எம்ஜிஆர் படங்களிலும் வில்லன் வருவான்.

அருவி, ஆறு, மலைப்பிரதேசத்தில்தான் சண்டை நடக்கும். அருவியில் வில்லன் விழப் போகும்போது எம்ஜிஆரே அவன் கையைப் பிடிச்சு தூக்கிக்  காப்பாத்துவார். கடைசியில் போலீசில் பிடித்துக் கொடுப்பாரே தவிர அவர் தண்டிக்க மாட்டார். இப்ப ஹீரோக்களே கொடூரமாக தண்டிக்கிறாங்க.  சினிமாவையும் தண்டிக்கிறாங்க.! பாக்யராஜ் இந்தியாவிலேயே பெரிய ஸ்கிரிப்ட் ரைட்டர்னு பெயர் வாங்கினான். அவனையே சும்மா இருக்க  வைக்கிறாங்க. தாணு மாதிரி படம் எடுக்கிறவங்க, பணத்தைக் கொடுத்து கதை கொடுக்க வைத்தால் என்ன? ஒரு படத்திற்கு எத்தனையோ கோடி  செலவு பண்றாங்க. அதனால சொன்னேன். கடைசியா ஒரு விஷயம்.

‘கற்பகம்’னு ஒரு படம். அதுல ஹீரோயின் யாருன்னு கேட்டால் அத்தனை பேரும் கே.ஆர்.விஜயானு சொல்வாங்க. அதில் அவர் அறிமுகம்தான். நாலே  நாலு ரீல் வருவார். உலக மகா நடிகை சாவித்திரி பத்துரீல் வருவாங்க. அதில் ரங்காராவ், நாகையா, எம்.ஆர்.ராதா இருந்தாங்க. அத்தனை பேரும்  இருந்தாலும் ‘கற்பகம்’னா அத்தனை பேருக்கும் கே.ஆர்.விஜயா ஞாபகம் ஏன் வரணும்?  கே.எஸ்.கோபால கிருஷ்ணன்னு ஒருத்தர் உயிரைக் கொடுத்து  அந்த கேரக்டரை எழுதினார். இதை இன்னிக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க! எழுத்தாளரும், இயக்குநரும் தான்  எப்போதும் பிரம்மா!  

படங்கள் உதவி: ஞானம்
நா.கதிர்வேலன்