காட்ஃபாதர்- போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா-57

‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று அமெரிக்கா, மற்றும் கொலம்பிய அரசுகளை பாப்லோ வெளிப்படையாக எச்சரித்தபிறகுதான், அமெரிக்கர்கள் மீதான  தாக்குதல் கொலம்பியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை விழுந்தது. நாட்டு  வெடிகுண்டு கணக்காக ஏதோ லேத் பட்டறையில் செய்யப்பட்ட அந்த ஏவுகணை, கட்டடத்தை லேசாக சேதப்படுத்தியதே தவிர, வெடிக்கவில்லை.  ஒருவேளை வெடித்திருந்தால் பெரும் நாசம் நிச்சயம். இதற்கே அமெரிக்கர்கள் உள்ளாடையில் உச்சா போனார்கள். கொலம்பியாவில் இருந்த அமெரிக்க  அதிகாரிகள் உடனடியாக தங்கள் குடும்பங்களை, தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

அமெரிக்க அதிபர் புஷ் உடனடியாக அறிவித்தார். “போதை கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்கள் இதுவரை சட்டத்தை மீறிய குற்றவாளிகளாகத்தான்  கருதப்பட்டார்கள். ஏவுகணை எரிகின்ற அளவுக்கு போய்விட்ட நிலையில் அவர்களை பயங்கரவாதிகளாகத்தான் அமெரிக்கா கருதும்.  பயங்கரவாதத்தினை ஒழிக்க அமெரிக்கா எடுக்கக்கூடிய கடுமையான நடவடிக்கைகள், இனிமேல் போதைக் கடத்தல்காரர்களின் மீதும் பாயும்...” இந்த  அறிவிப்பு மூலமாக அதிபர் சூசகமாகச் சொன்னது என்னவென்றால், தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகள் கொலம்பியாவைக் கைப்பற்றி,  ‘பயங்கரவாதத்தை’ ஒழிக்கும் என்பதே.

பதறிப்போன கொலம்பிய அரசு, வழக்கம்போல ‘எல்லாத்தையும் மேலே இருப்பவன் பார்த்துப்பான்’ கணக்காக இந்த ஏவுகணைத் தாக்குதல் பழியையும்  பாப்லோ மீதே போட்டது. “வெத்துத் துப்பாக்கியல்ல மெதிலின் கார்டெல். நாங்கள் அடித்திருந்தால் அமெரிக்கத் தூதரகம் தூள் தூளாகி இருக்கும்.  இப்படி அரைகுறையாக வேலையை முடிப்பது எங்கள் பழக்கமில்லை...” என்று கர்ஜித்தார் பாப்லோ எஸ்கோபார். இதுமாதிரி பாப்லோவையும்,  அமெரிக்காவையும் சிண்டு முடியும் வேலையைச் செய்து வந்தது காலி கார்டெல் என்பதெல்லாம் பாப்லோவின் காலத்துக்குப் பிறகு தான்  வெளியுலகுக்குத் தெரியவந்தது.

ராபர்ட் முஸெல்லா என்கிற பெயரில் கொலம்பிய கார்டெல்களுக்கு அமெரிக்காவில் ஏஜென்ஸி எடுத்திருந்த அமெரிக்கரான ராபர்ட் மஸூர்தான் பல  குழப்படிகளுக்குக் காரணமே. உண்மையில் அமெரிக்காவின் சிஐஏ போலியாக உருவாக்கிய போதை ஏஜெண்ட்தான் இந்த ராபர்ட் முஸெல்லா. முள்ளை  முள்ளால் எடுப்பதைப் போல போதை கார்டெல்களுக்குள் ஒரு புல்லுருவியை நீண்டகாலத் திட்டமாக நுழைத்து, கார்டெல்களின் ஒற்றுமையைச்  சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு டானாக போட்டுத் தள்ளுவது சிஐஏவின் மாஸ்டர் பிளான். கிட்டத்தட்ட அதில் சிஐஏ வெற்றி பெற்றது  என்றேதான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு சிக்கல்களுக்கும் மத்தியிலும் பாப்லோ உலகின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் நீடித்துக் கொண்டிருந்தார் என்பதால்தான், அவர்  இன்றுவரைக்கும் அதிசயமாகப் பார்க்கப்படக்கூடிய காட் ஃபாதர். யோசித்துப் பாருங்கள். மலையளவு பணத்தைச் சம்பாதித்து வைத்திருந்தவர், அதை  அனுபவிக்க முடியாமல் அமெரிக்காவுக்கும், கொலம்பிய ராணுவத்துக்கும் பயந்து தலைமறைவாக ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில்  தன்னைத் தவிர தனக்கு அனைவருமே எதிரிகள் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அவருக்கு நெருக்கடி முற்றியிருந்தது. ஆனால், அதெல்லாம்  வெறும் ஆரம்பம்தான்.

நவம்பர் 27, 1989. பொகோடா விமான நிலையத்துக்குள் கோட், சூட் அணிந்து பிசினஸ்மேன் தோற்றத்தில் மரியோ என்கிற இளைஞன் நுழைந்தான்.  வியர்த்துக் கொண்டிருந்த தன்னுடைய முகத்தை நிமிடத்துக்கு நான்கு முறை துடைத்துக்கொண்டே இருந்தான். பொகாடோ நகரில் இருந்து காலி  நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறினான். 15F என்கிற எண் கொண்ட இருக்கையில் அமர்ந்தான். 14F இருக்கைக்கு அடியில் தன்னுடைய லக்கேஜை  வைத்தான். விமானம் கிளம்பும் வரை அவனுடைய பதற்றம் குறையவே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே இருந்தான். இத்தனைக்கும்  அவனை யாரும் சந்தேகமாகக்கூடப் பார்க்கவில்லை. ஒருவாறாக விமானம் மேலே எழும்பியது.

பொகாடோ நகரைத் தாண்டியதுமே மரியோ எழுந்தான். அவனுடைய முகத்தில் ஒருமாதிரி இனம்புரியா பூரண நிம்மதி பரவியிருந்தது. இருக்கைக்கு  அடியில் இருந்த தன்னுடைய லக்கேஜை எடுத்தான். ஜிப்பைத் திறந்து உள்ளே எதையோ தொட்டான். பூம். விமானத்தின் வயிற்றுப் பகுதி வெடித்துச்  சிதற, தீப்பற்றிய விமானம் மலை மீது மோதியது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்ன ஆனது என்பதை உணராமலேயே உயிரிழந்தார்கள்.  அதுவரையில் கொலம்பியா சந்தித்திராத கொடூரம். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு எஸ்கோபார்தான் காரணமென்று உடனடியாகவே  அறிவிக்கப்பட்டது.

அதற்கு இரண்டு காரணங்களும் முன்வைக்கப்பட்டன. ஒன்று- எஸ்கோபாரை தன்னுடைய எதிரியாக வெளிப்படையாக அறிவித்திருந்தவர் லூயிஸ்  கார்லோஸ் கேலன். அதிபர் தேர்தல் வேட்பாளரான இவர் தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய  தேர்தல் நிர்வாகியான சீஸர் கேவேரியா, பாப்லோ எஸ்கோபாருக்கு எதிராக எல்லாவிதமான உதவி களையும் அமெரிக்காவுக்கு செய்துகொண்டிருந்தார்.  சீஸர் அந்த விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தது. எனினும், கடைசி நேரத்தில் தன்னுடைய பயணத் திட்டத்தை அவர் மாற்றிக்கொண்டதால்  உயிர் தப்பினார். அந்தக் கடைசி நிமிட மாற்றத்தை அறியாமல் வெடிகுண்டு வெடித்தது என்று காரணம் சொல்லப்பட்டது.

இரண்டு-அந்தஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் மெதிலின் கார்டெல்லின் சரக்கு சுமார் முப்பதாயிரம் கிலோ கோகெயின்,  அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டது. காலி கார்டெல்லின் காட்டிக் கொடுத்தலே இதற்குக் காரணமென்று நம்பப்பட்டது. அந்த கார்டெல்லின்  முக்கியதலையின் காதலி ஒருவர், அந்த விமானத்தில் பயணித்தார். காலி கார்டெல்லை அச்சுறுத்த எஸ்கோபார் இந்த நடவடிக்கையில் இறங்கினார்  என்றும் சொல்லப்பட்டது. இதுமாதிரி நிறைய காரணங்களை ஊடகங்கள் பட்டியலிட்டன. கொலம்பியாவின் போதைத் தடுப்புப் பிரிவினரும்,  அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. போலீசாரும் தினம் தினம் புதுப்புதுக் கதைகளை ஊடகங்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

இந்த விபத்தில் இரண்டு அமெரிக்கர்கள் இறந்தார்கள் என்று காரணம் காட்டி, ஒட்டுமொத்த விசாரணை அதிகாரத்தையும் அமெரிக்கா கைப்பற்றியது.  எஸ்கோபாரையும், அவரது சகா லா கிக்காவையும் முதன்மை குற்றவாளிகள் என்று அறிவித்தது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் லா கிக்கா  கைது செய்யப்பட்டு, அமெரிக்காவில் நீதிவிசாரணை நடந்து மரணதண்டனைக்கு உள்ளானார். விமானம் வெடித்ததன் பின்னணிக் கதையாக அமெரிக்கா  சொன்னது இதுதான். மெதிலின் கார்டெல் தலைவர்கள் எஸ்கோபாரைச் சந்தித்தார்கள். சீஸர் கேவேரியாவின் பயணத் திட்டத்தை எடுத்துச் சொல்லி,  விமானத்தை குண்டு வைத்துத் தகர்க்க அனுமதி பெற்றார்கள். மூன்று வெவ்வேறு கார்களில் வெடிகுண்டின் பாகங்களை விமான நிலையத்துக்குக்  கொண்டு வந்தார்கள்.

அதை விமான நிலையத்தில் பொருத்தி ஐந்து கிலோ எடையுள்ள டைனமைட்டாக உருவாக்கினார்கள். ‘சூஸோ’ என்று கூறப்படுகிற தற்கொலைப்  படையைச் சேர்ந்த ஒருவனை மரியோ என்கிற பெயரில் அந்த விமானத்துக்குள் ஏற்றினார்கள். இந்த வெடிகுண்டைத் தயாரித்ததாக ஒருவனை  நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள் அமெரிக்க எஃப்.பி.ஐ. போலீசார். மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்களிடமிருந்து, தான் லட்சக்கணக்கில் பணம் பெற்று,  இந்த வேலையைச் செய்ய சம்மதித்ததாக அவன் சாட்சி கூறினான். இந்த சம்பவத்தையடுத்தே அமெரிக்கா தன்னுடைய அதிரகசிய உளவுப்படையான  சென்ட்ரா ஸ்பைக்கை கொலம்பியாவுக்கு அனுப்பியது. அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் வந்திறங்கிய சென்ட்ரா ஸ்பைக் பிரிவினர், சிறிய ரக  விமானங்களை கொலம்பிய நகரங்களுக்கு மேலாக ஏவி, பாப்லோ எஸ்கோபார் மீதான தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்