நாணய மனிதர்!



சங்ககால நாணயம் முதல் இக்கால காசு வரை சேகரிக்கும் சாமான்யர்!

‘‘எந்தவொரு நாட்டோட வரலாற்றை தெரிஞ்சுக்கவும் செப்பேடுகள், கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் உதவுது. ஆனா, இது எல்லாத்தையும் விட நாணயங்களுக்கு முக்கியப் பங்கிருக்கு. அதுல பொறிக்கப்பட்டிருக்கிற சின்னம், எழுத்தை வைச்சே வரலாற்றை தெரிஞ்சுக்கலாம்!’’இப்படிச் சொல்பவர் வரலாற்றுப் பேராசிரியராக இருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. செக்கு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி சென்னை ரெட்டேரி யில் வசிக்கும் சின்னப்பா பூபதி தான் இப்படி அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்!

தனது 10வது வயதிலிருந்து நாணயங்களைச் சேகரித்து வரும் இவரிடம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள் முதல் இப்போது புழக்கத்தில் இருக்கும் காயின்ஸ் வரை இருக்கின்றன. தன்னிடம் இருக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால / தற்கால நாணயங்களை அவ்வப்போது சுத்தம் செய்து சின்னச் சின்ன கவர்களில் அவற்றை பிரித்துப் போட்டு ஆல்பமாக வைத்திருக்கிறார். ‘‘சொந்த ஊர் காரைக்குடில உள்ள தென்கரை. அப்பா தோல் நிறுவனத்துல வேலை பார்த்தார். அம்மா இல்லத்தரசி.

அவங்ககிட்ட சில பழைய காசுகள் இருந்துச்சு. பத்து ரூபாய் வெள்ளிக் காசு. அப்புறம் இந்திராகாந்தி படம் பொறிக்கப்பட்ட அஞ்சு ரூபா காசு. அப்பாவுக்கு பரிசா அவர் முதலாளி கொடுத்தது. அதுவரைக்கும் எனக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐம்பது காசுகள் தான் தெரியும். இது வித்தியாசமா இருந்தது. இதே மாதிரி நிறைய வித்தியாசமான காசுகள்  இருக்குமேனு தோணுச்சு. புழக்கத்துல இல்லாத காசுகள் எங்க கிடைக்கும்னு அப்ப தெரியாது. அதனால மத்தவங்க கொடுக்கிற காசை வாங்கி வைச்சுப்பேன்...’’

என்று சொல்லும் சின்னப்பா பூபதி, படிப்பை முடித்தபின் இதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.‘‘பழைய சாமான்களை எல்லாம் ஒருநாள் கடைல போட்டாங்க. அப்ப பொருட்களை எடுக்க வந்த கடைக்காரர் மூலமா அவர்கிட்ட சில காயின்ஸ் இருக்கறது தெரிஞ்சுது. கூடவே போய் அவர் கடைல இருந்த சில ஓட்ட காலணா, செம்பு காசுகளை வாங்கினேன். அதனோட மதிப்போ, எந்தக் காலத்தை அது சேர்ந்ததுனோ அப்ப தெரியாது.

இதுக்கு அப்புறம் பழைய பொருட்கள் விக்கிற ஒவ்வொரு கடைக்கா போய் ‘காசு இருக்கா’னு கேட்டு வாங்க ஆரம்பிச்சேன். இருந்தது காரைக்குடி இல்லையா... அதனால பழைய காசுகள் நிறைய கிடைச்சது. ஒருநாள் அதுவரை நான் வாங்கியதை எல்லாம் எடுத்து ஒவ்வொண்ணா பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப அதுல பொறிக்கப்பட்டிருந்த முத்திரைகளும் சின்னங்களும் ‘அட’ போட வைச்சது. பொதுவா ஒரு ரூபா நாணயத்துல ஒரு பக்கம் ஒரு ரூபாய்னும் இன்னொரு பக்கம் சிங்கத் தலையும் இருக்கும்.

அதுவே குதிரை, காளை மாடு, மீன்... என இருந்தா? இதைப்பத்தி தெரிஞ்சுக்க நாணயங்கள் பத்தின நூல்களை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன்...’’ என்ற சின்னப்பா பூபதி, சென்னை வந்த பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கரூர், மதுரை, திருச்சி என சுற்றிச் சுற்றி நாணயங்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்.  ‘எல்லா ஊர்லயும் பழைய சாமான் கடைகள் உண்டு. அதனால எங்க போனாலும் அங்க இருக்கிற கடைகளை எட்டிப் பார்ப்பேன். அவங்ககிட்ட இருக்கிற காசை வாங்குவேன். என் ஆர்வத்தைப் பார்த்தவங்க அதுக்குப் பிறகு எப்ப அவங்களுக்கு காசு கிடைச்சாலும் எனக்குத் தகவல் சொல்லத் தொடங்கினாங்க.

ஒருமுறை திருச்சிக்குப் போயிருந்தப்ப பழைய காசை உருக்கி ஈயம் பூசிட்டு இருந்ததைப் பார்த்தேன். பகீர்னு ஆகிடுச்சு. உடனே அவங்ககிட்ட இருந்த காசை எல்லாம் வாங்கிட்டு வந்து ஆராய்ந்தேன். அப்பதான் அது சாதவாகன பேரரசோட நாணயம்னு தெரிஞ்சுது! இப்போதைய தெலுங்கானா, சீமாந்திரா, மகாராஷ்டிராவோட தென் பகுதியை சங்க காலத்துக்கு அப்புறம் ஆண்டவங்க சாதவாகனர்கள்தான். விவரம் தெரிஞ்சதும் பொக்கிஷமே கிடைச்ச சந்தோஷம்!

பழைய சாமான் கடைல இருக்கிறவங்களுக்கு இதனோட அருமை தெரியாது. வெளிநாடுகள்ல பல லட்சங்கள்... ஏன், கோடிகள் கொடுத்துக்கூட வாங்கத் தயாரா இருக்காங்க. அதே மாதிரி காரைக்குடில பெரும்பாலும் பழைய வீடுகள்தான், இல்லையா? அவங்க அப்பப்ப வீட்டை சுத்தம் செய்வாங்க. அப்ப கிடைக்கிற காசுகளை வேஸ்ட்டுனு தூக்கிப் போடுவாங்க. அதுமாதிரி நேரத்துல அவங்களைத் தொடர்பு கொண்டு நான் வாங்குவேன்...’’ என்று சிரிக்கும் பூபதி, ஆற்றங்கரையில் மண் அரிக்கும்போதும் சில நாணயங்கள் கிடைக்கும் என்கிறார்.

‘‘திருச்சி, மதுரை, கரூர் மாதிரியான ஊர்கள்ல ஆத்தங்கரையோரமா சிலபேர் மணலை அரிப்பாங்க. அப்ப சில பழைய பொருட்கள் கிடைக்கும். அதுல நாணயங்களும் சிக்கும். இதுதவிர சங்கு, மிருகங்களோட பற்கள்... இதெல்லாமும் கிடைக்கும். அதையும் வாங்கிச் சேகரிக்கறேன். இதுபோக ஃபேஸ்புக் வழியாவும் கலெக்ட் பண்ணறேன். நாணயம் சேகரிக்கிறவங்களை நுமிஸ்மாடிஸ்ட்னு சொல்வாங்க. முகநூல்ல இதுக்கான குழு இருக்கு. ஒவ்வொருத்தரும் தங்ககிட்ட இருக்கிற நாணயங்கள், அது பத்தின விவரங்களை அதுல பதிவு செய்வாங்க.

சிலர்கிட்ட ஒரே மாதிரி நான்கைந்து இருக்கும். அவங்ககிட்ட இல்லாததை நாம பண்டமாற்று முறைல கொடுத்து நமக்கானதை வாங்கிக்கலாம். உண்மையை சொல்லணும்னா இந்தக் குழு வழியாதான் ஒவ்வொரு நாணயம் குறித்த விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டேன்...’’ என்ற பூபதி, தன்னிடம் இருக்கும் நாணயங்கள் குறித்து விவரித்தார். ‘‘பொதுவாக எல்லா நாணயங்கள்லயும் ரெண்டு முகம் இருக்கும். மன்னர் காலத்துல அவங்க ஆட்சி யைக் குறிக்கக்கூடிய சின்னம் ஒரு முகத்துல பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதாவது மீன்னா, பாண்டியர்கள். சில நாணயங்கள்ல மன்னர்களோட முகமும் இருக்கும். செஞ்சி நாயக்கர் காலத்துல தமிழ், தெலுங்கு, நாகரி மொழிகள்ல காசுகளை வெளியிட்டாங்க. ஒரு பக்கத்துல ராமர் வலது கைல அம்பு, இடது கைல வில்லோட நின்னுட்டு இருப்பார். மறுபக்கம் ‘ஸ்ரீகிருஷ்ண’னு தெலுங்குல பொறிச்சிருப்பாங்க. வட்ட வடிவுல செம்புல இதை தயாரிச்சிருக்காங்க. தஞ்சைல முத்திரைக் காசுகள் புழக்கத்துல இருந்திருக்கு. சதுரமா முன்பக்கத்தோட வலது புறத்துல சூரியன், அதுக்கு கீழ இரண்டு கொம்புகளுள்ள காளை, இடது புறத்துல யானை;

மறுபக்க காசின் மேல்பக்கத்துல ஒரேயொரு காளை! வெள்ளி, செம்பு இந்த இரண்டிலும் இதை செய்திருக்காங்க. கி.மு.3ம் நூற்றாண்டுல இதை வணிகத்துக்கு பயன்படுத்தியிருக்காங்க! 2000 / 1500 வருஷங்களுக்கு முன்னாடி நாணயங்களுக்கு வடிவம் எல்லாம் கிடையாது. கையால தட்டித்தான் சின்னங்களை பொறிச்சிருக்காங்கக். கிழக்கிந்தியக் கம்பெனி வந்த பிறகுதான் வட்ட வடிவ உருவம் நாணயங்களுக்கு கிடைச்சுது.

ஒவ்வொரு ராஜ்ஜியத்தோட செழிப்பையும் அவங்க வெளியிட்ட நாணயங்களை வைச்சு தெரிஞ்சுக்கலாம். சங்க காலத்துல யவனர்களும் அதுக்குப் பிறகு சீனர்களும் தமிழகத்துல வணிகம் செய்திருக்காங்க. அப்ப உபயோகத்துல இருந்த காசுகள் எனக்கு மதுரைல கிடைச்சது!’’ என்று சொல்லும் பூபதி, தன்னிடம் இருக்கும் நாணயங்களை வைத்து விரைவில் கண்காட்சி நடத்தப் போகிறார்!  

- பிரியா

படங்கள் : அருண்