டபுள் மீனிங் டயலாக் இந்தப் படத்துல கிடையாது!



கஜினிகாந்த் பற்றி சொல்கிறார் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குநர்

என் முந்தைய படங்களை மனசுல வச்சு, தியேட்டருக்கு வராதீங்க! இது முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினர். குடும்பத்தோடு வந்து ரசிக்கலாம்...’’ முகம் மலர சொல்கிறார் ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என அடல்ட் கன்டன்ட் படங்களை இயக்கிய சன்தோஷ் பி.ஜெயக்குமார். ஆர்யா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ இயக்கி முடித்திருக்கும் இவர், தனது மூன்றாவது படத்தில்தான் ஃபேமிலி ஆடியன்ஸை மகிழ்ச்சிப்படுத்த முடிந்திருக்கிறது என்கிறார். ‘‘எதிர்ப்புகளை மீறி, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ கிராண்ட் சக்சஸ். சந்தோஷமா இருக்கு.

அந்தப் படம் ரிலீசானதும் தியேட்டர் விசிட் போனேன். ஆடியன்ஸ் ரியாக்‌ஷனை கவனிச்சேன். யாருமே ‘கொடுத்த காசு வீணா போச்சே’னு சொல்லலை! படம் பார்த்தவங்க, தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்னு எல்லோருமே ஹேப்பி. பேய்ப் பட டிரெண்ட் மாதிரி என் படம் அடல்ட் ஜானரை தொடக்கி வைக்குமானு கேட்டா... தெரியாதுனுதான் பதில்  சொல்ல முடியும். ஆனா, தொடர்ந்து அடல்ட் படங்களும் வரணும். அப்பதான் நிறைய விஷயங்களை வெளிப்படையா பேசுவோம். முக்கியமான விஷயம்... அடல்ட் கன்டன்ட் படங்களை எடுக்கறது சாதாரண விஷயமில்ல! மீட்டர் பக்காவா செட் ஆகணும். கதைனு ஒண்ணு இருக்கணும். முடிச்சு பலமா விழணும். அப்பதான் மக்கள் ரசிப்பாங்க...’’ என்கிறார் சன்தோஷ் பி.ஜெயக்குமார்.


‘இ அ மு கு’வை சினிமாத்துறைல இருக்கறவங்களே எதிர்க்கறாங்க. எப்படி எல்லோரையும் சமாளிச்சீங்க?

எதிர்த்தவங்களுக்கு ஒரு விஷயம் புரியல. அவங்க அத்தனை பேருமே ‘குடும்பத்தோடு பார்க்க முடியுமா?’, ‘சமுதாயத்தை சீரழிக்குது’னு சொல்றாங்க.  பூஜை போட்டப்பவே இது அடல்ட் கன்டன்ட் படம்; 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும் பார்க்க வந்தா போதும்னுதான் சொன்னோம். குடும்பத்தோடு வாங்கனு அழைக்கவே இல்ல!

சென்சார்லயும் ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுத்து நாங்க சொன்னதை வழிமொழிஞ்சாங்க. இப்படியிருக்கும்போது ‘குடும்பத்தோடு பார்க்க முடியுமா’னு கேட்டா எப்படி? நாட்டுல எவ்வளவோ அநியாயங்கள், மக்களுக்கு எதிரான விஷயங்கள் நடக்குது. நடந்திட்டிருக்கு. அதுக்கு எதிரா என் படத்தை இயக்கறவங்க குரல் கொடுத்தா நல்லா இருக்கும்! சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க!

எப்படி வந்திருக்கு ‘கஜினிகாந்த்’?

சூப்பரா! இந்தப் படத்தோட சிறப்பம்சமே இதுல டபுள் மீனிங் டயலாக்ஸ், காட்சிகள் இல்லை என்பதுதான். ‘இருட்டு அறையில்...’ ஷூட்டிங் அப்ப தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் கூப்பிட்டார். ‘ஆர்யாவை வைச்சு ஒரு படம் பண்றேன். தெலுங்குல சூப்பர் ஹிட் ஆன ‘பலே பலே மஹா திவோய்’ ரீமேக். இதையும் நீங்கதான் டைரக்ட் பண்றீங்க’னு சர்ப்ரைஸ் கொடுத்தார். அடுத்த வாரத்துல ஷூட்டிங் கிளம்பிட்டோம். 40 நாட்கள்ல மொத்தப் படத்தையும் முடிச்சுட்டோம். ‘கஜினிகாந்த்’ல ஆர்யா அக்ரிகல்சர் சயின்ட்டிஸ்ட்.

ஹீரோயின் சாயிஷா பரதநாட்டிய டீச்சர். ‘ஆடுகளம்’ நரேன், சம்பத், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், காளி வெங்கட், மனோபாலா, மதுமிதானு நிறைய நட்சத்திரங்கள் உண்டு. என் முந்தைய படங்கள்ல ஒர்க் பண்ணின டெக்னிஷீயன்ஸ் இதுலயும் இருக்காங்க. வழக்கம் போல பள்ளுவின் ஒளிப்பதிவு எனக்கு பக்கபலம். பாலமுரளிபாலா, இசை பலம். என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் எடிட்டர் பிரசன்னா, ஆல் இன் ஆல் பலம்.

என்ன சொல்றாங்க ஆர்யாவும், சாயிஷாவும்..?

ஆர்யா நல்ல நண்பர். ரொம்பவே சிம்பிள் அண்ட் ஹம்பிள். தன் பலம் / பலவீனத்தை அறிந்தவர். ‘இருட்டு அறையில்...’ ரிலீசானப்ப ‘மச்சான்... என்ன ரெஸ்பான்ஸ்..?’னு ஆர்வமா விசாரிச்சார். பாங்காக்ல காலைல ‘இருட்டு அறையில்...’ ஷூட்டும், மதியம் ‘கஜினிகாந்த்’ படப்பிடிப்பும் மாறி மாறிப் போச்சு.  ஒருநாள் மதிய ஷூட்டிங்குக்கு வரவேண்டிய ஆர்யா, தவறுதலா காலைல நடந்த ‘இ அ மு கு’ படப்பிடிப்புக்கு வந்துட்டார்!

அப்ப நாங்க டாஸ்மாக் பாடலை எடுத்துட்டு இருந்தோம்.‘சரி, வந்தது வந்துட்டீங்க... சில ஸ்டெப்ஸ் ஆடிட்டுப் போங்க’னு ஆர்யாவை ஆட வைச்சோம். அவரும் சந்தோஷமா கெளதம் கார்த்திக்கோட ஆடினார்! முதல் நாள் ஷூட்டிங்குலயே சாயிஷா நடிப்பைப் பார்த்து அசந்துட்டேன். ‘அடுத்து விஜய், சூர்யா படமெல்லாம் நிச்சயம் நடிப்பீங்க’னு சொன்னேன். இப்ப அவங்க சூர்யா சார் படத்துல நடிக்கறாங்க! பிரமாதமான டான்ஸர்.

அடுத்து...?

தெலுங்குப் பக்கம் போயிட்டு வரலாம்னு இருக்கேன். உடனே ‘டோலிவுட்ல அதிக சம்பளம் தர்றாங்களா’னு கேட்காதீங்க! அதே தயாரிப்பாளருக்குத்தான் பண்றேன். நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர், அதை வாங்கி விநியோகிப்பவர், பார்க்க வரும் ரசிகர்கள்... இவங்க எல்லாருமே திருப்தி அடையணும். இதுதான் என் பாலிசி. கைவசம் நிறைய ஸ்கிரிப்ட் இருக்கு. ஒரு ஆக்‌ஷன் லவ் கதை... அப்புறம் பியூர் லவ் ஸ்டோரி. இந்த இரண்டையும் முடிச்சுட்டு ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரெண்டு படங்களுக்கும் பார்ட் 2 பண்ற ஐடியா இருக்கு!       

- மை.பாரதிராஜா