காளி



பெற்றோரைத் தேடும் இளைஞனின் கதை. அமெரிக்காவில் மருத்துவராக விஜய் ஆண்டனி. அவர் கனவில் வந்து மிரட்டும் முரட்டுக்காளையும், விரட்டும் பெரும் பாம்பும். கனவுக்கான காரணங்கள் தேடுகிறார். இடையில் தன் பெற்றோர்கள் தன்னை தத்தெடுத்த விபரம் கிடைக்கிறது. சொந்த பெற்றோர்களை கண்டடைந்தாரா? முடிவு என்ன... என்பதே ‘காளி’. அண்டர்ப்ளே நடிப்பில் பொருந்த விஜய் ஆண்டனி மெனக்கெட்டிருக்கிறார்.

ஒன்றுக்கு நான்காக அஞ்சலி, அமிர்தா, ஷில்பா, சுனைனா என பெண்களின் அணிவகுப்பு. அமிர்தாவின் கண்ணும், உடல் மொழியும் அவரை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். யோகி பாபுவுக்கு இது அடுத்த கட்டம். எந்த நெருக்கடி யான நிலையிலும் கிடைக்கும் பொழுதெல்லாம் சிரிப்பு மூட்டுகிறார்.

எந்த இடைஞ்சலும் இல்லாமல் பறக்கிறது திரைக்கதை. ஆங்காங்கே சபாஷ் போட வைக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. வேல ராமமூர்த்தியில் ஆரம்பித்து ஏராள கதாபாத்திரங்கள். அத்தனையும் சீரான ஒன்றிணைப்பில் சேர்கிறது. விஜய் ஆண்டனியின் பாடல்களில் ‘அரும்பே’ ஆகச்சிறந்த இனிமை. கதாபாத்திரங்களின் தோள்கள் மேல் பயணித்து பரபரக்கிறது ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு. இன்னும் மெருகேற்றியிருந்தால் ‘காளி’ கவர்ந்திருக்கும்.

- குங்குமம் விமர்சனக்குழு