பார்டர் தாண்டினால் மரணம்!



டாகுமென்ட்ஸ் இல்லாமல் எல்லையைத் தாண்டினால் மனிதர்களுக்கு ஜெயில் என்றால், விலங்குகளுக்கு..? பல்கேரியா நாட்டிலுள்ள  கோபிலோவ்ட்ஸ்கி கிராமத்தைச் சேர்ந்த பென்கா எனும் பசு, மேய்ச்சல் ஆர்வத்தில் புற்களைத் தின்றபடி செர்பிய எல்லைக்குச் சென்றுவிட்டது. 

செக்போஸ்ட்டில் கண்கள் சிவந்த அதிகாரிகள் உடனே கர்ப்பிணியாக இருந்த பென்காவுக்கு மரண தண்டனை விதித்தனர். மேய்ச்சலுக்குச்  செல்லும்போது சரியான ஆவணங்களை ஒப்படைத்து பசுவை மேய்க்க வேண்டும் என்பது ஐரோப்பிய யூனியனின் சட்டம். இப்போது பசுநேசர்கள்  கர்ப்பிணிப் பசு பென்காவை விட்டுவிடுங்களேன் என ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு இமெயில் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

அமைதிக்கு களப்பலி!

உலகெங்கும் அமைதிக்கு பாடுபடும் ஐ.நா.வின் ராணுவப்படையில் பங்கேற்ற இந்திய வீரர்கள் கடந்த எழுபது ஆண்டுகளில் பெருமளவு பலியாகியுள்ள  தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து 163 ராணுவப் பிரிவுகளைக் கொண்டுள்ள ஐ.நா. அமைதிப்படை 1948ம் ஆண்டிலிருந்து இயங்கி  வருகிறது.  இதில் இறந்துபோன 3,737 பேரில் 163 வீரர்கள் இந்தியர்களே. ஐ.நா. அமைப்பிற்கு ராணுவ உதவிகளை வழங்கும் மூன்றாவது பெரிய நாடு  இந்தியாதான்.

மத்திய கிழக்கு, ஹைதி, லெபனான், சைப்ரஸ், காங்கோ, சகாரா, தெற்கு சூடான் ஆகிய இடங்களில் 6,693 வீரர்கள் ராணுவப் பணியில் உள்ளனர்.  ‘‘நீலநிற ஹெல்மெட் அணிந்து அமைதிக்கு பாடுபடும் வீரர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். இப்போது 13 அமைதி திட்டங்களைச்  செயல்படுத்தி வருகிறோம்...’’ என்று ஐ.நா. பாதுகாப்புப் படை தொடங்கி எழுபது ஆண்டுகளானதை முன்னிட்டு நடந்த விழாவில் ஐ.நா. தலைவரான  அன்டானியோ குட்டேரஸ் பேசியிருக்கிறார்.

லேட் ஆனதால் ‘லேட்’ ஆனார்!

கொஞ்சம் லேட்டாயிருச்சு என எக்ஸ்க்யூஸ் கேட்காமல் இங்கு யாருமில்லை. ஆனால், தாமதத்தின் பரிசு இதுபோல் இருந்தால்..? மத்திய தில்லியின் ராஜேந்திர நகரில் தங்கியிருந்த வருண் சுபாஷ் சந்திரன், குடிமைத் தேர்வுக்கு படித்து வந்தார். கர்நாடகாவைப் பூர்வீகமாகக்  கொண்ட வருண், யுபிஎஸ்சி தேர்வு எழுதக் கிளம்பினார்.

ஹால்டிக்கெட்டை கவனிக்காமல் வேறு தேர்வு மையத்துக்குச் சென்றவர், பிறகு பதறி தனக்கான தேர்வு மையத்துக்கு வந்து சேர்ந்தபோது மணி 9.24.  ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான் லேட். ஆனால், யுபிஎஸ்சி விதிப்படி 9.20க்குள் எக்சாம் சென்டரில் மாணவர்கள் இருக்கவேண்டும். எனவே, தேர்வு  அதிகாரி வருணை வெளியேற்ற, மூன்றாவது முயற்சியாக தேர்வு எழுத வந்தவர் மனமுடைந்து அறையில் தூக்கில் தொங்கிவிட்டார். ‘என்னை  மறந்தால் மகிழ்வேன்’ என குடும்பத்தினருக்கு குறிப்பெழுதி வைத்திருந்தார் என காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

டெஸ்ட் ட்யூப் பேபி சீதா!

நவீன இந்தியாவை முன்னேற்ற புராணகாலத்து நாயகர்கள் வந்து விட்டார்களோ என மக்கள் மிரளுமளவு அமைச்சர்கள் பேச்சில் பொளந்து  கட்டுகிறார்கள். அண்மையில் உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் தன் உரையில்  தொழில்நுட்பம் பற்றிய எடுத்துக்காட்டுக்கு புராண காலத்துக்குச் சென்றார்.

மகாபாரதம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட முதல் நிகழ்ச்சி, நாரதர் முதல் பத்திரிகையாளர்... என்றெல்லாம் பேசி மிரள வைத்தவர், ராமாயண  காலத்தில் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் உண்டு; அதற்கு சீதா தேவியே உதாரணம் என்றார்! ‘மண்பானையில் கிடைத்ததாக சீதாவை கூறுகிறார்களே...  அந்த கான்செப்ட்தானே டெஸ்ட் ட்யூப் குழந்தை?!’ என அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களுக்கு காப்பு!

ஃபேஸ்புக், ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பெண்களை பழிவாங்குவதற்காக போடப்படும் பதிவுகள், புகைப்படங்களுக்கு தண்டனை விதிக்க  இந்திய அரசு தயாராகிவிட்டது. இந்தியா மட்டுமல்ல, உலகளவிலும் பெண்களை ஒடுக்க ரிவென்ஞ் பார்ன் உள்ளிட்ட ஆயுதங்கள் மனிதநேயமற்று  சமூகவலைத்தளங்களில் பயன்படுகின்றன. இப்புகைப்படங்கள், பதிவுகள் பெண்களின் வாழ்க்கையை குலைப்பதால் இதற்கு கடிவாளம் போட பெண்கள்  மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பெண்களை தவறாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு 1986 யை விரிவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘புதிய சட்டத்திருத்தம்  சமூக வலைத்தளங்களுக்கு மட்டுமல்லாது, விளம்பரங்கள், குறுஞ்செய்தி, பேனர் விளம்பரங்கள் அனைத்துக்கும் பொருந்தும்...’ என பெண்கள்  அமைச்சகம் கறாராக தன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. எனவே, ஆபாசமான, கண்ணியக்குறைவான படங்கள் வெளியிட்டால் லாக்அப் களி நிச்சயம்!

தொகுப்பு: ரோனி