வைகைப் புயலுக்கு என்ன ஆச்சு?



இந்தக் கேள்விதான் கோடம்பாக்கம் முழுக்க சுற்றிச் சுற்றி வருகிறது. தமிழக மக்களின் இதயங்களை தன் அசாத்திய காமெடியால் எளிதில்  வசப்படுத்தியவர் ‘வைகைப் புயல்’ வடிவேலு. தன் உடல்மொழியிலும், குரலிலும் எக்கச்சக்க மாடுலேஷன் காட்டி நடிப்பதில் கில்லாடி. படங்களில்  அவர் பேசிய டயலாக்குகளும், லுக்ஸும்தான் இன்று மீம்ஸுகளாக உலாவுகின்றன.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்டவர் கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ஐந்தே ஐந்து படங்களில் மட்டுமே ட்ராக் காமெடி பண்ணியிருக்கிறார். இது  ஏன் என்ற கேள்வி ஒரு பக்கம் எழும்போதே ‘வடிவேலுக்கு ரெட் கார்டா?!’ என்ற கேள்வி இண்டஸ்ட்ரி முழுக்க சுற்றிச் சுற்றி வந்து அதிர வைக்கிறது.  வடிவேலு ஹீரோவாக நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய மூன்று படங்களும்; ட்ராக் காமெடி செய்த  ‘மம்பட்டியான்’, ‘மறுபடியும் காதல்’, ‘கத்திச் சண்டை’, ‘சிவலிங்கா’, ‘மெர்சல்’ ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தாததாலேயே அந்த அசாத்திய  கலைஞனுக்கு வாய்ப்புகள் வரவில்லையா? அப்படியெல்லாம் இல்லை.

தனது தொழில் மீது மரியாதை குறைகிற... அலைபாயும் குணம் அவருக்கிருக்கிறது. அதனால்தான் இந்த நிலை... என வருத்தப்படுகிறார்கள் அவரது  நண்பர்கள். இதன் காரணமாகவே ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ க்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அவருக்கு நடிக்கத் தடை விதிக்கலாமா என யோசிக்க  ஆரம்பித்திருக்கிறார்கள்... என கவலைப்படுகிறார்கள். ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விஷயத்தில் அப்படி என்னதான் நடந்தது? கோடம்பாக்கத்தில்  விசாரித்தால் தகவல்கள் கொட்டுகின்றன. சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ குழந்தைகளைக் கவர்ந்த படம்.

ஷங்கர் தயாரித்ததில் லாபம் சம்பாதித்துக் கொடுத்த ஒருசில படங்களில் இதுவும் ஒன்று. எனவே அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க அவர்  விரும்பினார். சிம்புதேவனும் அதற்கான கதையோடு வந்தார். வடிவேலுவிடம் கதை சொல்லப்பட்டது. ஆனால், பெரிய அட்வான்ஸ் தொகை கொடுத்த  பிறகே அவர் நடிக்க சம்மதித்தார். இதன் பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில் ஏனோ ‘மெர்சலி’ல் நடிக்க முடிவெடுத்தார். அதில் மூன்று  மாதங்கள் ஓடிவிட்டன. பின்னர், ‘நீங்க சொன்ன சமயத்துல ஷூட்டிங் தொடங்கல...’ என்று சொல்லி கூடுதல் சம்பளம் கொடுத்தால் மட்டுமே தேதி  தருவேன் என மீண்டும் ஒரு மூன்று மாதங்கள் இழுத்தடித்தார்.

ஷங்கரின் நிறுவனம் பெரிய பில்டப்பெல்லாம் கொடுத்து படத்தை அறிவித்து விட்டதால் வேறுவழியின்றி கூடுதல் சம்பளத்தைக் கொடுத்தனர்.  அதாவது வடிவேலுவுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு வருடமான பிறகே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. முதல் நாள் படப்பிடிப்பில்  ஷங்கர் உட்பட மொத்த யூனிட்டும் காத்திருக்க, பூஜை நேரம் முடிந்தபின் மதியம் சாவகாசமாக வடிவேலு வந்து சேர்ந்ததாகச் சொல்கிறார்கள்.  என்றாலும் யாரும் டென்ஷனைக் காட்டிக்கொள்ளாமல் விட்டுவிட... ஷூட்டிங் இனிதே தொடர்ந்தது.

இதற்கிடையில் வடிவேலுவின் பர்சனல் காஸ்ட்யூமரே படத்துக்கும் காஸ்ட்யூம் பொறுப்பை ஏற்றார் என்றும் அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும்  முரண்பாடு வெடித்ததாகவும், பின்னர் வடிவேலு சம்மதத்துடன் பெப்சியில் பஞ்சாயத்து நடந்து அவருக்கு ரூபாய் 10 லட்சங்கள் செட்டில்  செய்யப்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். இதன் பின்னர் எவ்வித பிரச்னையுமின்றி ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்க... திடீரென்று ஒருநாள்  புரொடக்‌ஷனைக் கூப்பிட்டு ஏக வசனத்தில் பேசி, தன் பழைய காஸ்ட்யூமரே மீண்டும் வேண்டும் என வடிவேலு அடம்பிடித்தாராம்.

அதேபோல் முன்பே அவரிடம் போட்டுக் காட்டி டியூனை ஓகே வாங்கி, அவர் சம்மதத்துடன் பாடல் எழுத ஒரு பாடலாசிரியரிடம்  கொடுத்திருக்கிறார்கள். வரிகளைக் கேட்டு வடிவேலுவும் மகிழ்ந்திருக்கிறார். இந்நிலையில் சரியாக பாடல் காட்சிகள் எடுக்கப்பட வேண்டியதற்கு  முதல்நாள், டியூனையும் பாடலாசிரியரையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்! இதன்பிறகே கவுன்சிலுக்கு சென்றிருக்கிறார் தயாரிப்பாளர் ஷங்கர். நடிகர்  சங்கம் இப்பிரச்னையைத் தீர்க்க தங்களால் இயன்றவரை முயற்சிக்கிறது. என்றாலும் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இதற்குள் மாதங்கள் ஓடிவிட, அமைக்கப்பட்ட செட்டுகள் வீணாக, இதற்காக செலவழிக்கப்பட்ட கோடிகளுக்கு வட்டிகள் ஏற... ‘நம் அண்ணனா இப்படி...’  என கோடம்பாக்கமே வடிவேலுவைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதற்கிடையில் வடிவேலுவிடம் சமரசம் பேச தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற  முறையில் விஷால் சென்றபோது, ‘மேலும் கூடுதலாக ஒன்றரைக் கோடி கொடுத்தால் படத்தில், தான் நடிப்பதாக’ வைகைப் புயல் கண்டிஷன்  போட்டாராம். எந்த அளவுக்கு இவையெல்லாம் உண்மைகள் என்று தெரியாது. ஆனால், வடிவேலுவின் இப்போதைய போக்கு பலரையும் அதிர்ச்சிக்கும்  வேதனைக்கும் ஆழ்த்தியிருப்பது மட்டும் உண்மை.

இதன் காரணமாகவே அவருக்கு ரெட் கார்ட் போடப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ‘அவர் ஹீரோவாக நடித்தால் ஐந்து கோடிதான் பிசினஸ்  தாங்கும் என்ற நிலையில் பதினைந்து கோடியில் தயாராகும் புலிகேசியை ஏன் உதாசீனம் செய்கிறார் என்றே தெரியவில்லை...’ என  வருத்தப்படுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள். கேள்விப்படும் இந்த விஷயங்கள் எல்லாம் புரளியாகவும் இருக்கலாம். பொய்யாக இருக்க வேண்டும்  என்பதுதான் நம் பிரார்த்தனையும். ஏனெனில், வடிவேலு கலைஞனல்ல... மகா கலைஞன்! தன் திறமையால் அனைவரும் தன்னைக் கொண்டாடும்  நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் தனது இப்போதைய குணத்தால் அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் தமிழக மக்களின்  வேண்டு கோள்.

மை.பாரதிராஜா