ஃபேர்வெல்லுக்கு நோட்டீஸ்!



மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 155வது பட்டாலியன் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தாமோதர், அண்மையில் நடைபெற்ற  மூத்த வீரரின் பிரிவு உபசார விழாவில் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. விழாவில் அனைவரையும் கணக்கெடுத்த தாமோதரின் மூத்த  அதிகாரி, அடுத்த நாள் ‘ஏன் வரவில்லை’ என தாமோதருக்கு விளக்கம் கேட்டு அதிகாரபூர்வ நோட்டீசைத் தந்தார்.

டென்ஷனான தாமோதர், ‘‘பிரிவு உபசார விழா ஒன்றும் அதிகாரபூர்வ அரசு விழா அல்ல...’’ என சூடாக பதில் கடிதம் எழுத... இப்போது அவரது  பணிச்சூழல் இறுக்கமாகியுள்ளது. கடந்த மார்ச்சில் பிரதமரின் பெயருக்கு முன் ‘ஸ்ரீ’ போட்டு பேசாத வீரரின் ஏழு நாள் சம்பளம் கட் ஆனது  நினைவிருக்கலாம்!

நெருப்பில் கருகிய காசு!

ராஜஸ்தானிலுள்ள ஆஜ்மீர் நகரிலுள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் நடைபெற்ற தில்லான திருட்டில், திருடர்களின் எக்ஸ்பீரியன்ஸ்  போதாமையால் கரன்சி மொத்தமும் கரியானது அதிகாலை 3 மணிக்கு பர்பெக்ட்டாக காரில் வந்த திருடர்கள் கேஸ் கட்டருடன் ஏடிஎம்முக்குள்  புகுந்தனர். எஸ்பிஐ ஏடிஎம் அருகே நின்ற செக்யூரிட்டியை அடித்துச் சாய்த்துவிட்டு கேஸ் கட்டரின் மூலம் ஏடிஎம்மை அறுத்தனர்.

ஆனால், பணப்பெட்டியின் இடத்தை சரியாக ஊகிக்காததால் நெருப்பு பட்டு அதிலிருந்த 4 லட்சம் ரூபாயும் எரிய ஆரம்பித்தது. பதறிய திருடர்கள்  ஸ்பாட்டை விட்டு கிளம்பவும் ஏடிஎம் நெருப்பு அலாரம் அடிக்கவும் சரியாக இருந்தது. உடனே உஷாரான போலீஸ் அங்கு வந்து சேரும்போது சிசிடிவி  வீடியோவும், கரன்சி சாம்பலும் மட்டுமே மிச்சமிருந்தது. இப்போது சிசிடிவி மூலம் திருடர்களைப் பிடிக்க போலீசார் முயற்சித்து வருகிறார்கள்.

தொகுப்பு: ரோனி