தங்க செல..!



‘காலா’ பார்த்தவர்கள் எல்லாம் செல்வியைக் கொண்டாடுகிறார்கள். ‘தங்க செல...’ எனப் பாடாத நபரில்லை! ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என  முகமெல்லாம் புன்னகைக்கிறார் ஈஸ்வரி ராவ்.

‘‘ஆக்சுவலா க்ளாமர், அல்ட்ரா மாடர்ன்னு சினிமா வேற மாதிரியா நகர்ந்த காலத்துல நான் அறிமுகமானேன். அந்தப் போட்டிக்குள்ள இருக்க  விருப்பமில்ல. க்ளாமர் எனக்கு செட்டும் ஆகாது. ஒருவேளை கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா மாதிரி ஜாம்பவான்கள் படத்துல அறிமுகமாகி  இருந்தா முன்னாடியே நான் க்ளிக் ஆகியிருக்கலாம்!’’ என்று சொல்லும் ஈஸ்வரி ராவிடம் இதற்கு முன் ரஜினி, கமல் படங்களில் நடிக்க வாய்ப்பு  வந்ததா என்று கேட்டோம்.

‘‘நீங்க வேற! சாதாரண படங்கள் கிடைக்கறதே பெரிய விஷயமா இருந்தது. இதுல ஸ்டார் படங்கள்... அந்தளவுக்கு நான் ஆசையும்படலை. ஆனா,  ‘விருமாண்டி’ அபிராமி கேரக்டர்ல நடிக்க ஒரு சான்ஸ் வந்தது. என்னவோ மிஸ் ஆகிடுச்சு...’’ என்றவர் ‘காலா’ வாய்ப்பைப் பற்றிச் சொல்லும்போது  மலர்ந்தார். ‘‘ஒருநாள் ரஞ்ஜித் போன் செஞ்சார். ‘தலைவர் படம். நீங்கதான் அவருக்கு ஜோடி. கதை சொல்ல எப்ப வரட்டும்’னு கேட்டார். ரஜினி  சாருக்கு ஜோடியான பிறகு கதையாவது கேரக்டராவது.

ஓகே சொல்லிட்டேன்! கொஞ்சம் வெயிட் போடச் சொன்னார். சம்மதிச்சேன். என் வாழ்க்கையோட பெஸ்ட் மொமெண்ட் அதுதான்...’’ என்று சொல்லும்  ஈஸ்வரி ராவ், ‘காலா’ டீசர் வெளியானது முதலே பாராட்டு மழையில் நனைகிறார். ‘‘மொத்த கிரெடிட்டும் ரஞ்ஜித்துக்கு போய்ச் சேரணும். ‘கலக்கிட்டே  மா’னு ரஜினி சார் வாய் நிறையப் பாராட்டினார். படம் பார்த்துட்டு இப்ப எல்லாரும் என் நடிப்பை கொண்டாடறாங்க. என்ன சொல்றதுனு தெரியலை...  நெகிழ்ச்சியா இருக்கு!’’ என்றவர், தனக்கு குடும்பம்தான் எல்லாம் என்கிறார்.

‘‘அடிப்படைல நான் சாதாரணப் பெண். குழந்தைங்க, குடும்பம்னு வாழறவ. பெரிய பெண் நிவேதா, ஆறாவது படிக்கிறா. சின்னவன் ரிஷப் ராஜா,  நான்காவது படிக்கறான். இவங்கதான் என் உலகம். இதுக்கு இடைல பட வாய்ப்பு வந்தா, என் கேரக்டருக்கு கொஞ்சமாவது ஸ்கோப் இருக்கானு  பார்ப்பேன். மத்தபடி வேற கண்டிஷன் எதுவுமில்ல...’’ என்று சொல்லும் ஈஸ்வரி ராவுக்கு நயன்தாராவின் நடிப்பு பிடித்திருக்கிறதாம். ‘‘சமீபகாலமா  கதைத் தேர்வுலயும் நடிப்புலயும் அவங்க அசத்தறாங்க. பார்க்க அழகாவும் இருக்காங்க!’’ சலங்கை ஒலிப்பதுபோல் சிரிக்கிறார் ஈஸ்வரி ராவ் என்கிற  செல்வி!

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்