சென்னையில் பூத்த மும்பையின் தாராவி!



வியக்க வைக்கிறது ‘காலா’வின் பிரம்மாண்ட செட். மும்பையின் தாராவி பகுதியை அப்படியே 25 கி.மீ. தூரத்துக்கு சென்னையில்  உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் இராமலிங்கம்.

‘‘உண்மையான சவால், ‘கபாலி’ செட்தான். மலேசியா, தாய்லாந்து நாடுகளை அப்படியே அமைச்சோம். இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லாத செட்.  நிறைய தேடல்கள் அதுக்குத் தேவையா இருந்துச்சு. இதனுடன் ஒப்பிடறப்ப ‘காலா’ செட் அவ்வளவு சவாலா இல்லைனுதான் சொல்லணும்...’’  அடக்கமாகப் பேசும் இராமலிங்கம், விழுப்புரம் மாவட்டம் பேராவூரைச் சேர்ந்தவர். ‘‘அப்பா, அம்மா ரெண்டு பேருமே விவசாயிகள். இதுபோக அப்பா,  தெருக்கூத்துக் கலைஞரும் கூட. அவரைப் பார்த்து நானும் தெருக்கூத்துக்கு வந்தேன்.

அங்கிருந்து சினிமா. ஆனா, நடிக்கிற ஆர்வம் எப்பவும் இருந்ததில்ல. தெருக்கூத்து அடிப்படைல ஒரு கலை. அதனோட எக்ஸ்டென்ஷனா கலை  சார்ந்தே ஏதாவது வேலை பார்க்கணும்னு நினைச்சேன். சின்ன வயசுல இருந்தே ஓவியத்துல ஆர்வம் உண்டு. அதனால ஓவியக் கல்லூரில  சேர்ந்தேன்...’’ என்று சொல்லும் இராமலிங்கத்துக்கு கல்லூரியில் கிடைத்த நண்பர்தான் இயக்குநர் பா.ரஞ்ஜித். ‘‘அவரை படைப்பாளியா, மனிதரா,  பணியாளரானு எல்லாம் பிரிக்க முடியாது. இடத்துக்குத் தகுந்த மாதிரி ரஞ்ஜித் எப்பவும் மாறமாட்டார்.

ஓவியக் கல்லூரி நாட்களில் இருந்தே அவர் அப்படித்தான். நேர்மையான மனிதர். இவ்வளவு உயரத்தைத் தொட்ட பிறகும் அவர்கிட்ட தலைக்கனத்தை  பார்க்கவே முடியாது!’’ என நண்பரை வியந்தவர், ‘காலா’ செட் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். ‘‘25 கி.மீ. அளவுக்கு தாராவியை அமைக்க எங்களுக்கு 9  மாதங்கள் வரை ஆச்சு. முதல்ல பிளானிங். அப்புறம் ப்ரீ புரொடக்‌ஷன். பிறகு கட்டுமானம். ஷூட்டிங் முடியற வரை மாற்றம் செஞ்சுகிட்டே  இருந்தோம். இதுக்காக மும்பை தாராவியைப் பல நாட்கள் சுத்திச் சுத்தி வந்தோம். பலகட்ட ஆய்வுகள் செஞ்சோம்.

100% சரியா செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது...’’ என்ற இராமலிங்கம், செட் அமைக்கும்போது எந்த சிக்கலையும், தான்  எதிர்கொள்ளவில்லை என்கிறார். ‘‘நம்மால முடியாதுனு நினைக்கிறப்பதான் பயம் வரும். முடியும்னு நம்பினா தைரியம்தான் பிறக்கும். கிடைச்ச  களத்தை முழுமையா பயன்படுத்திகிட்டேன். அதுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. தாராவி செட்டுல ஒவ்வொரு  பகுதியும் ஒவ்வொரு டைமன்ஷன்ல இருக்கும். பானை செய்கிற கும்பரோடா பகுதி, மசூதி தெரு, டோபிக்கரை, மார்க்கெட்... இப்படி நிறைய  டைமன்ஷன்ஸை படத்துல பார்க்கலாம்.

நிஜ தாராவில இருக்கிற ஃபேன்ஸி ஸ்டோர், அதனோட பெயர்... இப்படி ஒவ்வொன்றையும் நுணுக்கமா கொண்டு வந்தோம். இதுக்காக கூகுள் மேப்  வைச்சு அந்தந்த இடங்கள் சரியா பொருந்தற மாதிரி செஞ்சோம். ஒரு நாளைக்கு குறைஞ்சது ஆயிரம் பேராவது வேலை செய்வோம். 15 முதல் 20  ஏக்கர் வரை ஏராளமான தெருக்களை மட்டுமே அமைச்சோம். இப்ப அங்க நீங்க போனா கூட முழுசா சுத்தி வர மூன்று மணி நேரங்களாகும்!’’ என்ற  இராமலிங்கத்தை மனதார ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். ‘‘‘கபாலி’ செட்டைப் பார்த்துட்டே என்னைப் பாராட்டினார்.

அப்படிப்பட்டவர், ‘காலா’ செட்டை சுத்தி வந்துட்டு கட்டிப் பிடிச்சார். அவரை திரைல பார்த்து கைதட்டி ரசிச்சவன். அப்படிப்பட்டவன் அவர் படத்துல  வேலை பார்ப்பேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்ல. அதுவும் தட்டிக் கொடுத்து ‘எக்ஸலன்ட்’னு அவர் சொன்னதெல்லாம் கனவு மாதிரி இருக்கு.  ஒருநாள் எங்கம்மாவை படப்பிடிப்புக்கு கூட்டிட்டுப் போனேன். ‘பாருங்க உங்க மகனோட திறமையை’னு அம்மாகிட்ட வியந்தார்!’’ என்று நெகிழும்  இராமலிங்கம், தன் எதிர்காலம் குறித்து தெளிவாக இருக்கிறார்.

‘‘எப்பவும் பணத்து மேல ஆர்வம் இருந்ததில்ல. அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களை செய்திருக்கறதால, ‘இவன் அதிக சம்பளம் கேட்பான்  போல’னு நினைக்க வேண்டியதில்ல. கலை இயக்குநருக்கு வாய்ப்புள்ள நிறைய படங்கள்ல பணிபுரியணும். சமூகம் சார்ந்த படங்கள்ல நிச்சயம்  வேலை பார்க்கணும்னு விரும்பறேன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால இன்னொரு கலைஞனோட கஷ்டநஷ்டங்கள் எனக்குத் தெரியும்.  அதைப் புரிஞ்சுதான் வேலை செய்வேன்!’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் இராமலிங்கம்.

ஆர்.எஸ்.ராஜா