உதை வீரன்!



நியூஸ் வியூஸ்

உலகின் மிகப்பெரிய உதைபந்து திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்கிவிட்டது. வழக்கம்போல இம்முறையும்  நாம் பார்வையாளர்கள்தான். ஆனால், ஆசியக் கண்டத்தில் கால்பந்து ஆட்டத்தைப் பொறுத்தவரை நாம் தாதாவாக இருந்த காலமும் உண்டு. 1951  மற்றும் 1962ன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன் இந்தியாதான். அவ்வளவு ஏன், 1956ல் நடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் வெண்கலப்  பதக்கத்தை நழுவவிட்டு நான்காவது இடத்துக்கு வந்தோம். ஒரே ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி களில் இந்தியா விளையாடக் கூடிய  வாய்ப்பு கிடைத்தது.

அது 1950ல் பிரேஸில் நாட்டில் நடந்த போட்டி. ஆசியக் கண்டத்தில் இருந்து இந்தியா தகுதி பெற்று க்ரூப்-3 பிரிவில் ஸ்வீடன், இத்தாலி, பராகுவே  ஆகிய ஜாம்பவான் அணிகளுடன் மோதுமென்று இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். எனினும், “நாங்கள் ஷூ அணிந்து விளையாடி  பழக்கமில்லை. வெறும் காலோடுதான் ஆடுவோம்...” என்று விசித்திரமான நிபந்தனையை அப்போதைய இந்திய வீரர்கள் விதித்தார்கள். இந்திய  கால்பந்து ஆணையமும் தன் பங்குக்கு வீரர்கள் கலந்துகொள்வதற்கான செலவுகளை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிகு செய்தது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் பெருமளவு செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தும், ஷூ அணியாமல் விளையாடக்கூடாது என்கிற விதியில்  மட்டும் உறுதியாக இருந்ததால் இந்தியா, அந்த அரிய வாய்ப்பை நழுவ விட்டது. ஆக, உலகளவிலான தரவரிசையில் 94வது இடத்தில் (ஜூன் 2018ன்  படி) இருக்கும் இந்திய அணிக்கு 32 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள வாய்ப்பிருக்கும் உலகக்கோப்பையில் விளையாடுவது என்பது 68 ஆண்டுகளாக  கனவாகவே ஆகிவிட்டது. அதற்காக கால்பந்து ரசிகர்கள் சோர்ந்து, முடங்கிப் போய்விட வேண்டியதில்லை.

சமீப பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளாக மீண்டும் இந்திய கால்பந்து அணி, கொஞ்சம் கொஞ்சமாக எழுச்சி பெற்று வருகிறது. 2007 மற்றும் 2009ல்  நேரு கோப்பை, 2008ல் ஏ.எஃப்.சி சேலஞ்ச் கோப்பை, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பைக்கு தகுதி... என சர்வதேச அரங்கில் மீண்டும்  இந்தியா வெற்றிநடை போடத் தொடங்கியிருக்கிறது. இதற்கேற்ப ஐ.எம்.விஜயன், பாய்ச்சுங் பூட்டியா, சுனில்சேத்ரி, வி.பி.சத்யன், சுப்ரதா பால், சந்தேஷ்  ஜிங்கன் என்று ஏராளமான நட்சத்திரங்களும் இந்த காலக்கட்டத்தில் உருவாகி இருக்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் சாதனை, இம்மாத தொடக்கத்தில் மும்பையில் நடந்த கண்டங்களுக்கு இடையேயான போட்டி.  இந்தியா, கென்யா, சீன தைபே, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியில் இந்தியா, சாம்பியன் பட்டம் வென்று தன்னுடைய  கெத்தைக் காட்டியிருக்கிறது. குறிப்பாக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 8 கோல்கள் அடித்து, உலகையே மிரள வைத்தார். ஆம்.  உலகையே மிரள வைத்தார்.

ஏனெனில், உலகமெங்கும் கொண்டாடப்படும் அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் அடித்திருக்கும்  கோல்களின் எண்ணிக்கையான 64-ஐ (124 போட்டிகள்), வெறும் 102 போட்டிகளிலேயே எடுத்திருக்கிறார் சுனில் சேத்ரி. இப்போது விளையாடிக்  கொண்டிருக்கும் வீரர்களில் போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு (150 போட்டிகளில் 81 கோல்கள்) அடுத்தபடியாக கோல்களின்  எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சாட்சாத் இந்தியாவின் சுனில் சேத்ரிதான்.

இதுநாள் வரை எந்த இந்திய கால்பந்து வீரரும் எட்டாத உயரம் இது. சர்வதேச அளவில் 50 கோல்களைத் தாண்டிய முதல் இந்தியரும் இவரேதான்.  இந்தியா, ஒரு நாடாக வேண்டுமானால் கால்பந்து தரவரிசையில் கிட்டத்தட்ட 100வது இடத்தில் இருக்கலாம். ஆனால், இந்திய அணியின் கேப்டனோ,  சமகால சர்வதேச கால்பந்து நட்சத்திரங்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கிறார். கண்டங்களுக்கு  இடையேயான போட்டித் தொடர் தொடங்கியபோது, இந்தியா விளையாடிய முதல் போட்டியைக் காண ஸ்டேடியத்துக்கு வந்தவர்கள் வெறும் 2,500  பேர்தான்.

கிட்டத்தட்ட அரங்கம் நான்கில் ஒரு பகுதிதான் நிறைந்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ காட்சியில் சுனில் சேத்ரி பேசி, அதை சமூகவலைத்  தளங்களில் பதிவேற்றினார். “நீங்கள் எங்களைப் பாராட்டு கிறீர்களா, திட்டுகிறீர்களா என்பது எனக்கு முக்கியமில்லை. ஆனால், தயவுசெய்து  புறக்கணிக்காதீர்கள். உங்கள் நாடு விளையாடுகிறது. உங்கள் வீரர்கள் விளையாடுகிறார்கள். திட்டோ, பாராட்டோ, நேரில் வந்து வெளிப்படுத்துங்கள்!”

சேத்ரியின் இந்த வீடியோ வேண்டுகோளை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி,  டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா ஆகியோர் கண்டுவிட்டு, “விளையாட்டு ரசிகர்கள் இந்திய கால்பந்து அணியை, மைதானத்துக்குச் சென்று  ஆதரிக்க வேண்டும்...” என்று கேட்டுக் கொண்டார்கள். அதையடுத்து மும்பை கால்பந்து மைதானத்தை நோக்கி அலை அலையாக மக்கள் திரண்டார்கள்.  கென்யாவுடனான இந்தியாவின் லீக் போட்டிதான் சுனில்சேத்ரியின் நூறாவது போட்டி.

அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள், விளையாட்டு நடக்கும் நாளுக்கு முன்பாகவே முற்றிலும் விற்றுத் தீர்ந்தன. தன் வேண்டுகோளை ஏற்று  அரங்குக்கு வந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கோல்மழை பொழிந்து தலைவாழை விருந்து வைத்தார் சேத்ரி. 33 வயதாகும் இந்திய கேப்டன்,  செகந்திராபாத்தில் பிறந்தவர். நேபாள வம்சாவளி குடும்பம். அப்பா, இராணுவ அதிகாரி. அவரும் கால்பந்து வீரர்தான்.

அவர் மட்டுமல்ல, சேத்ரியின் அம்மா, இரட்டைச் சகோதரிகள் ஆகியோரும்கூட நேபாள தேசிய அணிக்காக கால்பந்து விளையாடியவர்கள்தான். ஆறு  மாதங்களுக்கு முன்புதான் தன் நீண்டநாள் காதலி சோனம் பட்டாச்சார்யாவை மணந்தார் சுனில் சேத்ரி. சோனத்தின் அப்பா சுப்ரதா பட்டாச்சார்யாவும்  பிரபலமான கால்பந்து வீரர்தான். ஆக, சுனில் சேத்ரியின் வீடும் மினி ஃபுட்பால் கிரவுண்டாகத்தான் அமைந்திருக்கிறது.  


யுவகிருஷ்ணா