ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன்-6

அரசருக்கு உரிய எந்த ஆடை, ஆபரணங்களும், பாதுகாப்பு வீரர்களும் இன்றி சாதாரண உடையில் வெகு சாதாரண மனிதரைப் போல் தன்னந்தனியாக  பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் ஆதிவராகன் குகைக் கோயிலுக்குப் பின்னால் அந்த விடியற்காலையில் வருவார் என்பதை சற்றும்  எதிர்பார்க்காத காபாலிகன் உணர்ச்சிவசப்பட்டான். அந்த உணர்ச்சியை அதிர்ச்சியின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும் செயலை அடுத்து அவர்  செய்தபோது தடுமாறினான்.

ஏனெனில் ஸ்ரீராமபுண்ய வல்லபரைச் சந்தித்த பிறகு எந்த மூங்கில் குழலை ஊதும்படி புலவர் தண்டி தனக்கு கட்டளையிட்டிருந்தாரோ அதேபோன்ற  மூங்கில் குழலை எடுத்து பல்லவ மன்னர் ஊதியதுதான்.  இதனையடுத்து நூறு வராகங்கள் சேர்ந்து எழுப்பும் ஒலி பிறந்து அந்த இடத்தையே அதிர  வைத்தது. ‘‘மன்னா... தாங்கள்... இங்கு...’’ என வார்த்தைகள் வராமல் தடுமாறிய காபாலிகனின் வாயை தன் கரங்களால் பல்லவ மன்னர் மூடினார்.  கண்களால் ‘பேசாமல் இரு...’ என ஜாடை காட்டினார். அது ஏன் என அடுத்த கணமே புரிந்தது.

ஆதிவராகன் கோயிலுக்குள்ளிருந்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் வேகமாக வெளியில் வந்தார். மறைந்திருந்த வீரர்களும் பதற்றத்துடன் அவரை  நெருங்கினார்கள். அவர் மூங்கில் குழலை ஊதவில்லை என்பதும், வேறு யாரோ ஊதியிருக்கிறார்கள் என்பதும் வந்த வீரர்களுக்குப் புரிந்ததால் அவர்கள்  திகைத்தார்கள். ‘‘எல்லாம் புலவர் தண்டியின் வேலை...’’ வீரர்களிடம் ஸ்ரீராமபுண்யவல்லபர் சொல்வது மறைந்திருந்த பல்லவ மன்னருக்கும்  காபாலிகனுக்கும் தெளிவாகக் கேட்டது.

‘‘மூங்கில் குழலின் ஓசைக்கும் நமது நடமாட்டத்துக்கும் இருக்கும் தொடர்பை தனக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள புலவர் முயற்சிக்கிறார்...’’  புன்னகைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்தார். ‘‘புலவரை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். வாருங்கள்...’’  என்றபடி நடக்க முற்பட்டார். ‘‘அமைச்சரே...’’ முன்னால் நின்றிருந்த வீரன் தயங்கினான். ‘‘என்ன..?’’ ‘‘அந்த காபாலிகனை...’’ ‘‘ஒன்றும் செய்ய வேண்டாம்.  சற்று நேரத்துக்கு முன் புலவரின் கட்டளைப்படி மூங்கில் குழலை ஊதியது கூட அவன்தான்.

திடீரென காபாலிகனைக் கைது செய்தால் அது மக்கள் மத்தியில் தேவையில்லாத மதக் குழப்பத்தை ஏற்படுத்தும். தவிர இன்னும் சிறிது காலத்துக்கு  அவன் வெளியில் நடமாடுவதுதான் நமக்கு நல்லது...’’ சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு மந்தகாசத்துடன்  முன்னால் நின்ற வீரனை ஏறிட்டார். ‘‘தன்னைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்பதை நமக்கு அறிவிக்கும் விதமாக முதலில் கதம்ப இளவரசன்  மூங்கில் குழலை ஊதினான். இப்போது இரண்டாவது முறையாக நூறு வராகங்கள் ஒலி எழுப்பியதோ நம் வீரர்களுக்கான செய்தி.

ஊதியது நாமல்ல என்பது வீரர்களுக்குத் தெரியாது. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படி இந்நேரம் மல்லைக் கடற்கரையை நோக்கி நகர்ந்திருப்பார்கள்.  அவர்களை இப்போது தடுக்க முடியாது. தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஊதியது யாராக இருந்தாலும் அது நமக்குப் பயனளிப்பதுதான்.  எனவே, இப்போது மல்லை அரண்மனைக்குச் சென்று அடுத்து செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசிப்போம்...’’ சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர்  விடுவிடுவென்று வீரர்கள் சூழ நடந்தார். அவர் மறையும் வரை காத்திருந்த பல்லவ மன்னர் குறுஞ்சிரிப்புடன் தலைப்பாகையைப் பிரித்து அதன் ஒரு  நுனியால் தன் முகத்தை மறைத்தார்.

பிறகு தன்னைத் தொடரும்படி காபாலிகனுக்கு கண்களால் கட்டளையிட்டுவிட்டு மல்லை கடற்கரையை நோக்கி நடந்தார். அந்த இடத்தை அவர்கள்  அடையவும் மூன்று வீரர்கள் தங்கள் புரவிகளை ஒரே சீராக நடத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. மக்கள் கூட்டத்துடன் கலந்தபடி பல்லவ  மன்னர் நின்றார். அவரை ஒட்டி காபாலிகன் பயபக்தியுடன் நின்றான். மல்லைக் கடற்கரையின் மேடான பகுதிக்கு அந்த மூன்று வீரர்களும் வந்ததும்  நின்றனர். உடனே நடுவில் இருந்தவன் ஏதோ சைகை செய்ய, பக்கங்களில் இருந்த இரு வீரர்கள் தங்கள் புரவிகளின் பக்கவாட்டுகளில்  செருகப்பட்டிருந்த கொம்புகளை எடுத்து பலமாக மூன்று முறை விட்டுவிட்டு ஊதினார்கள்.

சட்டென அந்தப் பிரதேசத்தில் இரைச்சல் நின்று அமைதி பரவியது. அதுவரை கடலில் நீராடிக் கொண்டிருந்த ஆடவரும் பெண்டிரும் நீராட்டத்தை  நிறுத்தி கரையைப் பார்த்தனர். வந்திருக்கும் வீரர்கள் யார் என்பதை உணர்ந்து கொண்ட சில ஆடவர்கள் கடலில் இருந்து கரையேறி தங்கள்  ஆடைகளை உடுத்த விரைந்தனர். வீரர்களாக இருந்தவர்கள் தரைமீது கிடத்தப்பட்டிருந்த வாட்களையும், கேடயங்களையும் நாடி அவற்றைக்  கையிலெடுத்துக் கொண்டு புரவி வீரர் மூவர் இருக்குமிடம் நோக்கி விரைந்தனர்.

திடீரென வீரர்களிடமும் மற்றவர்களிடமும் துரிதப்பட்டு விட்ட நடவடிக்கைகளைப் பார்த்த பெண்டிரும் நீராட்டத்தை முடித்துக் கொண்டு பாறையின்  மறைவிடங்களுக்குச் சென்று ஆடைகளை அணிந்தவண்ணம் புரவி வீரர் மூவரையும் பார்த்து பிரமிப்படைந்தனர். மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்த  பரதவர் கூடத் தங்கள் தங்கள் வலைகளை இழுத்துச் சுருட்டிப் படகுகளில் போட்டு கரைக்கு வர முற்பட்டனர். மல்லைக் கடற்கரையில் இருந்த  மாந்தர் அனைவருக்கும் புரவி வீரர் மூவரும் சாளுக்கிய வீரர்கள் என்பது புரிந்தது.

கடந்த ஒரு திங்களாகவே சாளுக்கியர்கள் படையெடுப்பு பற்றிய வதந்திகள் எங்கும் உலாவி வந்தன. எனவே, விருப்பமற்ற செய்தியை வெளியிடவே  அந்த வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களது உள்ளுணர்வு உணர்த்தியது. ஆனால், அந்தச் செய்தி ஊகத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும்  என்பதை மட்டும் அவர்கள் அணுவளவும் அறியாததால், நடுவில் இருந்த புரவி வீரன் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் திக்பிரமை  பிடித்து நின்றார்கள். பக்கத்திலிருந்த வீரர்கள் கொம்புகளை எடுத்து ஊதியதை அடுத்து, கடலாடியவர்கள் அருகில் கூட்டமாக வந்ததும் நடுவில் இருந்த  வீரன் தன் கையை உயர்த்திக் கூறினான்.

‘‘பல்லவர் குடிமக்களே! இன்று முதல் நீங்கள் சாளுக்கிய வேந்தரின் குடிமக்கள்! சாளுக்கிய மன்னர், ரணரசிகன், ராசமல்லன், விக்கிரமாதித்த மகாப்பிரபு  காஞ்சி மாநகருக்குள் பிரவேசித்து விட்டார்! காஞ்சி மண்டலம் இனி சாளுக்கியரின் ஆணைக்கு உட்பட்டது. ஆகவே, மாமல்லபுரத்துவாசிகளான நீங்கள்  அனைவரும் உங்கள் இல்லங்களுக்கு அமைதியாகச் செல்லுங்கள். பின்னால் வரும் சாளுக்கியர் படை நகர ஆதிக்கத்தை ஏற்கும் வரை வீடுகளை  விட்டு வெளியே வரவேண்டாம்!’’ இப்படி அவன் சொல்லி முடித்ததும் மீண்டும் கொம்புகள் இருமுறை ஊதப்பட்டன.

பிறகு அப்புரவி வீரர்கள் மூவரும் கடற்கரையில் இருந்து கூப்பிடும் தூரத்திலிருந்த தெருக்களை நோக்கி விரைந்தார்கள். அதேசமயத்தில் காஞ்சி -  மல்லைப் பாதையில் பெரும் டங்கா ஒன்று விடாமல் சப்தித்தது. அத்துடன் குதிரைப் படை ஒன்றின் சீரான குளம்பொலிகள் கேட்கத் தொடங்கின. சில  கணங்கள் அப்படியே சிலையாக நின்ற அந்த மக்கள், மெல்ல மெல்ல எட்ட இருந்த நகரப் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். காபாலிகனின்  கைகளைத் தட்டிவிட்டு பல்லவ மன்னர் நடக்கத் தொடங்கினார். கேட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத காபாலிகன் எதுவும் பேசாமல் அவரைப்  பின்தொடர்ந்தான்.

கூட்டத்துடன் நடந்த மன்னர், வணிகத் தெருவுக்குள் நுழைந்ததும் சற்றே தன் நடையின் வேகத்தைக் குறைத்தார். அவர் கண்கள் சுற்றிலும் சலித்தன.  மெல்ல மெல்ல கூட்டத்திலிருந்து பிரிந்தவர், ஏழாவது கடையை நெருங்கியதும் சட்டென அதற்குள் நுழைந்தார். அவர் மீது கண் வைத்திருந்த  காபாலிகனும் அதேபோல் நுழைந்தான். இவர்களுக்காகவே திறந்திருந்த அக்கடை அதன் பிறகு திரைச்சீலையால் மூடப்பட்டது. வேறு யாரும்  தங்களைப் பின்தொடரவில்லை என்பதை காபாலிகன் கவனித்தான். மன்னரோ திரும்பியே பார்க்காமல் ஐந்தடி நடந்தார்.

பிறகு குனிந்து தரையிலிருந்த பலகையைத் தூக்கி அதனுள் இறங்கினார். கடைக்குள் ஒரு சுரங்கம் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்காத  காபாலிகன் தன் உணர்வுகளை மறைத்தபடி அங்கிருந்த படிக்கட்டில் இறங்கினான். மெல்லிய அகல் விளக்கு அவர்களை வரவேற்றபோது சமதளத்தை  அடைந்திருந்தார்கள். ‘‘வல்லபா...’’ பல்லவ மன்னர் குரல் கொடுத்தார். ‘‘மன்னா...’’ என்றபடி மறைவிடத்திலிருந்து வெளியே வந்தான் பல்லவ நாட்டின்  புரவிப்படைத் தளபதியான வல்லபன். ‘‘வந்திறங்கிய அரபுப் புரவிகளை சிவகாமி பரிசோதித்தாளா..?’’ ‘‘ஆம் மன்னா. தங்கள் கட்டளைப்படி இச்செயலை  மக்கள் முன்பே மல்லைக் கடற்கரையில் அரங்கேற்றினோம்.

எதிர்பார்த்தது போலவே சிவகாமி தேவியின் தேர்வு பிரமாதமாக இருந்தது...’’ ‘‘நல்லது. அப்புரவிகளை அந்தந்த இடங்களுக்கு அனுப்பிவிட்டாய்  அல்லவா?’’ ‘‘கட்டளையை நிறைவேற்றிவிட்டோம் மன்னா. சாளுக்கியர்களை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கிறோம் என்பதை இப்புரவித் தேர்வு  மக்களுக்கு உணர்த்தியிருக்கும்...’’ வல்லபனின் முகத்தில் நம்பிக்கை சுடர்விட்டது. மன்னர் இயல்பாகத் திரும்பி காபாலிகனை ஏறிட்டார். ‘‘என்ன  சந்தேகம்? கேள்...’’ காபாலிகன் உமிழ்நீரை விழுங்கினான்.

‘‘அதில்லை மன்னா... பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் இப்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள்...’’ ‘‘ஆமாம். அந்த அறிவிப்பைத்தான் நாமும் கேட்டோமே!’’  ‘‘அப்படியிருக்க மக்கள் நம்மை நம்புவார்களா..? எவ்வித போருமின்றி நாட்டை எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று நினைக்க  மாட்டார்களா?’’ ‘‘மாட்டார்கள் காபாலிகரே!’’ வல்லபன் உணர்ச்சியுடன் பதிலளித்தான். ‘‘மூன்று சாளுக்கிய வீரர்களும் அறிவிப்பு செய்தபோது நானும்  அங்கிருந்தேன். முதலில் அதிர்ந்த மக்கள் பிறகு அமைதியாகக் கலைந்தார்கள்.

அதுவும் கட்டுப்பாட்டுடன். எப்படியும் தங்கள் மன்னர் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்படும்போதுதான் இப்படியொரு  அமைதியைக் கடைப்பிடிப்பார்கள்...’’ ‘‘ஆனால், காஞ்சி எதிரிகளின் வசமாகி விட்டதே..?’’ காபாலிகனின் முகத்தில் இனம் புரியாத உணர்வுகள்  தாண்டவமாடின. ‘‘ஆம்...’’ இம்முறை பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் பதில் அளித்தார். ‘‘நாம் எந்த எதிர்ப்பையும் காண்பிக்கவில்லையே...’’  காபாலிகனின் குரலில் ஒலித்தது இயலாமையா அல்லது வேறு உணர்வா என்பது அவனுக்கே தெரியவில்லை.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும் காபாலிகரே. சாளுக்கியர்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு  விரைவாக காஞ்சியை அவர்கள் நெருங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஒருவகையில் இது பல்லவ நாட்டு ஒற்றர்களின் தோல்விதான்.  ஆனால், இதையே வெற்றியாக மாற்ற முடியும். அதைத்தான் நாம் செய்யப் போகிறோம்...’’ மாறாத புன்னகையுடன் மன்னர் பதிலளித்தார். ‘‘ஆனால்..?’’  காபாலிகன் மென்று விழுங்கினான்.

‘‘இழுக்க வேண்டிய அவசியமேயில்லை காபாலிகரே...’’ சட்டென்று வல்லபன் பதில் சொன்னான். ‘‘ஓரளவு போர் முறைகளை அறிந்தவர் நீங்கள்.  எனவே இப்போதிருக்கும் நிலை உங்களுக்குப் புரியும். காஞ்சிக்கு அருகில் சாளுக்கியர்களுடன் இப்போது நாம் போர் புரிந்தால் என்னாகும்?  கலைச்செல்வங்கள் எல்லாம் அழியும். நம் மன்னர் அதை விரும்பவில்லை. அரசுகள் இன்று இருக்கும், நாளை இருக்காது. ஆனால், கலைச்செல்வங்கள்  அப்படியல்ல. அவை காலம் கடந்தும் நிற்கும்.

அவற்றுக்கு எந்த சேதாரமும் ஏற்படக் கூடாது என மன்னர் நினைக்கிறார். அதனால்தான் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு தற்காலிகமாக பல்லவ  மண்டலத்தை எதிரிகளுக்கு ரத்தமின்றி விட்டுக் கொடுத்திருக்கிறோம்...’’ ‘‘அப்படியானால்..?’’ காபாலிகனின் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது. ‘‘போர்  முடியவில்லை..!’’ பல்லவ மன்னரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘போர் நடக்குமா?’’ ‘‘இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது! சிவகாமியின் சபதம் அதை  தொடங்கி வைத்திருக்கிறது!’’  

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்