காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா-65

சிறைவாழ்க்கை திடீரென சிக்கலுக்கு உள்ளானது. பாப்லோவுக்கு நிஜமாகவே சிறையில் இருந்து தப்பிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. சிறைக்குள்  அவர் பாதுகாப்பாகவேதான் இருந்தார். வசதியான வாழ்க்கை என்று சொல்ல முடியாவிட்டாலும், அது சிரமமில்லாத வாழ்க்கையாகத்தான் இருந்தது.

திடீரென அதிபர் கவேரியாவுக்கு ஏனோ பாப்லோ மீது கூடுதல் அழுத்தங்களைத் தரவேண்டு மென்று தோன்றியிருக்கிறது. மெதிலின் கார்டெல்லின்  எதிரி களான காலி கார்டெல்காரர்கள் வெளியே சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களது அரசியல் அல்லக்கைகளை வைத்து இந்த அழுத்தத்தைக்  கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளுக்கு காவாலிகளான காலி கார்டெல்லுடன் கள்ளக் கூட்டணி இருந்ததும் இங்கே  குறிப்பிடத்தக்கது. காலி கார்டெல்லைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு நேரடியாகவே கடிதம் எழுதினார்கள்.

கதீட்ரல் சிறைச்சாலை என்பது ஒப்புக்குச் சப்பாணி. அங்கே பாப்லோவும், அவரது குழுவினரும் சிறைவாசிகளாக அல்லாமல் கூத்தடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்று சில மீடியா செய்திகளை ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டினார்கள். மேலும், சிறைக்குள் இருந்தபடியே போதைத்  தொழிலை மெதிலின் கார்டெல் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கும் சான்றுகளை முன்வைத்தார்கள். மக்கள் மத்தியில் கொலம்பிய அதிபரும்,  பாப்லோவும் கூட்டுக் களவாணிகள் என்பதாக விஷமப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

இது அதிபர் கவேரியாவின் கண்ணியத்துக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய விஷயமாக இருந்ததால் பாப்லோ மற்றும் அவரது குழுவினரை வேறொரு  சிறைக்கு மாற்றக்கூடிய முடிவுக்கு ஜூலை 1992ல் அதிபர் வந்தார். இந்த சூழல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிற பதற்றம் ஏற்கனவே  எஸ்கோபாருக்கு இருந்து வந்தது. சிறை மாற்றம் மட்டுமின்றி தன்னையும் தன் குழுவினரையும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தி, அங்கே அமெரிக்க  சட்டவிதிகளின்படி விசாரணை நடந்து தண்டனை வழங்கப்படவும் கூடும் என்று யூகித்திருந்தார்.

எனவே, சிறையிலிருந்து தப்பி மீண்டும் வனவாசம் அல்லது வேறு பாதுகாப்பான நாடு ஒன்றுக்கு ஓட்டம் பிடிப்பது என்கிற முடிவுக்கு வந்திருந்தார்.  ஒரு நாள் காலை நான்கு லாரிகள் நிறைய ராணுவ வீரர்கள், கதீட்ரல் சிறைக்கு வந்துகொண்டிருப்பதாக ‘பட்சி’ தகவல் அனுப்பியது. அன்று பிற்பகல்  நீதித்துறையின் துணையமைச்சர் ஒருவர் சிறைக்கு வந்தார். அவருடன் சிறைத்துறை இயக்குநர் ஒருவரும், இராணுவ கர்னல் ஒருவரும் இருந்தார்கள்.  அறைகளை சோதனை போடச்சொல்லி அதிபரின் உத்தரவு என்று தகவல் சொன்னார்கள்.

பாப்லோ, அவர்களிடம் வழக்கத்துக்கு மாறான அமைதியுடனேயே பேசினார். “மன்னிக்கவும். நம் அதிபர் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.  காவல்துறையினரோ, ராணுவத்தினரோ எங்கள் சிறைக்குள் புக மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். நீங்கள் சோதனை  போடவேண்டுமானால் சிறைத்துறை அதிகாரிகளை வைத்து செய்யுங்கள். இராணுவத்தையோ, காவல்துறையினரையோ இந்த சிறைச்சாலைக்குள்  நாங்கள் அனுமதிக்க முடியாது!” அமைச்சருக்கும் தர்மசங்கடம்தான். “சார், நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

இராணுவ வீரர்கள் சோதனையிடப் போகிறார்கள் என்கிற தகவல் நாடு முழுக்க பரவிவிட்டது. அவர்கள் சோதனையிடாமல் சென்றால் உங்களுக்கும்  பிரச்னை, எங்களுக்கும் பிரச்னை!” கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் இரு தரப்பும் ஒரு முடிவுக்கு வந்தது.  “இராணுவத்தினர் சோதனையிட நாங்கள் சம்மதிக்கிறோம். ஆனால், அவர்கள் ஆயுதங்களை சிறைச்சாலைக்கு வெளியேவே வைத்துவிட்டு  நிராயுதபாணிகளாகத்தான் உள்ளே வரவேண்டும். உள்ளே ஏதாவது எங்களை செய்ய நினைத்தால், ஒரு இராணுவ வீரன் கூட உயிரோடு வெளியே  வரமாட்டான்!” பாப்லோ சொன்ன இந்த தீர்வினை, இராணுவ கர்னல் ஏற்றுக் கொள்ளவில்லை.

“சிறையில் இருக்கும் ஒரு கிரிமினல், பிரசித்தி பெற்ற கொலம்பிய இராணுவத்துக்கு ஆணையிடுவதா?” என்று சீறினார். மாலை வரை பிரச்னைக்கு  முடிவே வரவில்லை. “நாளையும் வருவோம்...” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். பாப்லோ, நேரடியாக அதிபரிடம் போனில் பேச முயற்சித்தார்.  அதிபரோ, இந்த சங்கடத்தை தவிர்ப்பதற்காக போனையே எடுக்கவில்லை. சிறையிலிருந்து தப்பித்தே ஆகவேண்டிய நெருக்கடி வந்து விட்டது என்பதை  பாப்லோ உணர்ந்தார். ஏற்கனவே, தப்பிக்க வேண்டிய அவசியம் நேரிட்டால் என்னென்ன வழிவகைகள் என்பதையெல்லாம் யோசித்தே வைத்திருந்தார்.

அதற்கு வாகாக ஓரிடத்தில் மின்வேலியை, ஓர் ஆள் புகுந்து வெளியே போகுமளவுக்கு வெட்டியெடுத்திருந்தார்கள். தன் ஆட்களை அழைத்து பாப்லோ  பேசினார். “ஒன்று, நாம் தப்பித்து வெளியேறிவிடுவோம். அல்லது அனைவருமே வீரமரணம் எய்து வோம்...” அன்றிரவு சந்தடி அடங்கிய பிறகு  அனைவரும் மீண்டும் கூடினார்கள். வெளியே அடைமழை பெய்ய ஆரம்பித்ததால், கும்மிருட்டான சூழல் உருவாகியிருந்தது வசதியாக இருந்தது.  ஒருவர் பின் ஒருவராக ஐந்து நிமிட இடைவெளியில் பூனை நடை நடந்து, மின்வேலி சிதைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தார்கள்.

முதலில் கிளம்பியவர் பாப்லோ எஸ்கோபார். எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு கடைசியாகத்தான் பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோ வந்தார்.  எல்லோரும் வந்து சேர்ந்ததுமே மலையில் இருந்து சந்தடி செய்யாமல் வரிசையாக இறங்கத் தொடங்கினார்கள். அதிகாலை 2 மணி என்பதால்,  காவலர்கள் நின்றுகொண்டே தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். மழையில் மலைப்பாதை சொதசொதத்துப் போயிருந்தது. எனவே ஒருவர் கையை  ஒருவர் பற்றியவாறு கவனமாக நடந்தார்கள். இரண்டு மணி நேர நடைக்குப் பிறகு மலையடிவாரத்தை எட்டியிருந்தார்கள்.

இப்போது மழையும் நின்றிருந்தது. சிறை வாசலில் கண்காணிப்பில் இருந்தவர்கள், அங்கிருந்து இவர்களைக் காண முடியும் என்கிற வாய்ப்பு இருந்தது.  மேலும், அங்கிருந்தே சுடமுடியும் என்கிற ஆபத்தும் இருந்தது. எனினும், தப்பித்து வந்த ஏழு பேருமே இராணுவ சீருடை போன்ற வண்ணத்தில் ஆடை  அணிந்திருந்தார்கள். எனவே, தூரத்தில் இருந்து பார்த்தாலும் இராணுவ வீரர்கள் ரோந்து வருகிறார்கள் என்றுதான் கருதுவார்கள். அங்கிருந்து மேலும்  மூன்று மணி நேர நடையில் அருகிலிருந்த சிறுநகரமான எல் சாலதோவுக்கு வந்து சேர்ந்தார்கள். இப்போது நன்கு விடிந்து விட்டது.

அந்த நகரம் உறக்கத்தில் இருந்து எழுந்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. சேறும், சகதியுமான உடையுடன் சாலையில் குழுவாக நடந்து  கொண்டிருந்த இவர்கள் யாருடைய கவனத்தையும் குறிப்பாக ஈர்க்கவில்லை. ஓராண்டுக்கும் மேலான சிறைவாசத்தில் பாப்லோவின் தோற்றமே  ஒட்டுமொத்தமாக மாறிப்போயிருந்தது. எனவே, அவரை பொதுமக்கள் யாரும் சுலபமாக அடையாளம் கண்டிருக்க முடியாது. கொலம்பியாவில்  பாப்லோவுக்கு கிளைகள் இல்லாத நகரமே இல்லை. அங்கேயும் மெமோ என்கிற டீலர் இருந்தார்.

அவருடைய பண்ணை வீட்டுக்குத்தான் இவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கே ரேடியோவை வைத்து செய்திகள் கேட்டார்கள். சிறைச்சாலை மீது  தாக்குதல் நடத்தி பாப்லோ குழுவினரை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று அதிபர் ஆணையிட்டிருக்கிறாராம். அதைத் தொடர்ந்து ஆரவாரமாக  இராணுவத்தினர் துப்பாக்கிகளை முழங்கியபடியே சிறைக்குள் சென்றிருக்கிறார்கள். போட்டது போட்டபடி இருக்க, பாப்லோ & கோ மட்டும் கம்பி  நீட்டிவிட்டதை உணராமல் ஒவ்வொரு அறையாகப் போய் சோதனை செய்துகொண்டிருந்தார்கள்.

பாப்லோ தப்பித்து விட்டார் என்கிற செய்தி அதிபரைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும். கதீட்ரல் சிறைச்சாலையை நோக்கி ஏகத்துக்கும்  ஹெலிகாப்டர்கள் கிளம்பி வந்தன. எல் சாலதோ நகரின் தெருவெங்கும் இராணுவ வீரர்களின் பூட்ஸ் புழுதியைக் கிளப்பியது. இங்கேயே இருந்தால்  சுலபமாக மாட்டிக் கொள்வோம் என்கிற விபரீதம் பாப்லோவுக்குப் புரிந்தது.


(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்