செம போத ஆகாதே-விமர்சனம்



உச்சக்கட்ட போதையில் நண்பன் கருணாகரன் வழிகாட்டுதலில் அதர்வா ஒரு முடிவெடுக்க, அதனால் அவர்களுக்கு வந்த பிரச்னைகள், அவதிகள்,  அதற்கான தீர்வே ‘செம போத ஆகாதே’. பார்க்கும் வேலையோடு சேர்த்து வாழ்க்கையை அனுபவிக்கிறார் அதர்வா. காதலி மிஷ்டியுடன் ஏற்பட்ட  காதல், சில பல காரணங்களால் முடிவுக்கு வருவதுபோல தோன்றிவிட விரக்தியில் அதிக போதையில் ஆழ்கிறார்.

வருத்தத்தில் புலம்புகிற அதர்வாவுக்கு ஒரு பெண் துணையை தற்காலிகமாக ஏற்பாடு செய்கிறார் கருணாகரன். அவரோடு மகிழ்ச்சிக்குத் தயாராகும்  நேரத்தில், பக்கத்து பிளாட்டில் வசிக்கும் தாத்தாவுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட, அதர்வா அந்தப் பெண்ணைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு  மருத்துவமனைக்கு செல்கிறார். திரும்பி வந்த அதர்வாவுக்கு அதிர்ச்சி. அழைத்து வரப்பட்ட அனைகா, இறந்து கிடக்கிறார்!

இதன் பிறகு அதர்வாவின் நடவடிக்கைகளே முழு படம். ஆக்‌ஷன், காமெடி, பரபரப்பு என முயன்ற வகையில் கலகலக்க வைத்திருக்கிறார் இயக்குநர்  பத்ரி வெங்கடேஷ். விறுவிறுப்பு காட்டியதில் இயக்குநருக்கே முதலிடம். முழு வடிவத்தில் கதாநாயகனாக அரங்கேறுகிறார் அதர்வா. போதையில்  உருள்வதும், மிரள்வதும், அடுத்தடுத்த செயல்களால் மேலும் சிக்குவதும், ஒரு முடிவெடுத்து பாலக்காடு வரை சென்று வில்லனை முற்றுகையிட்டு  பிடிப்பதுமாக பொறி பறக்கிறார்.

வெறும் ஆக்‌ஷனை மட்டும் நம்பியிருக்காமல் காமெடி வகையிலும் ஸ்கிரிப்ட் இறங்குவது சிறப்பு. அதர்வாவும், கருணாகரனும் இணையும் காட்சிகள்  எல்லாம் சிரிப்பு ரகளை கருணாகரன், அதர்வாவின் கீழ்வீட்டில் இருக்கும் தேவதர்ஷினி, சேத்தன், மனோபாலா என ஐவரும் இணையும்  பொழுதெல்லாம் கலகல. போதாதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன் வேறு. மிஷ்டி அழகாக, கொஞ்சி பேசுகிறார்.

சொல்லிக்கொள்கிற மாதிரி நடிக்காவிட்டாலும், அள்ளிக்கொள்கிற மாதிரி அழகு. படத்தின் பெரிய திருப்பத்துக்கு உதவி செய்கிறார் அனைகா. அவர்  மாதிரி திறமையான நடிகையை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். ஒரு பாட்டுக்கு அதர்வா குத்து டான்ஸ் போடுவது சர்ப்ரைஸ். ஆனால், அந்த  காட்சி படத்துக்குத் தேவைப்படாமல் விலகி நிற்கிறது. இளைஞர்களை குறி வைத்து அடிக்கும் கமென்ட்ஸ்களுக்குத் தியேட்டர் விசிலடிக்கிறது.

போகப்போக படத்தில் சிரிப்பு ஒன்றே நமக்கு போதுமானதாகி விடுவதால் லாஜிக்களை தவறவிடலாம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள்  ஒன்றாவிட்டாலும், பின்னணியில் புரட்டி எடுக்கிறார். குறிப்பாக சேஸிங் காட்சிகள். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு அவ்வளவு குளுமை. அதர்வாவின்  வீட்டிலிருந்து புறப்படும் கேமரா, கண்ணில் நிற்கிற பதிவில் கொண்டுபோய் சேர்க்கிறது.

வெடிச்சிரிப்புகளில் படம் நகராவிட்டால் கதையே இல்லாமல் திரைக்கதை தவித்திருக்கும். அனைகா இறந்ததும், பிரச்னைகளை உடனே  புரிந்துகொண்டு, அதர்வா பாலக்காட்டுக்குப் பயணமாவது காதில் பூச்சுற்றல். ஆனாலும், உட்கார வைக்கிற லிஸ்டில் நானும் உண்டு எனச்  சொல்லியிருக்கிறது ‘செம போத ஆசாதே’.  


குங்குமம் விமர்சனக்குழு