சரிகா மேம் சொல்லி ஸ்ருதிஹாசன் என் படத்தைத் தயாரிக்கறாங்க!



‘‘டைட்டில் என்ன தெரியுமா? ‘த  மஸ்கிட்டோ பிலாஸபி’! தலைப்பு மாதிரியே கதையும் வித்தியாசமானது. ஒருவகைல எக்ஸ்பரிமென்டல் மூவினு  சொல்லலாம்.

படத்துல திரைக்கதையே கிடையாது! லொகேஷன்னு தனியா இல்ல! மொத்த ஷூட்டிங்கும் என் வீட்லதான் நடந்தது. மேக்கப் இல்ல, லைட்டிங்  இல்ல, டயலாக் இல்ல! அதுக்காக மவுனப் படமானு கேட்காதீங்க! வசனம்னு தனியா யோசிச்சு எழுதலை. நடைமுறைல எப்படிப் பேசுவோமோ அப்படி  உரையாடல் இருக்கும்!’’ படபடவெனப் பேசி வியக்க வைக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் இராதாகிருஷ்ணன்.

இணைய உலகின் வக்கிரங்களையும், அதன் விபரீதங்களையும் பொட்டில் அறைந்தாற் போல் சொன்ன ‘லென்ஸ்’ படத்தை இயக்கியவரின் அடுத்த  அதிரடிதான் ‘த  மஸ்கிட்டோ பிலாஸபி’. இந்தப் படத்தை தயாரித்திருப்பவர் ஸ்ருதிஹாசன்! ‘‘அவங்க நினைச்சிருந்தா பெரிய ஹீரோ படத்தையே  தயாரிக்கலாம். அப்படியிருக்கிறப்ப இந்த ப்ராஜெக்ட் அமையக் காரணங்கள் இரண்டு. ஒண்ணு, சரிகா மேம்.

இரண்டாவது கதை. மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல ‘லென்ஸ்’ திரையிடப்பட்டு சிறந்த இயக்குநருக்கான விருது எனக்குக் கிடைச்சது. அந்த  விழாவோட ஜூரி கமிட்டில ஸ்ருதிஹாசனோட அம்மா சரிகா மேமும் இருந்தாங்க. ‘சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படத்தை  கொடுத்திருக்கீங்க’னு மனசார என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினாங்க! சில மாதங்களுக்கு அப்புறம் அவங்க சென்னை வந்திருந்தப்ப மரியாதை  நிமித்தமா சந்திச்சேன்.

அப்ப பேச்சுவாக்குல இந்தப் படத்தோட கதையை சொன்னேன். ‘பக்கா ரியலிஸ்டிக் மூவி’னு சொல்லி ஸ்ருதி ஹாசன் கிட்ட என்னை  அறிமுகப்படுத்தினாங்க. ஸ்ருதி மேமுக்கும் இந்தக் கதை பிடிச்சிருந்தது. ‘என்னோட இஸிட்ரா மீடியா சார்பா நானே இந்தப் படத்தை தயாரிக்கறேன்’னு  சர்ப்ரைஸ் கொடுத்தாங்க...’’ ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் ஜெயப்பிரகாஷ் இராதாகிருஷ்ணன்.

படத்தோட சப்ஜெக்ட் என்ன..?

ஒருத்தர் கல்யாணத்துக்கு முதல் நாள் நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்கறார். அந்தப் பார்ட்டில நடக்கற சம்பவங்கள்தான் படம்!  முக்கியமான கேரக்டர்ல நானும், ‘லென்ஸ்’ படத்துல நடிச்ச சுரேஷும், அப்பட டயலாக் ரைட்டர் ரவிகதிரேசனும் நடிச்சிருக்கோம். அனுஷா பிரபு  முக்கியமான ரோல் செய்திருக்காங்க. அடிப்படைல அவங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அவங்க போர்ஷனை மட்டும் சின்னதா லைட்டிங் செஞ்சு ஷூட்  செய்திருக்கோம்.

‘ஓடு ராஜா ஓடு’ படத்தோட ஒளிப்பதிவாளரும், என் நண்பருமான ஜதின் ஷங்கர் ராஜ், சொந்தமா கேமரா வைச்சிருக்கார். அதனால அவரையே  ஒளிப்பதிவு பண்ண வைச்சிருக்கோம். இசையப்பாளர் பெயர் என்ன தெரியுமா? அய்யோ ராமா! எடிட்டிங்கை டேனி சார்லஸ் கவனிக்கறார். படத்தை  தியேட்டர்ல ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம்னு இருக்கோம். ‘லென்ஸ்’ படத்தையும் அப்படித்தான் ஸ்கிரீன்  பண்ணினோம். அது இங்க ரிலீசாகறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே மலையாளத்துல வெளியாச்சு!

ஒரே நேரத்துல நடிகர், இயக்குநர்னு கவனம் செலுத்தறீங்களே..?

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி அமெரிக்கால இருந்தேன். சென்னை வந்து நடிகனாகணும்னு அங்க வேலையை உதறிட்டு வந்தேன். இரண்டு  வருஷங்கள் தியேட்டர் ஆக்டிங் கத்துக்கிட்டேன். ‘உருமி’, ‘என்னை அறிந்தால்’ படங்கள்ல சின்ன ரோல் பண்ணியிருப்பேன். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு  அமையலை.

சினிமா புரிய ஆரம்பிச்சதும் ‘லென்ஸ்’ இயக்கினேன். தொடர்ந்து எக்ஸ்பரிமென்ட் படங்கள் பண்ணத்தான் ஆசை. கன்டென்ட் சரியா  இருந்தா அதுவே அடுத்த கட்டத்துக்கு நகரும். இதுதான் அனுபவம் வழியா நான் கத்துக்கிட்ட பாடம்! படைப்பு சரியா இருந்தா படைப்பாளியை  ஆதரிச்சுக் கொண்டாட மக்கள் தயாரா இருக்காங்க!


மை.பாரதிராஜா