விஸ்வரூபம் எடுக்கும் இந்தி!



இந்திய அரசு கிடைக்கும் சந்து பொந்தில் எல்லாம் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் 25% வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 2001 - 2011  காலகட்டத்தில் நூறு மில்லியன் பயனர்களை இந்தி பெற்றுள்ளது. பெரும்பாலான மொழிகளுக்கு ஆதாரமான சமஸ்கிருதமும் மேற்சொன்ன  காலகட்டத்தில் 76% வளர்ச்சி காட்டி வியக்க வைத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி காஷ்மீரி - 22.97%, குஜராத்தி - 20.4%, மணிப்பூரி -  20.4%, பெங்காலி - 16.63% ஆகியவை இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு அடுத்தபடியாக வளர்ச்சி காட்டியுள்ளன.

இந்திய அரசின் பொதுமொழியான ஆங்கிலம் 14.67% (2,60,000) வளர்ச்சியடைந்துள்ளது. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் மக்கள் மகாராஷ்டிரா,  தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், உருது மற்றும் கொங்கணி ஆகிய  மொழிகள் பெரியளவு வளர்ச்சியின்றி தடுமாறி வருகின்றன. பட்டியலிடப்படாத பிலி மற்றும் பிலோடி ஆகிய மொழிகள் சில ஆயிரம் மக்களின் மூலம்  அழியாமல் பிழைத்துள்ளன.

குழந்தைக் கடத்தலை தடுக்க நீச்சல்!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் லியா சௌத்ரி, ஆங்கிலக் கால்வாயை நீச்சலடித்து கடந்து சாதனை செய்துள்ளார்.  எதற்கு இந்த நீச்சல் சாதனை தெரியுமா? பாப் அப் பிளே என்னும் குழந்தைக் கடத்தல்களை தடுக்கும் செயல்பாட்டுக்கான நிதிக்காக!  ஆங்கிலக் கால்வாயில் தொடங்கி பிரான்ஸ் வரை இரவும் பகலுமாக பதிமூன்று மணிநேரம் நீந்திச் சென்றுள்ளார் லியா. இம்முயற்சிக்கு இளவரசர்  சார்லஸின் பிரிட்டிஷ் ஆசியன் அறக்கட்டளை ஆதரவளித்துள்ளது. ‘‘நீச்சல் முயற்சியில் இது எனக்கு பெருமையான நிகழ்வு. இம்முயற்சியை இதுவரை  1,500 பேர் மட்டுமே செய்துள்ளனர்!’’ என மகிழ்கிறார் லியா சௌத்ரி.

ஊட்டச்சத்து குறைந்த ஹைதராபாத்!

ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 763 பேர்களிடம் (13 - 16 வயது) செய்த ஆய்வில் நானூறுக்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து  பற்றாக்குறையால் தவிப்பது தெரியவந்துள்ளது. மாணவர்களின் வயதுக்கேற்ற உடல் எடை விகிதமும் 18.5%க்குக் கீழுள்ளது ஆந்திரா அரசின்  மக்கள்நலத் திட்டங்களின் செயல்திறன் வீழ்ச்சிக்கு அலாரம் அடிப்பதாக உள்ளது. அடிப்படை வசதிகள் குறைவு, குடிநீர் போதாமை மற்றும் கழிவறை  சுகாதாரமின்மை ஆகியவை மாணவர்களின் கல்வித்தரத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

எடைக்குறைவு பிரச்னை மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 2.75% என்றால் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இது மூன்று மடங்கு  அதிகமாக உள்ளது என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவுகள். இதில் சைவ உணவு சாப்பிடும் 151 மாணவர்களில் 102 பேர் ஊட்டச்சத்துக்குறைவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் மதிய உணவுத்திட்டம் கடந்து மாணவர்களின் வீட்டிலுள்ள பொருளாதார நிலையும் ஊட்டச்சத்துக் குறைவுக்கு முக்கிய  காரணியாக உள்ளது.  


தொகுப்பு: ரோனி