ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன்-9

‘‘மொத்தம் ஏழு பேர்...’’ தன்னைச் சுற்றிலும் பார்வையால் அலசியபடியே திரும்பிப் பார்க்காமல் சிவகாமி சொன்னாள். ‘‘இல்லை எட்டு. தென்மேற்கு  மூலையில் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது...’’ கரிகாலன் பதிலளித்தான். ‘‘ஆம். அந்தப் பக்கமாக பறவைகள் படபடத்து கிளைகளில் இருந்து  பறக்கின்றன...’’ சொன்னபடியே நின்றவாக்கில் மெதுவாக வட்டமடிக்கத் தொடங்கினாள். சிவகாமியின் முதுகுடன் தன் முதுகை ஒட்டியும் ஒட்டாமல்  வைத்திருந்த கரிகாலன், அவளுக்கு சமமாக தானும் வட்டமாக நகரத் தொடங்கினான்.

நான்கு விழிகளும் எட்டுத் திசைகளிலும் இருந்த மொத்தக் கோணத்தையும் சலித்தன. ‘‘சூழ்பவர்கள் சாளுக்கியர்களல்ல!’’ சிவகாமியின் குரலில்  நிதானம் வழிந்தது. ‘‘முக அமைப்பும் உடல் வாகும் தமிழர்களையும் நினைவுபடுத்தவில்லை...’’ கரிகாலனின் புருவங்கள் முடிச்சிட்டன.  ‘‘நண்பர்களுக்கான இலக்கணமும் தட்டுப்படவில்லை...’’ மந்தகாசத்துடன் சிவகாமி பதிலளித்தாள். ‘‘கால்களைக் குறுக்குவாட்டில் வைத்தபடி நம்மைச்  சூழ்கிறார்கள்...’’ கரிகாலன் குரலைத் தாழ்த்தினான். ‘‘கவனித்தேன்.

நேர்கோட்டில் அவர்கள் அடியெடுத்து வைக்காதது நம் அதிர்ஷ்டம்...’’ உதட்டைப் பிரிக்காமல் சிவகாமி புன்னகைத்தாள். ‘‘நம் இருவரையும்  எதிர்நோக்கியபடி நால்வர் வருகிறார்கள்...’’ ‘‘மற்ற நால்வர் பக்கவாட்டில்...’’ ‘‘பதினாறு விழிகளும் நம் உடலைத்தான் குறி வைக்கின்றன...’’ எதையோ  உணர்த்துவதுபோல் கரிகாலன் இதை அழுத்திச் சொன்னான். ‘‘அசுவங்கள் போலவே!’’ உணர்ந்து கொண்டதற்கு அறிகுறியாக சிவகாமி பதிலளித்தாள்.  ‘‘அசுவ சாஸ்திரத்தை நீ கசடறக் கற்றவள்...’’ ‘‘உங்களைப் போலவே!’’ ‘‘பக்கவாட்டை இப்போதைக்கு மறந்துவிடுவோம்!

அவர்கள் உடனடியாக நம்மைத் தாக்க மாட்டார்கள்...’’ சொன்ன கரிகாலன் நின்றான். தன் கரங்களால் தனக்குப் பின்னால் முதுகைக் காண்பித்தபடி  நின்றிருந்த அவளையும் நிறுத்தினான். நிறுத்திய கைகளின் மொழி சிவகாமிக்குப் புரிந்தது. கால்களை அழுத்தமாக ஊன்றினாள். ‘‘நேருக்கு நேர்  சந்திக்கும் புரவிகள் ஒரு புள்ளியில் விலகும்...’’ ‘‘சட்டென்று பாய்ந்து மற்றொன்றை வீழ்த்த முற்படும்...’’ வாக்கியத்தை முடித்தாள் சிவகாமி.  கரிகாலனின் நயனங்கள் சந்துஷ்டியை வெளிப்படுத்தின. சாதுர்யமான பெண்.

எண்ணெய்யில் ஊறிய திரியாக கப்பென்று தீயைப் பற்றிக் கொள்கிறாள். கொழுந்து விட்டு எரியத் தயாராக இருக்கிறாள். இவளைப் போல் இன்னும்  இருவர் படைகளை நடத்தக் கிடைத்தால் போதும். பல்லவர்களை ஒருவராலும் வீழ்த்த முடியாது. ‘‘என்னிடம் வாள் இருக்கிறது...’’ ‘‘எனக்கான வாள்  அவர்களிடம் இருக்கிறது!’’ சிவகாமியின் உதடுகள் பதிலளித்தன. வேண்டுமா? நீளம் தேவையா..?’’ ‘‘நீளம் எனில் கூடுதலாகப் பாய முடியும்!’’ ‘‘என்னை  நோக்கி வருபவர்களிடம் உனக்குத் தேவையானது இருக்கிறது!’’ முணுமுணுத்த கரிகாலன், அவளைப் பிடித்திருந்த தன் கரத்தை எடுத்தான்.

வலது காலை முன்னோக்கி நகர்த்தி கால் கட்டை விரலால் தரையில் அரைவட்டம் இட்டான். தன் வாளை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்தான்.  எதற்காக இப்படிச் செய்கிறான் என்பது அவனை நோக்கி வந்த இருவருக்கும் புரியவில்லை. முன்னேறுவதை சற்றே தாமதப்படுத்தினார்கள். தரையில்  அவர்கள் பாதங்கள் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தன. இதற்காகவே காத்திருந்தது போல் கரிகாலன் தன் வாளை முன்னோக்கிச் சுழற்றி காற்றைக்  கிழித்தான். அறுபட்ட காற்று ஒன்று சேர்வதற்குள் தன் இடக்கையால் சிவகாமியின் இடுப்பை அழுத்திப் பிடித்து அவளை வட்டமாகத் தன் பக்கம்  இழுத்தபடியே தூக்கினான்.

காலை அழுத்தமாக ஊன்றியிருந்த சிவகாமி, வாகாக அந்த வேகத்துக்கு எழும்பினாள். கணக்கிட்டது போலவே கரிகாலன் அவளைத் தன் தலைக்கு  மேல் தூக்கினான். சுழன்ற வேகத்தில் சிவகாமியின் பாதங்கள், நீளமான வாட்களைப் பிடித்திருந்த இருவரது தாடையையும் வேகமாகப் பெயர்த்தன.  இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்விருவரும் நிலைதடுமாறி விழ... பிடித்திருந்த அவர்களது வாள்கள் நழுவ... இமைக்கும் நேரத்தில் சிவகாமி அதைக்  கைப்பற்றினாள்! கணங்களில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் மற்ற அறுவரையும் அதிர்ச்சியடைய வைத்தன.

நிலைகுலைந்த புரவிகளை அடக்குவது அவ்விரு அசுவ சாஸ்திரிகளுக்கும் சுலபமாக இருந்தது! இருவர் இருவராக இருந்த அறுவர் கூட்டணியை  கரிகாலனும் சிவகாமியும் தகர்த்தார்கள். கரிகாலனின் வாள் அதிக நீளமில்லை; குட்டையுமில்லை. பட்டையாகவும் இல்லை; மெல்லியதாகவும்  இல்லை. நடுவாந்திரமாக, கச்சிதமாக இருந்தது. தனக்கென அவன் வடிவமைத்த வாள் என்பதால் அவன் அசைவுக்கு அது கட்டுப்பட்டது. அவன் பேச  நினைத்ததை இம்மி பிசகாமல் உரையாடியது. கால்களை முன்னோக்கி நேராகவும் பக்கவாட்டிலும் மாறி மாறி நகர்த்தி எதிராளியைத் திணறடித்தான்.

கால்களின் நர்த்தனத்துக்கு நேர் மாறாக வாளின் நடனம் இருந்ததால் எந்த முறையில் வாளைப் பாய்ச்சுகிறான் என்பதை அவனைச் சூழ  முற்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. முன்னோக்கிப் பாய்ந்தும், பின்னோக்கி நகர்ந்தும், பக்கவாட்டில் வாளை வீசியும் சுழல்காற்றைப்  போல் சுழன்ற கரிகாலன், அவ்வப்போது சிவகாமி என்ன செய்கிறாள் என்றும் கவனித்தான். ஆச்சர்யமே ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்தது. தன்னிரு  கரங்களிலும் இரு நீளமான வாட்களையும் ஏந்தியிருந்த அந்தப்பாவை, பாய்ந்து பாய்ந்து தாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தினாள்.

அது முரண்டு பிடிக்கும் அரபிக் குதிரைகளை அடக்க அதன் மீது பாய்ந்து ஏறி அமர முற்படுவது போலவே இருந்தது. போலவே, பாய்ந்தவளின்  கரங்களில் இருந்த வாட்கள் கீழ் நோக்கி வீசப்படும்போதெல்லாம் இடியாக இறங்கி அவளைத் தாக்க முற்பட்டவர்களின் தோளை நொறுக்கின. அந்தச்  சூழலிலும் கச்சையிலிருந்து வெளிப்பட முயற்சித்த பிறைகளின் ஜொலிப்பு கரிகாலனை இம்சிக்கவே செய்தது. மின்னலென அவ்வப்போது தோன்றி  மறைந்த நாபிக் கமலத்தின் சுழியும், ஆழமும் மலர்ந்தும் மறைந்தும் காண்பித்த காட்சிகள் ஊகங்களுக்கே அதிகம் வழிவகுத்தன.

வாழையும், தந்தங்களும் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு வழுவழுப்புக்குப் பெயர்போன அவளது கரங்களும் கால்களும் ஊர்த்துவ தாண்டவமாடி  எதிராளிகளைப் பந்தாடின. விரிந்தும் குறுகியும் அகன்றும் சேர்ந்தும் மாயாஜாலங்களை நிகழ்த்திய கால்களும், அவை உடம்புடன் சேர்ந்த இடமும்,  அவ்விடத்தின் கனமும் கணத்தில் கரிகாலனைப் பித்து நிலைக்கு அழைத்துச் சென்றன. காமமும் வன்மமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்  என்பதை எந்தத் தத்துவஞானி சொன்னாரோ... அவர் வாயில் சுத்தமான தேனைப் பிழிந்து ஊற்ற வேண்டும்.

சில கணங்களுக்கு முன் தன் விரல்களில் நெகிழ்ந்து குழைந்த அங்கங்கள் இந்தளவு பாறையாக மாறி எதிராளியைப் பெயர்க்கும் என கரிகாலன்  துளியும் எதிர்பார்க்கவில்லை. நாணமும் மடந்தையும் பெண்களின் இயல்பல்ல. தேவையான சமயத்தில் வெளிப்படும் அவர்களது ஆபரணங்கள்.  எல்லோர் கண்களுக்கும் அவை தட்டுப்படுவதில்லை. தகுந்தவர்களைக் காணும்போதே அவை வெளிப்பட்டு ஜொலிக்கின்றன. குழையத்  தெரிந்தவர்களுக்கு குடலை உருவி மாலையாக அணியவும் தெரியும். நெகிழ்பவர்கள்தான் கடினப்படுகிறார்கள்.

வாழ்க்கையின் மகத்தான இந்தத் தத்துவத்தை அந்தக் கணத்தில் தன் அசைவின் வழியே கரிகாலனுக்கு போதித்துக் கொண்டிருந்தாள் சிவகாமி.  அன்னையின் நடனம் ஈசனை உத்வேகம் அடையச் செய்தது. சக்தியுடன் போட்டி போடுவதற்காகவே சிவன் நடனமாடினான். அதனாலேயே  சக்தியில்லையேல் சிவனில்லை என்ற சொற்றொடர் பிறந்தது. இது உண்மையா அல்லது கற்பனையா என்று தெரியாது. ஆனால், சிவகாமியின் வாள்  வீச்சுக்கு ஏற்ப கரிகாலன் தன் வாளைச் சுழற்றி எதிராளியைப் பந்தாடினான் என்பது மட்டும் நிஜம். வண்டை அழைக்க மொட்டு மலர்ந்தது.

மொட்டு மலர வண்டு ரீங்காரமிட்டது. ஈசனின் நடனத்தில் சக்தி தன் மனதைப் பறிகொடுத்தது போலவே கரிகாலனின் வாள் நர்த்தனத்துக்கு சிவகாமி  மயங்கினாள். திரண்ட அவனது புஜங்களும், கடினப்பட்ட அவனது முழங்கையும் முழங்காலும், சுற்றி வளைத்த வீரர்களை மட்டுமல்ல, தன் மனதையும்  பந்தாடுவதை சிவகாமி உணர்ந்தாள். ஒடிசலான அந்த தேகத்தில் மலைக் குன்றே குடியிருக்கும் என்பதை அவள் கற்பனைகூட செய்து  பார்க்கவில்லையே! வீசும் காற்று மட்டுமல்ல, வீசப் போகும் காற்றும் அவனது வாள் வீச்சுக்கு ஏற்பவே தங்கள் போக்கை அமைத்தன; அமைக்க  நிர்ப்பந்திக்கப்பட்டன.

இப்படிப்பட்ட வீரன் ஒரு நாழிகைக்கு முன் தன் முன்னால் தழையத் தழைய மண்டியிட்டு அமர்ந்திருந்தான் என்பதை நினைக்க நினைக்க அவள்  உள்ளம் பொங்கியது. நரம்புகள் யாழாகி சப்தஸ்வரங்களையும் மேனி எங்கும் இசைத்தன! அதிர்ந்த உடல் உற்சாகக் கடலில் முத்துக் குளித்தது.  அவளது வாள் அசைவில் அவை இறுமாப்புடன் வெளிப்பட்டன. இருவர்தானே... வளைத்துவிடலாம்... என்ற மிதப்பில் அவர்களை நெருங்கிய எட்டு  வீரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நிலைகுலைந்தார்கள். அவர்களது உடலில் இடைவெளியின்றி இருவரது வாட்களும் மாறி மாறி கோடுகளை  இழுத்தன.

கோடிட்ட இடங்களில் இருந்து பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு குருதி பெருகி அவர்களது உடலை நனைத்தன; குளிப்பாட்டின. வாட்களைப்  பறிகொடுத்தார்கள். மணிக்கட்டை பெயர்த்துக் கொண்டார்கள். வெட்டுப்பட்ட மரங்களாகத் தரையில் சாய்ந்தார்கள். கரிகாலனும் சிவகாமியும் முன்பு  போலவே ஒருவர் பின்னால் மற்றவர் நின்றார்கள். இம்முறை அவள் முதுகில் தன் முதுகு பட்டும் படாமல் இருப்பது போல் கரிகாலன் நிற்கவில்லை.  மாறாக, முதுகோடு முதுகு உராயும்படி நின்றான்; நின்றாள்; நின்றார்கள். சொற்கள் மெளனம் காக்க அவர்களது உடல்கள் உரையாடின.

பரஸ்பரம் அடுத்தவரது வீரத்தை மெச்சிக்கொண்டன. தழுவித் தழுவி உச்சி முகர்ந்தன. பெருக்கெடுத்த வியர்வை திரிவேணி சங்கமம் போல் இருமேனி  சங்கமமாகி இரண்டறக் கலந்தன. முன்பு போலவே நின்றவாக்கில் மெதுவாக சிவகாமி வட்டமடிக்கத் தொடங்கினாள். அவளுக்குச் சமமாக கரிகாலனும்  வட்டமாக நகரத் தொடங்கினான். தங்களை எதிர்க்க யாருமில்லை எனப் புரிந்ததும் இருவரும் விலகினார்கள். போர் முடிந்ததும் இரு வீரர்கள் தேகம்  இணைய நிற்பார்களே... அப்படி அருகருகில் நின்றார்கள். சுழன்று சுழன்று வட்டமடித்ததால் ஏற்பட்ட பெருமூச்சுகள் இருவரது நாசிகளையும் அதிர  வைத்து வெளியேறின.

சிவகாமியின் கையடக்க கொங்கை எழுவதும் தாழ்வதுமாக இருந்ததை கரிகாலன் கவனித்தான். அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாம்  பிறையை ஐந்தாம் பிறையாக்கினாள் சிவகாமி! வீரத்தின் பக்கமிருந்த நாணயம் காதலின் மறுபக்கத்தை நோக்கித் திரும்ப ஆரம்பித்தது. எப்படி ஊசி  முனையில் தள்ளாடிய உணர்ச்சிகளை சில நாழிகைகளுக்கு முன் சருகுகளின் சப்தங்கள் கலைத்தனவோ அப்படி சிருங்கார ரசத்தை விட்ட  இடத்திலிருந்து பருக முற்பட்ட இருவரையும் ஒரு குரல் இயல்புக்குக் கொண்டு வந்தது.‘‘வாள் மகளே வா! வாள் மகனுடன் வா!’’ கடைக்கண்ணால்  ஒருவரையொருவர் பார்த்தபடியே இருவரும் வாட்களை இறுக்கிப் பிடித்தார்கள்.

எவ்வித சலனமும் இன்றி குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்கள். இமை மூடித் திறப்பதற்குள் கரிகாலனின் தொடை மீது தன் இடது காலை  வைத்து எம்பிய சிவகாமி வாளை ஓங்கியபடி அங்கு நின்றிருந்த மனிதன் மீது பாய்ந்தாள். அடுத்த கணம் அவள் கையில் இருந்த வாள் பறந்தது.  குழந்தையைத் தரையில் இறக்குவதுபோல் சிவகாமியை இறக்கிய அந்த மனிதன் தன் குறுவாளை அவள் கழுத்தில் வைத்தான். நிதானமாகக்  கரிகாலனை ஏறிட்டான். இதனையடுத்து அந்த மனிதன் உச்சரித்த சொற்கள், வாளை உயர்த்தி நின்ற கரிகாலனை மட்டுமல்ல, சிவகாமியையும்  உலுக்கியது. ‘‘சண்டையிட நான் வரவில்லை. சிவகாமியின் சபதம் குறித்துப் பேசவே வந்திருக்கிறேன்!’’  

(தொடரும்)    
ஓவியம்: ஸ்யாம்