சாகர்மாலா



கடல் மாலையா? காலைச் சுற்றும் பாம்பா?

பிரதமர் மோடி நாடு நாடாகப் பறந்து கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக்கி ட்ரோல் செய்துகொண்டிருக்கிறார்கள். மறுபுறம்  அவரோ கடமையே கண்ணாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்நிய மூலதனங்களை இந்தியாவுக்குக் கொண்டு வர பறந்துகொண்டேயிருக்கிறார்.  ‘அந்நிய மூலதனங்கள் குவிந்து, இங்குள்ள வளங்களைச் சூறையாடிச் செல்லத் தடையாக இருக்கும் சட்டங்கள் அனைத்தையும் குழி தோண்டிப்  புதைக்கவும், விதிகளைக் காற்றில் பறக்கவிடவும்கூட தயாராயிருக்கிறது மத்திய அரசு...’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதற்குத் தகுந்தாற்போல் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், தொழில் வளர்ச்சிக்குத் தடையாக தனது அமைச்சகம் இருக்காது  என்று வெளிப்படையாகவே பச்சைக்கொடி காட்டுகிறார். மேக் இன் இந்தியா, பாரத் மாலா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, சுவாச்  பாரத், ஸ்மார்ட் சிட்டி வரிசையில் மோடி அரசின் இன்னொரு அதிரடிதான் சாகர்மாலா திட்டம். சாகர் என்றால் கடல், சாகர்மாலா என்றால்  கடல்களைக் கோர்த்து உருவாக்கப்படும் மாலை.

அதாவது, இந்தியாவின் கடல் ஓரங்களில் இருக்கும் முக்கியமான துறைமுகங்களை ரயில் வழித்தடங்கள், மேம்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள்  மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைப்பதுதான் இந்தத் திட்டம். அதுபோலவே நாடு எங்கும் உட்புற தொழில் நகரங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள்  மற்றும் ரயில் பாதைகளை துறைமுக நகரங்களோடு இணைப்பதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான். இதன் மூலம் நாடு முழுதும் உற்பத்தியாகும்  பொருட்களையும் வளங்களையும் எளிதாக கடல் மூலம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.

சாகர் மாலா திட்டம் கடந்த 2003ம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயால் தொடங்கப்பட்டது என்றாலும் இப்போது மோடியின்  தலைமையிலான பிஜேபி அரசில்தான் அது முழு மூச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது. 2015ம் ஆண்டு கேபினெட் அமைச்சர்கள் குழு சாகர் மாலா  திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து NSAC (National Sagarmala Apex Committee) அமைக்கப்பட்டது. இதில் கப்பல்  போக்குவரத்துத் துறை அமைச்சர், கேபினெட் அமைச்சர்கள், கடற்கரைகள் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள், மாநில கப்பல் போக்குவரத்து  அமைச்சர்கள் ஆகியோர் இருப்பார்கள்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் 2016ல் சாகர்மாலா வளர்ச்சி நிறுமம் (Sagarmala Development Limited - SDCL)  என்ற பொது நிறுவனம் கம்பெனிகள் சட்டப்படி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சிறப்பு காரணங்களுக்கான வாகனங்கள் (Special purpose  vehicles - SPV) எனப்படும் பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு கட்டமாக தன் பணியை நிறைவேற்றும். இந்தத்  திட்டத்துக்கான நிதியைத் திரட்டுவதும் எஸ்.டி.சி.எல்.லின் வேலைதான். நமது நாட்டில் 7500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையும் 14,500 கி.மீ. நீளமுள்ள  உள்நாட்டு நீர்வழிச் சாலைகளும் உள்ளன.

இவை அனைத்தையும் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான சரக்குப் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றுவதும் மேம்படுத்துவதுமே இந்தத்  திட்டத்தின் பிரதான அம்சம். இதன் முதல் கட்டமாக ஆயிரம் கோடி முதலீட்டில் நாட்டில் உள்ள 12 துறைமுகங்களும், 1208 தீவுகளும், 189 கலங்கரை  விளக்கங்களும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ப அதிநவீனமாக வடிவமைப்பட உள்ளன. அத்தோடு இந்தியா முழுதும் புதிதாக எட்டு துறைமுகங்களுக்கு  மேல் ஏற்படுத்தப்பட உள்ளன. பழைய துறைமுகங்கள் அனைத்தும் பெரிய கப்பல்கள் வந்து செல்வதற்கு ஏதுவாகவும் ஆழப்படுத்தப்பட உள்ளன.

சாகர்மாலா திட்டத்தை ஏற்க ஒடிஸா மாநிலம் முதலில் முன்வந்து அதற்கான எஸ்.பி.வி.யை உருவாக்கியது. இத்திட்டம் ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி  முதல் 40 ஆயிரம் கோடி வரை முதலீடாகக் கொண்டு செயல்பட உள்ளது. திட்டக் கால முழுமையும் சேர்த்து 7 லட்சம் கோடி வரை முதலீடு  இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய முதலீட்டை யார் கொடுப்பார்கள்? வேறு யார்? இதற்காகவே காத்திருக்கும் உலக வங்கியும் மாநில, தேசிய,  சர்வதேசிய அளவிலான பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களும்தான்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் எதிர்வரும் 2020ம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்கு ஏற்றுமதி நிகழ்ந்திருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இருபது ஆண்டுகாலத் திட்டமாக முடிவு செய்யப்பட்ட இது, பிறகு பத்தாண்டுகாலத் திட்டமாகி இப்போது  ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடிப் பேருக்கு வேலை கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதனால் பாதிக்கப்படுவோர் பற்றிய எண்ணிக்கை துல்லியமாக வரையறுக்கப்படவில்லை என்பதையும்  இதனுடன் சேர்த்தே பார்க்க வேண்டும்.

ரயில் பாதைகளை துறைமுகங்களுடன் இணைப்பதற்காக, இந்தியத் துறைமுக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian port rail corporation ltd)  என்ற பொது நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் முதலீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 திட்டங்கள்  இப்போது செயல்படத் தொடங்கியுள்ளன. 29,500 கோடி முதலீட்டில் 26 ரயில் பாதைகள் போடப்பட்டு அவை துறைமுகங்களுடன்  இணைக்கப்பட்டுள்ளன. சாகர்மாலா திட்டத்தின்படி மொத்தம் 415 ப்ராஜெக்ட்டுகள் இந்தியா முழுதும் தொடங்கப்பட உள்ளன.

189 துறைமுக மேம்பாட்டுப் பணிகள், 170 துறைமுக இணைப்புப் பணிகள், 33 துறைமுக இணைப்பு தொழில்துறை மேம்பாட்டுப் பணிகள், 23  துறைமுகசார் சமூக மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளன. எந்தவிதமான சுற்றுச்சூழல் விதிகளும் இதில் பின்பற்றப்படவில்லை என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் சாகர் தீவுகள், ஒடிஸாவில் பராதீப் புறப்பகுதி துறைமுகம், தமிழகத்தில் சீர்காழி துறைமுகம் மற்றும்  இணையம் துறைமுகம், கர்நாடகாவில் பெலிகேரி துறைமுகம், மஹாராஷ்ட்ராவில் வதவான் துறைமுகம் ஆகிய மெகா ப்ராஜெக்டுகள்  உருவாக்கப்படவுள்ளன.

இதைத் தவிர கேரளத்தின் விழிஞம், ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் ஆகிய இடங்களிலும் புதிய துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. கடற்கரையோர  நகரங்களில் சிறப்பு கடற்கரை மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அவை தொழில் வளர்ச்சிக்கும் போக்குவரத்துக்கும் ஏற்றதாக மாற்றப்பட உள்ளன. இந்தச்  சிறப்புக் கடற்கரை மண்டலங்கள் பெரும் கார்ப்பரேட்கள் கையில்தான் இருக்கும். அதானியின் நிறுவனத்துக்கு குஜராத் கடற்கரைப் பகுதிகள் தரை  ரேட்டுக்குத் தாரை வார்க்கப்பட்டதை இங்கு நினைவுகூரலாம்.

மொத்தத்தில் இந்த சாகர்மாலா என்பது இந்தியாவின் தொழில் வளர்ச்சியையே தூக்கி நிறுத்தவுள்ளது என்பதைப் போன்ற சித்திரம் மத்திய அரசால்  ஊதிப் பெருக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் சேலம் பசுமை வழிச்சாலை போன்றவை என்கிறார்கள். வீக்கங்கள் வளர்ச்சி அல்ல… அவை  நோய்மையின் அறிகுறிகள். இந்த சாகர்மாலா வளர்ச்சியா வீக்கமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

இளங்கோ கிருஷ்ணன்