லைட் ஹவுஸ்



தல புராணம்

‘மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்
மெரினாவில் வீடு கட்டப் போறேன்.
லைட் ஹவுஸில் ஏறி நிக்கப் போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்...’
- இது, ‘மே மாதம்’ படத்தில் மெட்ராஸின் அழகை வர்ணிக்கும் பாடல். அந்தளவுக்கு ெமட்ராஸுடன் பின்னிப் பிணைந்தது லைட்ஹவுஸ். சினிமாவில்  மட்டுமல்ல, எக்கச்சக்க கவிதைகளும் கூட நம் கலங்கரை விளக்கம் பற்றி உள்ளன.

இந்தியாவில் முதல் முதலாக ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்ட லைட்ஹவுஸ் என்கிற பெருமை மெட்ராஸையே சேரும். ஆங்கிலேயர்கள் வருகைக்கு  முன்பு இங்கு லைட்ஹவுஸ் இருக்கவில்லை. அவர்கள் வந்து 150 வருடங்கள் வரை கூட லைட்ஹவுஸ் அமைக்கப்படவில்லை. இவர்களுக்கு முன்பே சாந்தோமிலும், பழவேற்காட்டிலும் வசித்த போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கூட லைட்ஹவுஸ் பற்றி யோசிக்கவில்லை. ஆனாலும்,  வணிகத்தில் கொழித்தனர்.

துறைமுகம் இல்லாத இந்நகரில் ஆங்கிலேயர்களின் கப்பல்கள் நடுக்கடலில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிற்கும். அங்கிருந்து உள்ளூர் மசூலா படகுகளின் வழியாக  பொருட்களைக் கரைக்குக் கொண்டு வந்து மீனவர்கள் சேர்ப்பார்கள்.அத்துடன் மீனவர்கள் கடலுக்குப் போகும்போது அவர்களுக்கு உறுதுணையாக மீனவப் பெண்கள்  வழிகாட்டும் விதமாக கரையில் சிறிய ெநருப்பினை ஏற்றி வைத்து காத்திருப்பார்கள். அந்த வெளிச்சத்தைக் கணித்து கரைக்குத் திரும்புவார்கள். இதுவே  நடைமுறை.அன்று, ஆங்கிலேயக் கப்பல்கள் மெட்ராஸ் கடற்கரையை எப்படிக் கண்டுபிடித்தன?கோட்டையில் கட்டப்பட்ட புனித மேரி தேவாலயத்தின்  கோபுரத்தைப் பார்த்துத்தான்! இருந்தும் இரவில் வந்து சேரும் கப்பல்கள் அடையாளம் தெரியாமல் திசைமாறியும் சென்றன.

இப்படியான நிலைமை 1790ல் மாறியது. ஆம்; அந்தாண்டு கப்பல் கேப்டன்கள் பலர் கம்பெனியிடம் லைட்ஹவுஸ் அமைப்பதன் அவசியம் பற்றிச் சொல்ல  ஆரம்பித்தனர். காரணம், வடகிழக்குப் பருவமழையின் போது வரும் புயல்களால் கப்பல்கள் திசை மாறுகின்றன என்பதே! அதோடு மேற்கத்திய நாடுகளில்  லைட்ஹவுஸ் வந்துவிட்டதும் இன்னொரு காரணம்.‘‘அப்ப, ஒரு விளக்கு இருந்தால் நைட்ல வர்ற கப்பல்களுக்கு இடைஞ்சல் இருக்காதுனு எல்லாரும் சொல்ல  ஆரம்பிச்சதால அரசும் யோசிக்க ஆரம்பிச்சது. பிறகு, ஒரு உயரமான இடத்தைத் தேடியது...’’ என முதல் லைட்ஹவுஸ் பற்றி பேசினார் ஹேம்சந்திரராவ்.  மெட்ராஸ் லைட்ஹவுஸ் பற்றி விரிவாக ஆய்வு செய்து, ‘Madras Exchange Light House 1796’ நூலை எழுதியவர் இவர்.‘‘அன்னைக்கு கோட்டைக்குள்ள இருந்த உயரமான கட்டடம் புனித மேரி  தேவாலயம்தான். அதனால மெட்ராஸ் கவர்னர்,சர்ச் பாதிரியார்கிட்ட அனுமதி கேட்கச் சொல்றார்.

ஆனா, சர்ச்சுக்கும், அரசுக்கும் இடைல கருத்து வேறுபாடு  இருந்ததால லைட்ஹவுஸ் அமைக்க அனுமதி கிடைக்கல. சரி, வேற எந்த பில்டிங் பெரிசா இருக்குனு பார்த்தப்ப ஆபீசர்ஸ் மெஸ்ஸாகவும், எக்ஸ்சேஞ்ச்  பில்டிங்காகவும் இருந்த இரண்டு மாடிக் கட்டடத்தின் ேமல லைட்ஹவுஸ் வைக்கலாம்னு முடிவெடுத்தாங்க. இன்று இந்தக் கட்டடம் கோட்டை மியூசியமா  இருக்கு.அன்னைக்கு அவங்களுக்கு எந்தவித தொழில்நுட்ப ஃபார்முலாவும் தெரியாது. அதனால, எட்டுக் கோண வடிவுல மரத்தால மூணு அடுக்குக் கொண்டதா  படிக்கட்டுகள் எல்லாம் வச்சு அழகா லைட்ஹவுஸை அமைச்சாங்க. இது கடல் மட்டத்திலிருந்து 90 அடி உயரத்துல இருந்துச்சு.இதை திறக்கற நாள்ல புயல் வர்ற  மாதிரி இருந்தது. அதனால, அன்றைய கவர்னர் லார்டு ேஹாபர்ட் திறப்பு விழா வேண்டாம்னு முடிவெடுத்து விளக்கேற்றச் சொல்லிட்டார். அப்படித்தான் 1796ல்  நவம்பர் 21ம் தேதி மரத்தாலான முதல் லைட்ஹவுஸ் திறக்கப்பட்டது.
மொத்தம் 12 விளக்குகள். தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேத்தினாங்க. 17 மைல் தூரம் வரை வெளிச்சம் தெரிஞ்சது. ஆனா, காற்றோட்டம் இல்லாம  அமைச்சதால விளக்கின் வெப்பம் அதிகரிச்சது. விளக்கேற்ற பணியாளர்களால செல்ல முடியல. அத்துடன் புகையால் விளக்கும், மரப் பகுதியும் கருப்படிச்சது.இதையும் பணியாளர்கள் தினமும் சரி செய்ய வேண்டியிருந்தது. தவிர, மெட்ராஸை ஒவ்வொரு வருஷமும் புயல் தாக்கியதால இந்த மர லைட்ஹவுஸ்  வலுவிழந்துச்சு. இதை எல்லாத்தையும் அரசுகிட்ட கொண்டு போனாங்க. உடனே, லண்டன்ல இருந்து நிபுணர்களை வரவழைச்சுக் கேட்டதும், புது  லைட்ஹவுஸ்தான் ஒரே தீர்வுனு முடிவாச்சு. அப்புறம், இதில் அமைக்கப்படும் லைட் உள்ளிட்ட உபகரணங்களையும் நவீனமா மாற்றணும்னு நினைச்சாங்க.

இந்நிலைல பாண்டிச்சேரில 1836ல லைட்ஹவுஸ் வந்தது. இதை கேப்டன் ஸ்மித் என்கிற ஆங்கிலேயர் அமைச்சார். அவர்கிட்ட இங்கயும் லைட்ஹவுஸ் அமைக்கச் சொன்னாங்க. அவர் லண்டன் சென்று புதிய உபகரணங்களோட வந்தார். லைட்ஹவுஸுக்காக இரண்டு மூன்று இடங்கள தேர்வு செஞ்சார்  ஸ்மித். ஆனா, சில காரணங்களால எதுவும் செட்டாகல. அப்ப, எஸ்பிளனேட் பகுதியைக் கவனிச்சார். முன்னாடி அங்கிருந்த கருப்பர் நகரம் பாதுகாப்புக்  காரணங்களால அப்புறப்படுத்தப்பட்டதால அந்த இடம் காலியா இருந்துச்சு. லைட்ஹவுஸுக்கு இது தோதான இடம்னு கருதி அங்க அமைக்க ஸ்மித் முடிவெடுத்தார்.
1841ல இரண்டாவது லைட்ஹவுஸ் கட்ட ஆரம்பிச்சாங்க. கிரேக்க கட்டடக் கலைல வட்டமா  செங்கல் வச்சு தூண் எழுப்பினாங்க. ஆனா, செங்கல் பயன்படுத்தினா உப்புக்காத்தால உருக்குலைஞ்சுடும்னு விமர்சனங்கள் எழுந்துச்சு. இதனால, பில்லர்,  அடிப்பாகம்னு எல்லாத்தையும் பல்லாவரம் கல்குவாரில இருந்து கிரானைட் கற்களைக் கொண்டு வந்து கட்டினாங்க. சுமார் 125 அடி உயரத்துல லைட்ஹவுஸ்  உருவாச்சு. அப்ப, இதுக்கு 75 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. 1844, ஜனவரி 1ம் தேதில இருந்து இந்த லைட்ஹவுஸ் செயல்பட ஆரம்பிச்சது!இங்க 15 ஆர்கன்  விளக்குகள் பயன்படுத்தினாங்க. இது 20 மைல் தூரம் வரை ஒளி கொடுத்துச்சு. கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்கள் இந்த லைட்ஹவுஸ் செயல்பட்டுச்சு...’’ என  விரிவாகச் சொல்கிறார் ஹேம்சந்திரராவ்.

அதன்பிறகு?
இந்த லைட்ஹவுஸ் அருகே இருந்த காலி இடத்தில் 1892ம் வருடம் மெட்ராஸ் ஐகோர்ட் திறக்கப்பட்டது. இந்த ஐகோர்ட் கட்டடத்தின் கோபுரம் லைட்ஹவுஸை  விட உயரமாக, சுமார் 175 அடி உயரம் இருந்தது. இதனால், லைட்ஹவுஸ் தனித்துத் தெரியவில்லை. எனவே, 1894ம் வருடம் லைட்ஹவுஸை ஐகோர்ட் கட்டட  கோபுரத்துக்கு மாற்றினர். இப்படியாக, மூன்றாவது லைட்ஹவுஸ் உருவானது. அப்போது மண்ணெண்ணெய் விளக்கை உபயோகித்தனர். இதன் ஒளி 18 ஆயிரம்  மெழுகுவர்த்தி ஒளிக்கு சமமானது. இதனால், லைட்ஹவுஸுக்காகவே அமைக்கப்பட்ட தூண் பொலிவிழந்தது.

சுமார் 80 ஆண்டுகள் வரை ஐகோர்ட் கோபுரத்தில் மெட்ராஸ்  லைட்ஹவுஸ்  செயல்பட்டு வந்தது. பிறகு, இதற்கென தனிக்கட்டடம் அமைக்க முடிவு  செய்யப்பட்டு மெரினா பீச்சில் கட்டப்பட்டது. 1977ம் வருடம் ஜனவரி 1ம் தேதி நான்காவதாக புதிய லைட்ஹவுஸ் திறக்கப்பட்டது.இன்று சென்னைக்கு வருகிற  யாரும் இந்த லைட்ஹவுஸின் அழகை ரசிக்காமல் ஊர் திரும்புவதில்லை!                        l

- பேராச்சி கண்ணன்
ஆ.வின்ெசன்ட் பால்
ராஜா


இன்று லைட்ஹவுஸ்

*    இந்த முக்கோண வடிவ லைட்ஹவுஸ் 150 அடி உயரமானது.
*    மொத்தம் பத்து மாடிகள் கொண்ட இதில் ஒன்பது மாடிகள் வரை லிஃப்டில் பயணிக்கலாம். இந்தியாவில் லிஃப்ட் வசதி கொண்ட ஒரே  லைட்ஹவுஸும் இதுதான்.
*    பத்து வினாடியில் இரண்டுமுறை ஃப்ளாஷ் அடிக்கும்படி இதிலுள்ள ைலட் அமைப்பு செட் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பல்பில் ஒளிரும் இதன்  வெளிச்சம் சுமார் 28 நாட்டிக்கல் மைல் - அதாவது 50 கிமீ தொலைவு - வரை தெரியும். இரண்டுமுறை ஃப்ளாஷ் என்பது சென்னைக்கான கோட்வேர்டு. அதை  வைத்து இது சென்னை என்பதை மாலுமிகள் கண்டறிவர்.
*    1991ல் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவிலுள்ள அனைத்து லைட்ஹவுஸ்களும் பாதுகாப்புக் கருதி சுற்றுலாவிலிருந்து  விலக்கப்பட்டிருந்தன. பின்னர், 2013ல் மீண்டும் சென்னை லைட்ஹவுஸ் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
* இங்கே பார்வையாளர்களுக்கென ஒரு தொழில்நுட்ப மியூசியமும் பராமரிக்கப்படுகிறது. இதில், மேலே சுழலும் லைட்டின் மாதிரி வடிவம், அந்தக் காலம் முதல்  இப்போது வரை உள்ள விளக்கின் அம்சங்கள், லைட் வகைகள் என அத்தனை விஷயங்களைப் பற்றியும் அறியலாம். தவிர, சென்னை லைட்ஹவுஸ் வரலாறும்  இருக்கிறது.
*    தினமும் காலை 10 முதல் 1 மணி வரையும்; மாலை 3 முதல் 6 மணி வரையும் லைட்ஹவுஸ் திறந்திருக்கும். திங்கள் விடுமுறை.
*    பெரியவர்களுக்கு 20 ரூபாயும், 12 வயதுக்குட்பட்ட குழந்தை
களுக்கு 10 ரூபாயும், கேமராவுக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கின்றனர்.