மிஸ்டர் வேர்ல்டு ஜெயிச்சேன்...



ஆணழகன் தனசேகரின் வெற்றிக் கதை!

கடந்த மாத இறுதியில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற ‘மிஸ்டர் மசில் மேனியா யுனிவர்ஸ் 2018’ போட்டியில் பங்கேற்று உலக சாம்பியன்  பட்டத்தை வென்றுள்ளார் தனசேகர். திருப்பூரில் வசித்து வரும் இந்த யங் பாடி பில்டர், கோவை ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி மாணவர்! ‘‘அப்பா, அம்மா, நான், தங்கைனு அளவான, அழகான குடும்பம். சின்ன வயசுல இருந்தே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடிஸ்ல ஆர்வமா இருப்பேன். அப்பாவும்  அம்மாவும் என் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை ஊக்குவிச்சாங்க. மாவட்ட அளவுல அத்லெடிக் போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கியிருக்கேன்!’’ என்று சொல்லும்  தனசேகருக்கு கல்லூரியில் சேர்ந்ததும் உடற்பயிற்சியில் கவனம் திரும்பியிருக்கிறது.

‘‘தினமும் ஜிம்முக்கு போக ஆரம்பிச்சேன். ஏதோவொரு புள்ளில இதுதான் என் துறைனு மனசுல விதையா விழுந்தது. கடினமா பயிற்சி எடுத்துகிட்டேன்.எங்க வீட்ல யாருமே பாடி பில்டர்ஸ் கிடையாது. ‘இதைத்தான் செய்யணும்... இப்படித்தான் செய்யணும்’னு சொல்லித்தர ஆட்களும் இல்ல. நானா புத்தகங்கள்  படிச்சு, வீடியோஸ் பார்த்து, ஜிம் டிரெய்னர்ஸ்கிட்ட அவங்க அனுபவங்களைக் கேட்டு... என்னை நானே செதுக்கிகிட்டேன். சென்னையைச் சேர்ந்த பிரகாஷ்  நரசிம்மன், பெங்களூர் அருண் பட்டாச்சார்யா. இவங்க ரெண்டு பேரும் ரொம்ப உதவி செய்தாங்க. இவங்களும் பாடி பில்டர்ஸ்தான். சாம்பியன்ஸ்தான்.இப்படி முன்னோடிகளோட அறிவுரை, வழிகாட்டுதல்ல என்ன மாதிரி உணவுகளைச் சாப்பிடணும், எப்படி இருக்கணும்னு எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்.

கல்லூரிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள்ல கிடைச்ச வெற்றிகள் எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.அதுதான் மிஸ்டர் மசில்மேனியா தேசிய சாம்பியன் பட்டம் வரை நான் முன்னேறக் காரணம்...’’ என்று சொல்லும் தனசேகர், சென்ற வருடம் தேசிய  சாம்பியனாகி இருக்கிறார்.‘‘அப்பவே அடுத்து மியாமில நடக்கிற சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிதான்னு முடிவு செஞ்சுட்டேன். என் வொர்க் அவுட் பார்ட்னர்  குல்தீப் சிங் கூட சேர்ந்து ஜிம்முல கடுமையா உழைக்க ஆரம்பிச்சேன்.

ஸ்பான்சர்ஸ் கிடைக்க போராட வேண்டியிருந்தது. ஆனா, மியாமிக்கான பயணச் செலவுல குறிப்பிட்ட அளவை ஏத்துக்க கல்லூரி நிர்வாகம் முன்வந்தது.Supple fitness, Daaki, Alphaarmour போன்ற நிறுவனங்கள் ஊட்டச்சத்து மாத்திரைகள், உணவுகள், உடைகளுக்கு ஸ்பான்சர் கொடுக்க  முன்வந்தாங்க.மத்தபடி கல்லூரி நிர்வாகம் ஏத்துக்கிட்டது போக மீதி பயணச் செலவு, தங்கும் செலவு உட்பட சகலத்தையும் நானே பார்த்துக்க வேண்டியதாகிடுச்சு.  நல்லவேளையா அமெரிக்காவுல என் அக்கா ப்ரியா சுரேஷ் இருந்தாங்க. அவங்க வீட்ல தங்கிகிட்டேன்.  ‘எவ்வளவு செலவானாலும் பார்த்துக்கலாம்... போயிட்டு  வா’னு எங்கப்பா சொன்ன ஒரு வார்த்தைதான் மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. அப்புறம் என் தங்கை. தொடக்கம் முதலே என்மேல அவ்வளவு நம்பிக்கை. எல்லாத்துக்கும் மேல எங்கம்மா. தினசரி அஞ்சாறு வேளைகள் நான் சாப்பிட நாள் கிழமைனு பார்க்காம அசைவம் சமைச்சுக் கொடுத்தாங்க.  நள்ளிரவுலயும் எனக்காக எழுந்து சமைப்பாங்க. அலாரம் வைச்சு என்னை எழுப்பி விடுவாங்க.இவங்க அத்தனை பேரும் சேர்ந்து என்னைக் கைதூக்கி  விட்டதாலதான் இந்த வெற்றி சாத்தியமாச்சி...’’ நெகிழ்கிறார் இந்த மிஸ்டர் யுனிவர்ஸ்!

- இளங்கோ கிருஷ்ணன்