ஜிப்ஸி ஃபேஷன்



நாடோடி வாழ்க்கை; எங்கெல்லாம் போக வேண்டும், பயணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ அங்கெல்லாம், அப்படியெல்லாம் மனம் போன போக்கில்  சென்றுகொண்டே இருக்கும் வாழ்க்கைதான் ஜிப்ஸி!பெருகி வரும் இயந்திர வாழ்க்கை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள் எனத் தடுமாறும் இந்தத் தலைமுறையினருக்கு இப்போது வருடத்துக்கு 10 நாட்களாவது தங்களுக்கென்று ஒதுக்கி கவலை மறந்து பயணம் செய்ய வேண்டும்... இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

இதில் ‘இந்த’ வாழ்க்கை மட்டுமல்ல... இப்போதிருக்கும் ஃபேஷன் டிரெண்டும் அடக்கம்! யெஸ். பக்கா கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ், மேக்கப், உடைகள், நகைகள் என அனைத்தும் இப்போது வந்துவிட்டது, ‘ஜிப்ஸி ஃபேஷன்’ என்ற பெயரில்! ‘‘ரோமானியர்களைத்தான் ஜிப்ஸிகள்னு சொல்வோம். இந்த ஃபேஷன் கூட அங்கிருந்து வந்ததுதான்...’’ என ஆரம்பிக்கிறார் ஃபேஷன் டிசைனர் ஏகாம்பரம்.‘‘இது நாட்டுக்கு நாடு ஒவ்வொரு விதமா மாறியிருக்கும். அரேபிய நாடுகள்ல நடனக் கலைஞர்கள்தான் ஜிப்ஸி ஃபேஷனைப் பயன்படுத்துவாங்க. முக்கியமா பெல்லி டான்ஸ் ஆடும் பெண்களும் ஆண்களும்!அதே ஐரோப்பிய நாடுகள்னா லூசான பேண்ட், பஃப் வைச்ச ஷர்ட், ‘வி’ நெக், ஷேக்ஸ்பியர் நாடகங்கள்ல வர்ற நடிகர்கள் மாதிரி காஸ்ட்யூம்ஸ் உடுத்தியிருப்பாங்க.அதுவே இந்தியா மாதிரியான ஆசிய நாடுகள்ல பழங்குடி மக்களுடைய உடைகள், நகைகளை பயன்படுத்துவாங்க.அதாவது இதைத்தான் நாங்க ஜிப்ஸி ஃபேஷனுக்கு ஃபாலோ பண்றோம்...’’ என்ற ஏகாம்பரம், உடைகளுக்கு எந்த ரூல்ஸும் இதில் கிடையாது என்கிறார்.

‘‘இடத்துக்கும் நம்ம வசதிக்கும் தகுந்த மாதிரி கேஷுவல்ஸ் கூட மேட்ச் செய்றோம். குஜராத், ராஜஸ்தான் பாணி உடைகளை ஜிப்ஸி ஸ்டைலா அணியறதும்  உண்டு. சிலர், ஜீன்ஸ் மேல எம்பிராய்டரி டாப் அல்லது ஃப்ளேர் டாப்; ரேப் அரவுண்ட் ஸ்கர்ட்; பசங்க ஜானி டெப் ஸ்டைல்னு போட்டுக்க விரும்பறாங்க.க்ளாமர் தூக்கலா தெரிய இந்தியப் படங்கள்ல பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஜிப்ஸி உடைகளை அணியறாங்க! என்ன... இந்திய ஜிப்ஸில அரேபிய /  ஐரோப்பிய ஜிப்ஸி உடைகளைக் கலப்போம்! எந்த உடையா இருந்தாலும் தலைல பந்தனான்னு சொல்ற ஸ்கார்ஃப் சேர்த்து வரும். சிலர் எலும்பு மண்டை, டேஞ்சர் சிம்பல் மாதிரி ஸ்கார்ஃப் பயன்படுத்துவாங்க.
 
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... கவுபாய் ஸ்டைலும் ஜிப்ஸி ஃபேஷன்ல அடங்கும்!’’ என ஏகாமபரம் முடிக்க, ஜிப்ஸி ஃபேஷனுக்கு எப்படி மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டும் என விவரித்தார் மேக்கப் கலைஞர் இளங்கேஸ்வரி ‘‘டஸ்கிதான் ஜிப்ஸில முக்கியம். பொதுவா பயணம் போறவங்க முகம் வெயில் பட்டுப் பட்டு கருத்திருக்கும். இதையேதான் ஜிப்ஸி மேக்கப்பாகப் போடறோம். இயற்கையாவே டஸ்கி ஸ்கின் கொண்டவங்களுக்கு டஸ்கி மேக்கப் தேவையில்லை. கொஞ்சம் சிவப்பு நிறமுள்ளவங்க, அவங்க ஸ்கின் கலரை விட ஒரு டோன் டார்க் கலர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தணும். அதுக்கு முன்னாடி கிளென்சர் யூஸ் பண்ணிட்டு, மாய்ஸ்சர் கிரீம் போட்டு அதுக்கு மேல ஜெல் பிரைமர் பயன்படுத்தணும்.அப்பறம் ஃபவுண்டேஷன் போட்டு அதன்மேல அதே கலர் பவுடரை டப் பண்ணிக்கணும். கன்னத்தை ஹைலைட் பண்ண கொஞ்சம் கலர்ஃபுல் ப்ளஷ் பயன்படுத்தணும். என்ன காஸ்ட்யூமோ அல்லது என்ன பந்தனா கட்டுறோமோ அந்தக் கலர்ல ஐ ஷேடோ பயன்படுத்தணும்.

ஐ மேக்கப் ஹைலைட் பண்றீங்கன்னா பீச் கலர் அல்லது பேல் கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கலாம். சாதாரண ஐ மேக்கப்னா நல்ல பிரைட் கலர் லிப்ஸ்டிக்  பயன்படுத்தணும். ரெண்டுக்கும் நடுவுல ஷட்டில் கலர் லிப்ஸ்டிக் கூடாது. தலைமுடியை நல்லா கர்லிங் பண்ணி ரஃப் ஃபினிஷ் கொடுக்கணும். மொத்தத்துல தனித்தன்மைதான் ஜிப்ஸி மேக்கப் ஸ்டைல். பளிச்னு தெரியணும். அதை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டாலே போதும்!’’ என்கிறார் இளங்கேஸ்வரி.         

-ஷாலினி நியூட்டன்