தாயான முதல் மேற்கத்திய பிரதமர்!



ம்ஹும். ஒரு நாட்டை ஆளும் பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் என்றுதான் தலைப்பை புரிந்து கொள்ள வேண்டும்!  மட்டுமல்ல; ஒரு கட்சியின் தலைவி. மிக இளம் வயதில் பிரதமரானவர்... என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.  37 வயதான இவர், கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் 40வது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.ஜூன் 21, 2018 அன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து Neve Te Aroha Ardern Gayford என்று பெயர் சூட்டியிருக்கிறார். ‘Neve’ என்றால் ‘கடல் கடவுளின் மகள்’ என்றும், ‘Aroha’ என்றால் ‘அன்பு’ என்றும் அர்த்தம்.

இத்தனைக்கும் ஜெசிந்தா திருமணமாகாதவர்! ஆம்; அந்தக் குழந்தைக்குத் தந்தையான கிளார்க் ஹேஃபோர்டு அவரது பார்ட்னர் மட்டுமே!இருபது வருடங்களுக்கு முன் ஹெலன் கிளார்க் நியூசிலாந்தின் பிரதமராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியைத் தொடங்கிய  ஜெசிந்தா, இன்றைக்கு அதே அலுவலகத்தில் பிரதமராக உயர்ந்து நிற்கிறார்.விஷயம் இதுவல்ல. தாயான பிறகு ஜெசிந்தா அறிவித்திருக்கும் அதிரடியான சலுகைகள்தான் இப்போது நியூசிலாந்தில் ஹாட் டாக். இதற்காக 500 கோடி நியூசிலாந்து டாலரை ஒதுக்கியிருக்கிறார். புதிதாகப் பிறக்கும் குழந்தையின் ஆரம்ப நாட்களின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறையை 18 வாரத்திலிருந்து 22 வாரமாக அதிகப்படுத்தியிருக்கிறார்.

ஜூலை 1-க்குப் பிறகு பிறக்கும் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை வாரம் தோறும் 60 டாலர் ஊக்கத்தொகை. ஏழ்மையான அல்லது நடுத்தரக் குடும்பத்தில்  பிறக்கும் குழந்தை என்றால் மூன்று வயதாகும் வரை இத்தொகை வழங்கப்படும். இதுபோக குளிர்காலத்தில் 700 டாலர் போனஸ் என்று அள்ளிக்கொடுத்திருக்கிறார். 2020க்குள் 64,000 குழந்தைகளை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதே அவரது முக்கிய நோக்கம்.ஆனால், மகப்பேறு விடுப்பாக வெறும் ஆறு வாரங்கள் மட்டுமே ஜெசிந்தா எடுத்திருக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் அலுவலகத்துக்குச் சென்று நாட்டைக் கவனிக்கப் போகிறார். அப்போது வீட்டையும், குழந்தையையும் பார்த்துக்கொள்ளப் போகிறவர் அவரது பார்ட்னரான கிளார்க்இதற்காக தொலைக்காட்சி சேனலில், தான் பார்த்துவந்த உயரிய வேலையை கிளார்க் விடப்போகிறார் என்பதுதான் இதில் ஹைலைட்!

- த.சக்திவேல்